Published : 19 Apr 2014 10:39 am

Updated : 20 Apr 2014 12:13 pm

 

Published : 19 Apr 2014 10:39 AM
Last Updated : 20 Apr 2014 12:13 PM

உண்மையான ஜனநாயகத்தைப் பெற இந்த ஜனநாயகம் அவசியம்! - பினாயக் சென் பேட்டி

இந்தியாவின் தாறுமாறான வளர்ச்சியின் கோரமான முகத்துக்குச் சரியான உதாரணம் மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர். தலைநகர் ராய்பூரின் பிரம்மாண்டமான மேக்னட்டோ மால் ஒரு முனை என்றால், சாலையில் ஐந்து ரூபாய்க்குச் சவாரி ஏற்றத் தயாராக இருக்கும் ரிக்‌ஷாக்கள் இன்னொரு முனை.

சத்தீஸ்கரின் 41% நிலம் வனம். கனிம வளங்களை இந்தியப் பெருநிறுவனங்கள் வாரியணைத்து அள்ளுகின்றன. இந்தியாவின் மின் உற்பத்தி, இரும்பு உற்பத்தியின் மையம் இன்றைக்கு சத்தீஸ்கர்தான். ஆனால், மனிதவளக் குறியீட்டில் இந்தியாவிலேயே மோசமான மாநிலமும் இதுதான். படித்தவர்கள் எண்ணிக்கை தேசிய சராசரியைவிடக் குறைவு. சுகாதாரத்திலும் நாட்டிலேயே மோசம்.


ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, குழந்தைகள் இறப்புவிகிதம் இப்படி எந்த விஷயத்தில் ஒப்பிட்டாலும் மோசம். மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்க பூமியான சத்தீஸ்கரில் அவர்களின் கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்படும் பஸ்தாரும் தண்டேவாடாவும் மாநிலத்திலேயே கல்வியறிவு குறைவான மாவட்டங்கள் - வறுமை தாண்டவமாடும் பகுதிகள் என்பது இந்திய வரலாற்றின் மிகப் பெரிய உள்நாட்டுப் போருக்கான அடிப்படையை நாம் புரிந்துகொள்ள உதவும்.

மனிதநேயம் மிக்க மருத்துவரான பினாயக் சென் சத்தீஸ்கரில் பணியாற்றச் சென்றபோது, அவருக்குள்ளிருந்த மனித உரிமைச் செயல்பாட்டாளர் வெளியே வந்தார். வறுமை யில் வாடிய சத்தீஸ்கர் மக்களிடையே கிராமம் கிராமமாகச் சென்று சேவையாற்றினர் சென்னும் அவருடைய மனைவி இலினாவும். தொழிலாளர்கள் அமைப்பால் நடத்தப்படும் சத்தீஸ்கர் முக்தி மோட்சா சாஹித் மருத்துவமனை கட்ட அவர் உதவினார்.

ஜன் ஸ்வஸ்த்யா ஸஹயோகின் அமைப்பின் ஆலோசகராக இருந்து பிலாஸ்பூர் பகுதியில் பழங்குடியின மக்களுக்கு நல்ல சிகிச்சைகள் கிடைக்க உதவினார். சென்னின் சேவைகள் மருத்துவ அமைப்புகளால் கொண்டாடப்பட்டன; சுகாதாரத்தை மேம்படுத்தும் அவருடைய சிந்தனைகள் இந்தியாவின் மிகச் சிறப்பு வாய்ந்த அறிவியலாளர்களில் ஒருவராக அவரை அடையாளப்படுத்தின. கூடவே, அடக்குமுறைக்கு எதிராக மனித உரிமைகளுக்காகவும் அவர் குரல் கொடுத்தபோது, சத்தீஸ்கர் அரசு மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புபடுத்தி அவரைக் கைதுசெய்தது.

அவர் தேசத் துரோகி ஆக்கப்பட்டார். சர்வதேச அளவில் அதிர்வுகளை உண்டாக்கிய இந்த வழக்கில் அமர்த்திய சென் முதல் நோம் சாம்ஸ்கி வரை சென்னுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பேரணிகள் நடந்தன. இதற்கு இடையிலேயே சென்னுக்கு உலகளாவிய சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஜொனாதன் மன் விருது அறிவிக்கப்பட்டது.

