

படைப்பாளிகள், சாதாரண மனிதர்களிட மிருந்து சற்று வேறுபட்டவர்கள்தாம். ஒரு விஷயத்தைச் சாதாரணமான ஒருவர் பார்ப்பதற்கும், எழுத்தாளர் ஒருவர் பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு. ஆனால், இந்த ‘வித்தியாசமான எழுத்தாளர்கள்’ எழுதும்போது சாதாரணமானவரைப் போல் பேனா பிடித்துத்தான் எழுதுவார்கள் எனக் கிண்டல் கேள்வி நமக்குள் எழலாம். உண்மையில், எழுத்தாளர்கள் சிலர் எழுதுவதிலும் சில விநோதப் பழக்கங்களை வைத்துத்தான் இருந்திருக்கிறார்கள்.
l ஜேம்ஸ் ஜாய்ஸ்
அயர்லாந்து எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸ் தமிழிலும் கவனம் பெற்றவர். அவரது ‘டப்ளின் நகரத்தார்’ நாவல் தமிழில் வெளியாகியுள்ளது. அவரது சிறுகதைகளும் கூடத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் குப்புறப்படுத்துக்கொண்டு எழுதும் விநோதப் பழக்கம் உள்ளவராம். ‘ஃபினகன்வே’ என்கிற நாவல் முழுவதையும் இப்படித்தான் எழுதி முடித்தாராம்.
l விளாமிதிர் நபகோவ்
ரஷ்ய, ஆங்கில எழுத்தாளரான விளாமிதிர் நபகோவ், ‘லோலிதா’ நாவல் உலகம் முழுக்கப் பரவலாகப் பேசப்பட்ட நூல். இந்தக் கதை திரைப்படங்களாக வெவ்வேறு மொழிகளில் உருவாகவும் ஆதாரமாக இருந்தது. இவர் வண்ணத்துப்பூச்சிகளைத் தேடி அட்டவணைப்படுத்தியதன்வழி பூச்சியியலுக்குக் கணிசமான பங்களிப்பை நல்கியுள்ளார். நபகோவ், குறிப்பெடுப்பதற்கான காகிதங்களில்தான் கதைகளை எழுதுவாராம். தூங்கும்போதுகூடத் தலையணைக்கு அடியில் காகிதங்களை வைத்திருப்பாராம். இப்படி எழுதும் இந்தக் காகிதங்களைச் சேகரிப்பதற்கு ஒரு பெட்டியும் அவரிடம் உண்டாம். பிறகுதான் அந்தக் காகிதங்களை எடுத்துக் கதையாகக் கோப்பாராம்.
l பால்சாக்
பிரெஞ்சு எழுத்தாளர் பால்சாக்கின் புகழ்பெற்ற நாவல்கள் சில தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தந்தை கோரியோ’, ‘புத்துயிர் அமிர்தம்’ ஆகிய நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால், அவர் மொத்தம் 47 நாவல்களை எழுதியிருக்கிறார். குறுநாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள் எல்லாம் தனிக் கணக்கு. காபி குடிக்கும் பழக்கம்தான் இதற்கெல்லாம் காரணமாம். ஒரு நாளைக்கு 50 கோப்பைகள் வரை குடித்துத் தீர்ப்பாராம்.
l மார்க்கேஸ்
தமிழில் அதிகத் தாக்கம் உண்டாக்கியவர் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். இவரது ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’, ‘முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ நாவல்கள் உள்பட சிறுகதைகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மார்க்கேஸ் கதைகள் எழுதுவதற்கு முன்பு செய்தித்தாள் படிப்பாராம். அதற்குப் பிறகுதான் எழுதத் தொடங்குவாராம். செய்திக்காக மட்டும் அவர் அதைப் படிப்பதில்லை. அந்த வாசிப்பிலிருந்து ஏதோ ஒருவிதத்தில் அவர் கதைகள் தூண்டப்பெறுமாம்; அவர் பத்திரிகையாளரும்கூட.
l மாயா ஏஞ்சலோ
மாயா ஏஞ்சலோ புகழ்பெற்ற அமெரிக்கப் பெண் எழுத்தாளர். இவரது புகழ்பெற்ற சுயசரிதை நூலான ‘கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது?’ தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கறுப்பின மக்களுக்கான உரிமைக் குரலாகச் செயல்பட்டுவருகிறார். இவர் எழுதும் கிழமைகளில் காலையில் 6 மணிக்கு ஒரு அகராதி, சொற்களஞ்சியம், செர்ரி குடுவை, பைபிள், எழுதுவதற்கான ஏடு ஆகியவற்றுடன் ஒரு எளிய விடுதி அறைக்குச் சென்றுவிடுவாராம். அந்த விடுதி அறையில் சுவரில் இருக்கும் ஒளிப்படம், ஓவியம் போன்ற எல்லாவற்றையும் கழற்றச் சொல்லிவிட்டு அறையை அடைத்துக்கொண்டு இரண்டு மணி வரை எழுதுவாராம்.
l வர்ஜீனியா வூல்ஃப்
தமிழில் அதிகம் பேசப்பட்ட பெண்ணிய எழுத்தாளர் வர்ஜீனியா வூல்ஃப். நினைவின் விவரிப்பாக எழுதப்பட்ட ‘மிஸஸ் டாலோவே’ அவரது புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று. ஓவியர்களைப் போல் நின்றபடி எழுதும் விநோதப் பழக்கம் கொண்டவராம் இவர். அதற்காகப் பிரத்யேக மேசையை வாங்கிவைத் திருந்தாராம். எழுதி முடித்த பிறகு தன் படைப்பை ஓவியர்களைப் போல் விலகி நின்று மதிப்பிடுவாராம்.