Last Updated : 11 Oct, 2017 10:09 AM

 

Published : 11 Oct 2017 10:09 AM
Last Updated : 11 Oct 2017 10:09 AM

பணமதிப்பு நீக்கம் ஒரு மீள் பார்வை!- 3: பணமதிப்பு நீக்கம்- தவறுக்கு யார் பொறுப்பு?

ணமதிப்பு நீக்கத்துக்குச் சொல்லப்பட்ட நோக்கங்கள், ‘கறுப்புப் பணம் ஒழிப்பு; தீவிரவாத ஒழிப்பு; கள்ள நோட்டு ஒழிப்பு; லஞ்ச ஒழிப்பு’. அவற்றையெல்லாம் ஒழிக்க வழி இது அல்ல என்று மத்திய அரசுக்கும் தெரியும். அப்படியெனில், மக்களைப் பெரும் சிரமத்துக்குள்ளாக்கிய பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது எந்த அடிப்படையில்? “என்னால் கடினமான முடிவுகளை எடுக்க முடியும்; மக்களை அதை ஏற்றுக்கொள்ள வைக்க முடியும்” என ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் நினைத்ததே காரணம் எனத்தோன்றுகிறது. இப்போது அது தவறு என தெளிவாகிவிட்ட நிலையில் பொறுப்பேற்க வேண்டியது யார்?

பெரும் பணக்காரர்கள் பாதிக்கப்பட்டார்களா? இல்லை. அவர்களுக்கு இந்தத் திட்டமே உதவியது. கம்பெனிகளின் கணக்குகளில், கடன் கணக்குகளில், டிரஸ்ட் கணக்குகளில், ஆசிரமக் கணக்குகளில் பணம் செலுத்த எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. மேலும் இவர்களால் வேறு பலர் மூலம் பணம் வங்கியில் செலுத்தப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. இப்போது இவற்றில் சில கணக்குகளில் ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால் இவர்களால் திறமையான கணக்கர்களைப் பயன்படுத்தித் தப்பித்துக் கொள்ள முடியும். உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண மக்கள்தான். இன்னும் சில ஆயிரம் கையில் வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருக்கும் ஏராளமான ஏழைப் பெண்களைப் பார்க்க முடிகிறது. பழைய நோட்டுகளை மாற்றுவது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. பழைய நோட்டுகளை மாற்ற அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதித்தபோது ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்தது.

லாபம் அல்ல; இழப்பு

வங்கிகள் கணக்கில் வரும் பணத்துக்கு வட்டி கொடுக்க வேண்டும். இது எங்கிருந்து வரும்? கடன் கொடுப்பதன் மூலம். ஆனால் மூன்று மாதங்கள் வங்கிகளால் வேறு எந்த வேலையும் செய்ய முடியவில்லை. பழைய நோட்டு வாங்குவது, பராமரிப்பது, அறிக்கை அனுப்புவது, தணிக்கை செய்வது, வருமான வரி அதிகாரிகளுக்குப் பதில் சொல்வது போன்ற வேலைகளையே செய்ய முடிந்தது. கடன் கொடுக்கவும் முடியவில்லை. கொடுத்ததை வசூல் செய்யவும் முடியவில்லை. எனவே வங்கிகளுக்குப் பேரிழப்பே தவிர லாபம் இல்லை.

வங்கிகள் பணமாற்றம் செய்ய ஓய்வு பெற்ற ஊழியர், அதிகாரிகளையும் பயன்படுத்த வேண்டிவந்தது. அதற்குச் சம்பளம்; சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும்வேலை செய்யவேண்டியிருந்தது. இதற்கு ‘ஓவர் டைம்’; தினமும் இரவு வேலை. பழைய நோட்டுகளைப் பராமரிக்க, பெட்டிகளில் அடைக்க, மீண்டும் எண்ணுவதற்குப் பணம் எண்ணும் சாதனம் வாங்க, ரிசர்வ் வங்கிக்கு அனுப்பும் செலவுகள்; வாடிக்கையாளர்களுக்கு வசதிகள் செய்து தரும் செலவுகள்.. என்று பணமதிப்பு நீக்கம் ஏற்படுத்திய விளைவுகளின் பட்டியல் பெரிது.

இன்னொரு பக்கம், வந்த பணத்துக்கு வட்டி. இது பெரும் செலவாகும். உடனே கடன்கொடுத்து வட்டி சம்பாதிக்க முடியவில்லை என்பது முக்கியக் காரணம். மூன்றாவதாக பல கடன்களுக்குத் திருப்பிச் செலுத்தும் தவணைகளை ரிசர்வ் வங்கியே மூன்று மாதம் தளர்த்தியது. எனவே பணம் இருந்தும் வட்டியை உடனே கட்டாதவர்கள் ஏராளம். இதுவும் வங்கிக்கு இழப்பை ஏற்படுத்தியது.