ஆனாலும், அரசு பொருட்படுத்தவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அவருக்குப் பிணை மறுக்கப்பட்டது. இறுதியாக உச்ச நீதிமன்றம் அவரைப் பிணையில் விடுவித்தது. சென் வெளியிலிருந்து இப்போது வழக்கை எதிர்கொள்கிறார். சத்தீஸ்கரைப் பற்றியும் ‘வளர்ச்சி'யைப் பற்றியும் சென்னிடம் பேசினேன்.

குழந்தைகள் நல மருத்துவரான உங்களை எது மனித உரிமைகள் செயல்பாட்டாளர் ஆக்கியது?

மக்களுக்குச் சுத்தமான குடிநீர்கூடக் கிடைக்காதது, ஊட்டச்சத்துக் குறைபாடு, மோசமான கழிவு மேலாண்மை, தொற்றுநோய்களின் பரவல் போன்றவற்றுக்கும் சமூகத்தில் காணப்படும் ஒடுக்குமுறை, அநீதி போன்றவற்றுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

சமத்துவம், சமூக நீதி, அமைதி போன்றவை இல்லாவிட்டால் சுகாதாரத்தைப் பொறுத்தவரை நீடித்த முன்னேற்றங்களை நாம் அடையவே முடியாது. இதை உணர்ந்தபோதுதான் சுகாதாரம், மருத்துவத் துறையில் நீடித்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஒரே வழி மனித உரிமைகளுக்காகப் போராடுவதுதான் என்பதையும் உணர்ந்தேன். இந்தியாவிலுள்ள மனித உரிமை அமைப்புகளிலேயே மூத்த அமைப்பான மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பி.யு.சி.எல்.) அமைப்பில் 1981 வாக்கில் சேர்ந்தேன்.

அதிகமாகப் பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ள மருத்துவத் துறையை விட்டுவிட்டு, ஏன் காடுகளில் மனித உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்ற கேள்வி எழலாம். பதில்: பணத்தின் மீதான வெறுப்பு அல்ல; பிரச்சினைகள்குறித்த அக்கறைகள் சென்ற திசை அது என்பதே இதற்கான பதில்.

சத்தீஸ்கர் மருத்துவப் பணி அனுபவம் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பின் விளிம்புநிலையை உங்களுக்கு நன்றாகவே உணர்த்தியிருக்கும். அதைப் பற்றி பகிர்ந்துகொள்ள முடியுமா?

இந்தியா இயல்பாகவே ஏற்றத்தாழ்வு உடையது. இப்போது அது மேலும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஏற்றத்தாழ்வுதான் மிக அதிக அளவில் உலக மக்களைக் கொன்றுகொண்டிருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. நீங்கள் அடிப்படை வசதிகள்கூட மறுக்கப்பட்டவர்களைப் பாருங்கள்... பின்னணியில் ஒடுக்கப்பட்டிருக்கும் வெவ்வேறு பிரதேசங்கள், மதங்கள், சமூகங்கள் புலப்படும். நாடு முழுவதுமே இதுதான் நிலை. ஆனால், பெருகிவரும் வன்முறை, கட்டாய இடப்பெயர்ச்சி ஆகியவை சத்தீஸ்கரைக் கூடுதல் பாதிப்புக்குள்ளாக்குகின்றன.

பழங்குடி மக்களுடன் நெருக்கமாகப் பழகியவர் என்ற வகையில், இந்தியப் பழங்குடிகளின் இன்றைய பெரும் பிரச்சினைகள், சவால்களாக எதைக் கருதுகிறீர்கள்?

பழங்குடிகள் தங்கள் பிழைப்புக்கு வனத்தையே சார்ந்திருக்கிறார்கள். பெருநிறுவனங்களுக்கு இயற்கை வளங்களைத் தாரை வார்க்கும் அரசாங்கம் அவர்களுடைய இந்த வாழ்வுரிமைக்குத் தடையாக மாறும்போது அவர்கள் விக்கித்துப்போகிறார்கள். இதுதான் முக்கியமான பிரச்சினை, சவால் எல்லாம்.

