பள்ளிகள் திறப்பு: பாதுகாப்புக்கான வழிகள்

பள்ளிகள் திறப்பு: பாதுகாப்புக்கான வழிகள்
Updated on
1 min read

கோடை விடுமுறை முடிந்து பள்ளி-கல்லூரிகள் திறக்கப்படும் சூழலில் பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள் ஆகியவற்றில் பொது சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது அவசியமானதாகும். இவை விபத்துகள், நோய்த் தொற்றுகளைத் தடுப்பதுடன் மாணவர்களும் ஆசிரியர்களும் அதிக நேரம் செலவிடும் இவ்விடங்களில் சுமுகமான சூழலை ஏற்படுத்திக் கற்றலை இனிமையாக்கும். அரசுக் கல்வித் துறை மட்டுமின்றி, சமூக அமைப்புகள், பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளும் இதற்கான முயற்சிகளை எடுப்பது நலம்.

பள்ளி-கல்லூரிக் கட்டிடங்களின் உறுதித்தன்மையை உள்ளாட்சித் துறைப் பொறியாளர்கள் உதவியுடன் கண்டறிய வேண்டும். உறுதித்தன்மையற்ற கட்டிடங்கள் அகற்றப்படுவது முக்கியம். சுற்றுப்புறத்தை நன்கு ஆய்வுசெய்து பாம்பு, தேள், எலி போன்ற உயிரினங்கள் இல்லை என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். தேன்கூடுகள் அகற்றப்பட வேண்டும். சுற்றுப்புறங்களில் நாய்கள், ஆடு-மாடுகளின் நடமாட்டம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேல்நிலை நீர்த்தொட்டிகள், கீழ்நிலை நீர்த்தொட்டிகள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். காற்று புகாவண்ணம் மூடிகளைக் கொண்டு அவற்றை மூட வேண்டும். இது கொசுக்கள் உற்பத்தியாவதையும் பறவைகள், எலிகளின் எச்சங்கள், காற்றில் அடித்துவரப்படும் குப்பை போன்றவை அவற்றில் கலப்பதையும் தடுக்கும். கழிவுநீர்த்தொட்டிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளியின் கதவுகள், சுற்றுச்சுவர், வேலிகள் மாணவர்களுக்குக் காயம் ஏற்படுத்திவிடாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும்.

கழிப்பறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு, அவற்றின் கதவுகள் சரிபார்க்கப்பட வேண்டும். கை-கால் கழுவ ஏற்ற வசதிகள், திரவ சோப்பு, கை துடைப்பான்கள் வைக்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஏற்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும். வடிகட்டிகளுடன் கூடிய பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வசதிகள் அவசியம். சுவிட்சுகள், மின்விசிறிகள், மின்தூக்கிகள் உள்ளிட்ட மின்சாதனங்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, அதுகுறித்த அறிக்கை பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

முதலுதவிப் பெட்டிகள் மருந்து, உபகரணங்களுடன் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப நிறுவப்பட வேண்டும். இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையத்தால் (FSSA) அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளை மட்டுமே சிற்றுண்டி மையங்கள் வழங்க வேண்டும். விளையாட்டுச் சாதனங்கள் துருப்பிடிக்காமல், சேதமடையாமல் இருக்கின்றனவா என்பதை உறுதிசெய்வது முக்கியம்.

பள்ளி அருகில் உள்ள மதுக் கடைகள், புகையிலைப் பொருள்கள் விற்கும் கடைகள், தூய்மையற்ற உணவுகள் விற்கப்படும் கடைகள் அகற்றப்பட வேண்டும். பள்ளி ஊர்திகள் பழுதுநீக்கப்பட்டுப் பாதுகாப்பான முறையில் இருக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in