நான்காவதாக, கொடுத்த கடன்களை வசூல் செய்ய நேரமில்லை. வாராக்கடன் அதிகரித்தது. இது இன்னொரு நஷ்டம். ஐந்தாவதாக, புதிய நோட்டுக்களின் அளவை மாற்றியதால் ஏ.டி.எம்.களை அதற்கேற்ப மாற்றியமைக்க ஆன செலவு. இப்படிப்பார்த்தால் வங்கிகளுக்குப் பல ஆயிரம் கோடி செலவுகள். ஆனால் ரிசர்வ் வங்கியோ, அரசோ இதற்கான இழப்பீட்டை வழங்கவில்லை. மேலும் இப்போது ரிசர்வ் வங்கியில் செலுத்திய பணம் சரியாக இல்லை; எண்ணிக்கை குறைவு என ரிசர்வ் வங்கிவங்கிகளிடமிருந்துப் பணம் வசூல் செய்துகொண்டிருக்கிறது.

கடும் பணிச்சுமை

வங்கி அதிகாரிகளும் ஊழியர்களும் கடும் பணிச்சுமையினால் பாதிக்கப்பட்டார்கள்; பழைய நோட்டுகளை எண்ணும் பணி என்பது அசாதாரணமானது. பலர் நோய்வாய்ப்பட்டார்கள்; எனக்குத் தெரிந்து 16 ஊழியர்கள், அதிகாரிகள் இறந்திருக்கிறார்கள். இவர்கள் குடும்பத்துக்கு அரசு எதுவும் செய்யவில்லை என்பதுதான் வேதனை. குறிப்பாக ஸ்டேட் பாங்க், கடம்பூர் (கான்பூர் அருகில்) கிளையின் நான்கு அதிகாரிகளும், மூன்று ஊழியர்களும் நள்ளிரவில் வங்கியிலிருந்து வீடு திரும்பும்போது விபத்தில் இறந்தனர். ஒருவரின் வாரிசுக்குக்கூட வேலை கொடுக்கப்படவில்லை.

வங்கிக் கிளைகளுக்கு – பணம் குறைவாக உள்ளது அல்லது கள்ள நோட்டு இணைந்துள்ளது எனக் கூறி பணம் பிடித்தம் செய்துகொள்கிறது ரிசர்வ் வங்கி. பல வங்கிகளில் அதிகாரிகள் கணக்கிலிருந்து பிடித்துக்கொள்கிறார்கள். இப்போதாவது முழுத்தகவல் கிடைத்துள்ளதா? இல்லை. பணம் எவ்வளவு திரும்ப வந்தது என மட்டும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஜனநாயக நாட்டில் மக்களுக்கு தகவல்களை முழுமையாக, வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டாமா?

ரிசர்வ் வங்கியின் அச்சகத்திலிருந்து சில தனி நபர்களுக்குப் புதிய நோட்டுகள் சென்றிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம். ரிசர்வ் வங்கி பதில் சொல்லவில்லை. எப்போதிலிருந்து 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன, அவை எங்கு சென்றன, பெற்றுக்கொண்டதற்கான ரசீது வந்ததா என்ற தகவல்களை நாள் வாரியாகத் தெரிவிக்க வேண்டும் என வங்கி அதிகாரிகள் சங்கம் கேட்டது. தகவல் பெறும் உரிமை சட்டம் மூலமாகப் பலர் கேட்டனர். ரிசர்வ் வங்கி இன்று வரை தெரிவிக்கவில்லை. ஏன்? எப்படி சிலர் கையில் கோடிக்கணக்கான புதிய நோட்டுகள் சென்றன? எப்படி தனியார் வங்கிகளுக்கு அதிகமான புதிய நோட்டுகள் சென்றன? வங்கிகளுக்கு எவ்வளவு செலவு? ரிசர்வ் வங்கியும் நிதி அமைச்சகமும் தெரிவிக்க வேண்டும். வங்கிகள் மீது திணிக்கப்பட்ட இந்த வேலையினால் ஏற்பட்ட இழப்பை ரிசர்வ் வங்கி அல்லது அரசு ஈடுகட்ட வேண்டும்.

