Last Updated : 04 Jun, 2023 07:36 AM

 

Published : 04 Jun 2023 07:36 AM
Last Updated : 04 Jun 2023 07:36 AM

ஆடம் ஸ்மித்: எழுதி முடிக்காத புத்தகம்?

பள்ளி மாணவர்களுக்கும் பரிச்சயமான பெயர், ஆடம் ஸ்மித் [Adam Smith 1723 - 1790]. அவர் எழுதி 1776இல் வெளிவந்த ‘நாடுகளின் செல்வ இயல்பையும் காரணங்களையும் பற்றிய ஆராய்ச்சி’ [An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations] உலகப் புகழ்பெற்ற புத்தகங்களில் ஒன்று; இப்புத்தகம் ‘நாடுகளின் செல்வம்’ என்றும் பரவலாக அறியப்படுகிறது. அரசின் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி சந்தை தன்போக்கில் தனித்து இயங்க வேண்டும் என்ற மூலதன வேட்கைக்குக் கருத்தாக்கக் கவசத்தை வழங்கிய நூல் இது.

செல்வத்தின் பிறப்பிடம் விவசாயமா, வாணிபமா என்று இயற்கைவாதிகளுக்கும் வணிகவாதிகளுக்கும் இடையே விவாதங்கள் நடந்துகொண்டிருந்த காலத்தில், அவை இரண்டையும் மறுத்து உழைப்பே செல்வத்தின் பிறப்பிடம் என்று கூறியவர் ஆடம் ஸ்மித். உழைப்புக்கு அவர் அளித்த முக்கியத்துவம், அது குறித்த விவாதங்களுக்கு முன்னோடியாக அமைந்தது. ஒரே வேலையைத் தொழிலாளர்கள் பலரும் தனித்தனிப் பகுதியாகப் பகுத்துக்கொண்டு நிறைவேற்றுகையில், உற்பத்தி அதிகரிக்கும் என்ற வேலைப் பகுப்புக் கோட்பாட்டுக்கு அவர் சொன்ன குண்டூசி உதாரணம் இன்றைக்கும் பிரபலமாக இருக்கிறது. நாடுகளின் எல்லைகளைத் தாண்டிய தடையற்ற வணிகம், வரிக் கொள்கைகள் என்று அவரது நூலின் தாக்கம் அரசுகளின் பொருளியல் முடிவுகள் பலவற்றையும் வழிநடத்திக்கொண்டிருக்கிறது.

அந்தமாய்.. ஆதியாய்..

பொருளியல் சார்ந்து அதற்கு முன்பு நடந்துகொண்டிருந்த விவாதங்களின் சாரங்களை யெல்லாம் உட்கிரகித்து, அவற்றைத் தனது புத்தகத்தில் தொகுத்தளித்தவர் ஆடம் ஸ்மித். அவருக்குப் பின்பு இன்று வரை தொடரும் விவாதங்கள் பலவற்றுக்கான தொடக்கப் புள்ளிகளையும் அப்புத்தகம் நெடுக விதைத்திருக்கிறார். பொருளியல் சார்ந்து எத்தனைப் புத்தகங்கள் வெளிவந்தாலும், ‘நாடுகளின் செல்வம்’ இன்றும் தனது செவ்வியல் தன்மையைத் தக்கவைத்துக்கொண்டிருப்பது அதனால்தான்.

பொருளியலின் தந்தையாக நினைவுகூரப்படும் ஆடம் ஸ்மித், பொருளியலாளர் மட்டுமல்ல; மெய்யியலாளரும்கூட. ‘நாடுகளின் செல்வம்’ நூலைப் போலவே அவரது ‘அறநெறி உணர்வுகளின் கோட்பாடு’ புத்தகமும் முக்கியமானது. சட்டவியல் குறித்து அவர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவரை மிகச்சிறந்த சட்ட நெறியாளராகவும் எடுத்துக்காட்டுகின்றன.

சட்ட நெறியாளர்

சட்ட நெறிகள் அறநெறிகளையே அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் இரண்டும் தனித்துவம் கொண்ட அறிவுத் துறைகளாகவே இயங்குகின்றன. அறநெறிகள் குறித்த ஆய்வை அடுத்து, சட்ட நெறிகள் குறித்தும் ஆடம் ஸ்மித் எழுதத் திட்டமிட்டிருந்தார். ‘நாடுகளின் செல்வம்’ புத்தகத்துக்கு முன்பே வெளியான புத்தகம், ‘அறநெறி உணர்வுகளின் கோட்பாடு’ [The Theory of Moral Sentiments]. அந்நூலின் இறுதியில் அதன் அடுத்த பகுதியாக ‘சட்டம் மற்றும் ஆட்சிமுறை’ குறித்து எழுதவிருப்பதாக அவர் அறிவித்திருந்தார். அவரது வாழ்நாளிலேயே அந்நூல் ஆறு முறை மறுபதிப்புகளைக் கண்டது. அனைத்துப் பதிப்புகளிலுமே அந்த வாக்கியங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனாலும், சட்டநெறி குறித்த அவரது புத்தகம் வெளியாகவில்லை.

