எழுத்தாளர் ஆனேன் | பாதை மாற்றிய முதல் கதை - பெருமாள் முருகன்

எழுத்தாளர் ஆனேன் | பாதை மாற்றிய முதல் கதை - பெருமாள் முருகன்
Updated on
2 min read

பள்ளி நாள்களில் மரபுக்கவிதை எழுதிக்கொண்டிருந்தேன். யாப்பிலக்கணம் தெரியாது. பாட நூல்களில் இருக்கும் செய்யுள் வடிவங்களை மனதில் ஏற்றிக்கொண்டு அவற்றைப் போலவே எழுதிப் பார்ப்பேன். போலச் செய்தல் என்பதுதான் கலையின் அடிப்படை. நான் போலச் செய்யவில்லை. போலி செய்தேன். சொற்கள் என்னுடையவை. ஓசை ஓரளவு ஒத்து வரும். அதற்கே கவிஞன் என்னும் அடையாளம் கிடைத்துவிட்டது.

பள்ளி சார்பாகக் கவிதைப் போட்டிகளில் பங்கேற்றேன். பரிசுகளும் பாராட்டுகளும் கிடைத்தன. போட்டிகளில் புதுக்கவிதைகள் பெரிதும் எடுபடுவதைக் கண்டு அதற்கு மாறினேன். இளங்கலைப் பட்டம் பயின்ற காலத்தில் கல்லூரி சார்பாகப் பல கவிதைப் போட்டிகளுக்குச் சென்றேன். ‘கல்லூரிக் கவிஞர்’ என்னும் பெருமைமிகு ‘பட்டம்’ கிடைத்தது.

சிறுகதைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் இருந்தாலும் கவிதையை விட்டுவிட்டு அதில் முழுமையாக ஈடுபடவில்லை. மேடைகளும் கைத்தட்டல்களும் கவிதை யிலேயே என்னை இருத்தின. முதுகலை பயில்வதற்குக் கோயம்புத்தூர், பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கேயிருந்த தமிழ்த் துறைச் சூழலும் என் வயது முதிர்வும் தொடர் வாசிப்பும் கவியரங்க மாயையில் இருந்து விடுபட உதவின. ஆரவாரம் இலக்கியத்துக்கு ஆகாது என்று தோன்றியது. ஆழமும் அமைதியும் கொண்ட பொய்கை எனச் சிறுகதை வடிவம் மனதில் படிந்தது. தீவிரமாகச் சிறுகதை எழுதத் தொடங்கினேன்.

அப்போது நான் எழுதிய கதைகள் எல்லாம் மிகவும் சிறியவை. ஒரேயொரு சிறு சம்பவத்தை எடுத்து விவரிப்பது என் பாணி. அக்காலத்தில் கலைக் கல்லூரிகளில் மாணவர் பேரவை இருந்தது. தேர்தல் மூலம் தலைவர், செயலர் தேர்ந்தெடுக்கப்படுவர். மாணவர் தரப்புக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் எல்லாம் நடைபெறும். மாணவர் பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் செல்வாக்கும் மிகுந்திருக்கும். போராட்டங்கள் மிகும்போது உணர்வு மழுங்கிச் சடங்குத்தன்மை வந்துவிடும்.

1980களில் அந்த நிலைதான் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகும். அதைப் பார்க்கச் செல்ல வேண்டும் என்பதற்காகக் கல்லூரி வேலைநிறுத்தம் நடைபெறும். உணவகத்தில் சாப்பாடு சரியில்லை, கல்லூரிக்கு முன்னால் வேகத்தடை இல்லை என்பன போன்ற சாதாரண காரணங்கள் சொல்லப்படும். இறுதி ஆண்டு பயிலும் மாணவர் தலைவர் இதில் அவ்வளவாக ஈடுபாடு காட்ட மாட்டார். இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் செயலர் முன்னிற்பார். அடுத்த ஆண்டு தேர்தலில் போட்டியிட்டுத் தலைவராக வேண்டும் அல்லவா?