இந்தியா முழுவதும் பல இடங்களில் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது. இதில் பலரும் அரசின் தொடர்பு உடையவர்கள். இந்த வழக்குகள் என்னாயின? கைப்பற்றப்பட்டப் பணத்தில் இருக்கும் எண்களை வைத்தே பல தகவல்களைப் பெற முடியும். சில நாட்களிலேயே இந்தப் பணம் எங்கிருந்து கிடைத்தது, வங்கியிலிருந்தா? அப்படியானால் எந்த வங்கியிலிருந்து? கொடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் பலர் கையிலிருந்து பணம் கைப்பற்றப்பட்டது. கர்நாடகாவில் ஜனார்த்தனன் ரெட்டிக்குத் தொடர்புடையவர்களிடமிருந்து ரூ. 5.7 கோடி 2,000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. ஆடம்பரத் திருமணத்தில் பணம் புரண்டோடியது. கார் ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டார். இந்தப் பணம் எங்கிருந்து வந்தது? தமிழகத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்தில் சில கோடி புதிய நோட்டுகள். அவர் மீண்டும் பணிக்கு வந்து விட்டார். இந்தப் பணம் எங்கிருந்து அவருக்குக் கிடைத்தது? சேலத்தில் பாஜக இளைஞர் அணிச் செயலாளரிடம் ரூ.2௦ லட்சம் கைப்பற்றப்பட்டது. எங்கிருந்து அவருக்குக் கிடைத்தது? இது போன்று நாடு முழுவதும் பல சம்பவங்கள் பத்திரிக்கை செய்திகளாக வந்தன. இவற்றைப் பற்றி ஒருவெள்ளை அறிக்கை வெளியிடுவது அரசின் கடமையல்லவா?

ரிசர்வ் வங்கியின் தவறுகள் என்ன?

அரசுக்குச் சரியான கருத்துக்களைத் தெரிவிப்பது ரிசர்வ் வங்கியின் கடமை. அவசரகோலத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு ரிசர்வ் வங்கி ஏன் துணை நின்றது? ஏன் நாளுக்கு ஒரு புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டது? நவம்பருக்கு முன்பே பணம் அச்சடிக்க ஆரம்பித்த ரிசர்வ் வங்கி ஏன் சரியான விதிமுறைகளைக் கொண்டுவரவில்லை? ரிசர்வ் வங்கியிலிருந்து தனியார் வங்கிகள் அதிகம் புதிய நோட்டுக்களைப் பெற்றன. இது அவர்களுக்கு வாடிக்கையாளர்களை இழுக்க உதவியது. பல மோசடிகளும் பத்திரிகைகள் மூலம் வெளிவந்தன.

இதற்கிடையே, ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கான ஏற்பாடுகள் காரணமாகவே, ரூ.3,800 கோடியை வங்கிகள் இழந்திருக்கின்றன என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நன்கு படித்தவர்களே டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் தடுமாறும்போது எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்ன செய்வார்கள் என்று அரசு யோசிக்கவே இல்லை. ரொக்கமில்லா பரிவர்த்தனை மூலம் கறுப்புப் பணத்தையும் ஊழலையும் ஒழித்துவிட முடியும் என்று நம்புவது அபத்தம். பிரேசில் அதற்குச் சிறந்த உதாரணம்.

கண்ணீர்க் கதைகள்

நான் மஞ்சகுப்பம் கிளைக்குச் சென்றபோது வாடிக்கையாளர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டு, ‘ரிசர்வ் வங்கி போதுமான பணம் வங்கிக் கிளைக்கு அனுப்பியாகிவிட்டது என சொல்கிறார்கள். நீங்கள் ஏன் ரூ.24,000 தர மறுக்கிறீர்கள்?’ என கேட்டனர். இல்லை ஐயா, போதுமான பணம் வரவில்லை என்ற போது அவர்கள் கேட்கத் தயாராக இல்லை. அப்படிக் கேட்பது அவர்களின் உரிமை.

விருதுநகர் கிளையில் மாற்றுத்திறனாளி மூதாட்டி ஒருவர் ரூ.2000 மாற்றுவதற்கு மணிக்கணக்காக நின்று வேதனை தாங்க முடியாமல் அழுததைப் பார்த்துப் பணம் மாற்றிக் கொடுத்தேன். ஆரணி கிளையில் ஒரு முதியவர் முதியோர் ஓய்வூதியம் பெறமுடியாததால் மருந்து வாங்க முடியாமல் அழுதுகொண்டிருந்தார். சிறுதொழில்கள், வியாபாரம், வேலைவாய்ப்பு அனைத்தும் பாதிக்கப்பட்டன. வங்கிகளின் நஷ்டம் அதிகமானது. இத்தனைக்கும் யார் பொறுப்பு?

- தே. தா. பிராங்கோ, பொதுச் செயலாளர்,

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு,

தொடர்புக்கு: ngcfranco@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x