Published : 06 Oct 2017 09:29 AM
Last Updated : 06 Oct 2017 09:29 AM

விவிபாட் வாக்குப்பதிவு முறை: செலவு பிடிக்கும் அநாவசிய முயற்சி

கு

ஜராத் சட்ட மன்றத் தேர்தலின்போது தாங்கள் பதிவு செய்யும் வாக்குகள் சரியாக விழுகின்றனவா என்று வாக்காளர்களே சரிபார்த்துக்கொள்ள காகிதத்தாளுடன் இணைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (விவிபாட்) பயன்படுத்தப்படவுள்ளன. மாநிலத்தின் அனைத்து சட்ட மன்றத் தொகுதிகளிலும் இதைப் பயன்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லுகள் செய்யப்பட்டு அதன் மூலம் மத்திய ஆளுங்கட்சி வெற்றிகளைக் குவிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக தேர்தல் ஆணையம் அநாவசியமான இந்த முடிவை எடுத்திருக்கிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்று நிரூபிக்க வரலாம் என்று தேர்தல் ஆணையம் விடுத்த அழைப்பைப் பெரும்பாலான கட்சிகள் ஏனோ புறக்கணித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் மட்டும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்நிலையில், ஒரு சிலரின் சந்தேகத்துக்காக, மிகுந்த செலவுபிடிக்கும் இந்த முறையைத் தேர்தல் ஆணையம் அமல்படுத்தியிருக்கத் தேவையில்லை.

மாறாக, வெகு விரைவாக மூன்றாவது தலைமுறை தொழில்நுட்ப உத்திகளைக் கொண்ட வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் ஆணையம். அவற்றைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதற்கு முன்னால் நிபுணர்களைக் கொண்டு பரிசோதித்து, அவர்களால் சான்றுரைக்கப்பட்ட பின்னர் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமானது ஒற்றை ‘மைக்ரோசிப்’ பொருத்தப்பட்டு, பிற இயந்திரங்களுடன் வலையாகப் பின்னப்படாமல் தனித்தே செயல்படுவது. வலைப்பின்னலில் இணைத்தால், ‘இந்தத் தொகுதி வாக்கு இயந்திரங்களைப் பக்கத்து தொகுதியிலிருந்து மாற்றிவிட்டார்கள்’ என்று சிலர் குற்றஞ்சொல்லக் கூடும். இதற்கும் முன் உதாரணங்கள் இருக்கின்றன.

பல மேலை நாடுகளில் இப்படி வலைப் பின்னலுடன் இணைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களைத்தான் பயன்படுத்தினார்கள். தோல்வியடைந்த கட்சிகளும் தொழில்நுட்ப நிபுணர்களும் ‘பொதுவான இடத்திலிருந்து கொண்டு வாக்கு இயந்திரங்களில் மாற்றங்களைச் செய்ய முடியும். தவறான ஆணைகளைப் பிறப்பிக்க முடியும்’ என்று குற்றஞ்சாட்டினார்கள். இதையடுத்து வாக்குச் சீட்டு முறைக்கே அந்நாடுகள் திரும்பிவிட்டன. தனித்து இயங்கும் இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வலைப்பின்னலில் இணைக்கப்படவில்லை. ஆனால் ரஷியாவில் நடந்த ஓரிரு சம்பவங்கள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் தொழில்நுட்பத்தை நவீனப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.

‘ஆதார்’ அட்டையுடன் வாக்காளரின் அடையாள அட்டையையும் இணைக்கலாம் அதன் மூலம் வாக்காளர் சரிபார்ப்பையும் துல்லியமாகச் செய்துவிட முடியும் என்றொரு யோசனை தேர்தல் ஆணையத்தால் 2015-ல் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அப்படிச் செய்தால் ‘ஆதார்’ எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தகவல்களை வேறு யாராவது கவர்ந்துவிட முடியும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டதால், அது கைவிடப்பட்டது. தேர்தல் ஆணையம் சுயேச்சையாக, நடுநிலையுடன், நம்பகத்தன்மையுடன் செயல்பட வேண்டும். தன்னுடைய அதிகாரங்களை மாநில அமைப்புகளுக்கும் பிரித்துத் தர வேண்டும், தேர்தல் தொடர்பான அனைத்துக்கும் பொறுப்பேற்று நடந்துகொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x