திரைப்படம் வெளியானால் மட்டுமல்ல... தம் ஆதர்ச நடிகர், நடிகையரின் பிறந்த நாள்களிலும் வேலைநிறுத்தம் உண்டு. தம் காதலியின் பிறந்த நாளைக் கொண்டாட வேலைநிறுத்தம் செய்தார் ஒரு செயலர். காரணம் முக்கியத்துவம் இழந்து, வேலைநிறுத்தம் என்றால் கல்லூரி விடுமுறை எனவாயிற்று. இதை வைத்துச் சிறுகதை ஒன்று எழுதினேன். தலைப்பு ‘ஸ்ட்ரைக்.’ கல்லூரி ஆண்டு மலரில் அக்கதை வெளியாயிற்று. அச்சேறிய என் முதல் கதை அதுதான்.

கல்லூரி முதலாண்டு சேர்ந்த மாணவன் ஒருவன் சற்றுத் தாமதமாகக் கல்லூரிக்கு வந்து சேர்கிறான். வேலைநிறுத்தம் என்பதால் மாணவர்கள் சாலையில் நிற்கிறார்கள். பலர் புறப்பட்டு வீட்டுக்கோ திரைப்படத்திற்கோ செல்கிறார்கள். கடைகளில் நின்று குழுவாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தனக்குத் தெரிந்தவர்களிடம் போய் ‘எதுக்காக இன்னைக்கு ஸ்ட்ரைக்?’ என்று அவன் கேட்கிறான். ஒருவருக்கும் காரணம் தெரியவில்லை. ‘யாருக்குத் தெரியும்?’ என்று விட்டேத்தியான பதிலே வருகிறது. அவன் கிறுக்கனைப் போல நிற்கிறான். இதுதான் கதை.

அது கைபேசிக் காலமல்ல. விடுதி மாணவர்கள் மாலையிலும் இரவிலும் குழுவாகச் சேர்ந்து உட்கார்ந்து எதையாவது பேசுவோம்; விவாதிப்போம். அப்படியான பேச்சு ஒன்றில் என் கதை விவாதத்துக்கு வந்தது. ‘தகவல் தொடர்பியல்’ பயின்றுகொண்டிருந்த நண்பன் கே.எம்.சந்திரசேகரன் (பின்னர் பத்திரிகையாளன் ஆனான். கடந்த ஆண்டு எதிர்பாராத விதமாக இயற்கை எய்தினான்) ‘கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதரவான கதை இது. அதனாலதான் வெளியிட்டுட்டாங்க. இதே நீ ஸ்ட்ரைக்க ஆதரிச்சு எழுதியிருந்தீனா வந்திருக்குமா?’ என்றான். மாணவர்கள் பலர் அப்படிக் கருதுகின்றனர் என்பதை அப்போதுதான் அறிந்தேன்.

‘மாணவர் ஸ்ட்ரைக் இன்னிக்குப் பொருளிழந்து போயிடுச்சே. அதப் பேசக் கூடாதா?’ என்றேன். ‘எதப் பேசறோங்கிறது முக்கியம்தான். எப்பப் பேசறோம், எங்க பேசறோங்கிறதும் முக்கியம்’ என்றான் அவன். இரண்டு பிரிவானோம். ‘நமக்குக் கெடைக்கற எடத்துலதான நாம பேச முடியும்?’ என்றொரு கருத்து. நமக்கு எதிரான இடத்தில் வாய்ப்புக் கிடைக்கிறது என்றால், அங்கே போய் நம்மை நாமே இழிவுபடுத்திப் பேசலாமா என்று பதில். உள்ளதைப் பேசுவது இழிவாகுமா? உள்ளது என்றாலும் எதிரியிடம் பேசினால் காட்டிக்கொடுப்பது அல்லவா?

இப்படிக் காரசாரமாகப் போய்க்கொண்டிருந்த விவாதத்தை இடைமறித்துக் ‘கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு எதிரானதா?’ என்று ஒருவர் கேட்டார். விவாதம் திசை மாறியது. அச்சேறிய என் முதல் கதையே இப்படிப் பேசுபொருளானது. என்னையும் பல கோணங்களில் சிந்திக்க வைத்து என் பாதையை வகுத்துக்கொள்ள உதவியது.

- பெருமாள் முருகன்
பேராசிரியர், எழுத்தாளர்
தொடர்புக்கு: murugutcd@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in