ஏறக்குறைய முப்பதாண்டு காலம் புத்தகத்துக்கான அறிவிப்புடனேயே அத்திட்டம் முற்றுப்பெற்றுவிட்டது. அந்தப் புத்தகத்துக்காக எழுதி வைத்திருந்த குறிப்புகளைத் தான் மரணமடைவதற்குச் சில நாள்களுக்கு முன்பு தீயிலிட்டு அழித்துவிட்டார். எனினும், பல்கலைக்கழக மாணவர்களிடம் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளிலிருந்து சட்டநெறிகள் குறித்த அவரது பார்வைகள் அறியக் கிடைக்கின்றன.

பொது உரிமைகளும் சொத்துரிமையும்

சட்டநெறிகள் குறித்த தமது சொற்பொழிவுகளில், சட்ட உரிமைகளை மூன்று வகையாக விளக்கியுள்ளார் ஆடம் ஸ்மித். ஒரு தனிமனிதராக ஒருவருக்கு உள்ள உரிமை, குடும்ப உறுப்பினராக அவருக்கு உள்ள உரிமை, அரசின் ஓர் அங்கத்தினராக அவரது உரிமை. இந்த வகைப்பாடானது சட்ட உரிமைகள் குறித்து மேலும் தெளிவை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளது.

சொத்துரிமையின் மரபார்ந்த அடிப்படைகள் என்று தொழில்முறைப்படி பெறுவது, அதிகாரத்தின்வழி பெறுவது, வகுத்துரைக்கப்பட்டவாறு பெறுவது, வாரிசுரிமையின்படி பெறுவது, வழக்கநெறிகளின்படி பெறுவது என்று ஐந்து கோட்பாடுகளையும் அவர் அடையாளம் காட்டியுள்ளார். பொது உரிமைகள், சொத்துரிமைகளின் தன்மை காலந்தோறும் மாறுவதை வேட்டைச் சமூகம், ஆநிரைச் சமூகம், வேளாண்மைச் சமூகம், வணிகச் சமூகம் என்று சமூக வரலாற்றை நான்கு கட்டங்களாகப் பிரித்து, அக்காலகட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்களின் வழி எடுத்துக்காட்டியுள்ளார்.

உதாரணத்துக்கு, வேட்டைச் சமூகத்தில் உரிமையாகக் கொள்ளத்தக்க பொருள்களின் எண்ணிக்கை வெறும் சொற்பமான எண்ணிக்கையிலேயே இருந்திருக்க முடியும். எனவே, அக்காலத்தில் தொழில்முறையின்படி சொத்துரிமை பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். ஆநிரைச் சமூகத்தில், கால்நடைகளே முதன்மையான சொத்துகள். அக்கட்டத்தில், சொத்துரிமையின் சமத்துவமின்மை உருவாகியிருக்கும். எனவே, அதிகாரத்தின்வழி சொத் துரிமையைப் பெறுகின்ற வழக்கமும் தொடங்கியிருக்கும். வேளாண்மைச் சமூகத்தில் நிலம் முதன்மை பெறுவதால், சொத்துரிமைக்கான தேவை உச்சம் பெற்ற காலமாக அதைக் கொள்ளலாம் என்பது அவர் முடிவு.

ஆச்சரியமான கேள்வி

ஆடம் ஸ்மித்தின் சட்டவியல் சொற்பொழிவுகளில் அரசின் வரி வருமானங்கள் குறித்தும் பேசியிருக்கிறார். சொத்துகளின் மீது வரிவிதிப்பு, நுகர்வின் மீது வரிவிதிப்பு ஆகிய இரண்டும் அரசின் முக்கியமான வரி வருமானங்கள் என்று அவர் குறிப்பிடுகிறார். இன்னும் குடும்ப அமைப்புமுறை, நாட்டின் பாதுகாப்பு என்று பல்வேறு கோணங்களில் அவர் சட்டவியலை அணுகியுள்ளார். சட்டநெறிகள் குறித்து இவ்வளவு விரிவாகப் பேசியுள்ள ஆடம் ஸ்மித், தாம் அறிவித்தபடி சட்டம் - ஆட்சிமுறை குறித்த நூலை ஏன் எழுதி முடிக்கவில்லை என்பது ஆச்சரியமளிக்கும் ஒரு கேள்விதான்.

தன் வாழ்நாளில் ‘நாடுகளின் செல்வம்’ புத்தகத்தை முற்றிலும் திருத்தி நான்கு மறுபதிப்புகளை வெளியிட்டவர் அவர். ‘அறநெறி உணர்வுகளின் கோட்பாடு’ புத்தகத்தின் ஆறு பதிப்புகளும் அது போலவே முழுமையாகத் திருத்தியமைக்கப்பட்டு வெளியிடப்பட்டவைதான். புத்தகங்களை எழுதிக் குவிக்காமல் எழுதிய இரண்டு புத்தகங்களை மீண்டும் மீண்டும் செப்பனிடுவதிலேயே அவர் வாழ்நாளைச் செலவிட்டது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். சட்டம் சார்ந்த தமது பார்வை, ‘நாடுகளின் செல்வம்’ புத்தகத்தின் இறுதிப் பகுதியில் வெளிப்பட்டுவிட்டதாகவும் அவர் எண்ணியிருக்கலாம். ஆனாலும், சட்டநெறி குறித்த ஆய்வுப் புலங்களில் அவரது பெயர் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. பொருளியலாளராக மட்டுமல்ல, மெய்யியலாளராகவும் சட்ட நெறியாளராகவும்கூட ஆடம்ஸ்மித்தின் பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

(ஜூன் 5: ஆடம் ஸ்மித் பிறந்தநாள்)

- செ.இளவேனில்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x