எந்தக் காலகட்டத்தில் அரசுக்குப் பிடிக்காதவர் ஆகிப்போனீர்கள்?

மனித உரிமைச் செயல்பாட்டாளர் என்ற முறையில், ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக நான் எப்போதும் போராடிவந்திருக்கிறேன். சல்வா ஜுடூம் என்ற பெயரில் சத்தீஸ்கர் அரசே ஒரு வன்முறை அமைப்பை ஆரம்பித்தபோது, நாங்கள் எல்லோரும் அதற்கெதிராக நிலைப்பாடு எடுத்தோம். அரசுக்கும் எனக்கும் இடையே பிளவு ஏற்பட இதுதான் அடிப்படை. சல்வா ஜுடூம் சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றமே பிற்பாடு தீர்ப்பளித்தது.

காலங்காலமாகக் காடுகளும் மலைகளும் கனிம வளங்களும் இருக்கின்றன. காலங்காலமாகப் பழங்குடிகளும் ஏழ்மையாகவேதான் இருக்கிறார்கள். சும்மா இருக்கும் வளங்களைப் பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு?

நான் முன்னரே குறிப்பிட்டதுபோல, பழங்குடிகள் தங்கள் பிழைப்புக்கு வனத்தையே சார்ந்திருக்கிறார்கள். நாம் வெளியிலிருந்து சும்மா கிடக்கும் வளங்களாகப் பார்ப்பவைதான் உண்மையில் பழங்குடிகளின் வாழ்வாதாரம். அதைத்தான் அரசும் பெருநிறுவனங்களும் நாசமாக்குகின்றன.

பெருநிறுவனங்கள் எந்த வகையில் அந்த மக்களின் வாழ்வை நாசமாக்குவதாகக் குற்றஞ்சாட்டுகிறீர்கள்?

இந்தியாவிலும் சரி, உலகெங்கிலும் சரி, ஒடுக்கப்பட்ட மக்களுடைய வரலாறு சொல்வது இதைத்தான் - பெருநிறுவனங்களுக்காக இயற்கை வளங்கள் பெருமளவில் சூறையாடப்படுவது பெரும் எண்ணிக்கையிலான மக்களின் அழிவுக்கு - கிட்டத்தட்ட இனப்படுகொலை என்று சொல்லக்கூடிய அளவுக்குக் காரணமாகிறது.

நீங்கள் ஒரு சிந்தனையாளரும் கட்டுரையாளரும்கூட. உங்கள் பார்வையில் சொல்லுங்களேன், சத்தீஸ்கர் போன்ற ஒரு ஏழ்மையான இந்திய மாநிலத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மாற்றங்களை எப்படிக் கொண்டுவருவது?

தனியொருவருடைய யோசனையைக் கொண்டு மக்கள் அனைவருடைய வாழ்க்கையையும் முன்னேற்றிவிட முடியாது. தங்கள் விடியலுக்கான செயல்பாடுகளைத் தாங்களே மேற்கொள்வதன் மூலம் மக்கள் ஏற்றம் பெறலாம். இது சாத்தியமாவதற்காக வேண்டுமானால், நாம் அந்த மக்களுக்கு உறுதுணையாக இருந்து உதவலாம்.

இந்தியச் சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் என்று எவற்றைச் சொல்வீர்கள்?

இந்தியா முழுமைக்கும் மருத்துவ வசதியைக் கிடைக்கச் செய்வதற்காக ஒரு குழுவைத் திட்டக் குழு நியமித்தது. இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்தை மட்டுமே அரசாங்கம் மருத்துவத்துக்காகச் செலவிடுகிறது. இதை மூன்று சதவீதமாக உயர்த்தி, இலவச மருத்துவ வசதியும், அத்தியாவசியமான மருந்துப்பொருட்களும் அனைவருக்கும் கிடைக்க வழிவகைசெய்ய வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைகள் இந்திய மக்களுக்கான மருத்துவக் கட்டமைப்பில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவை.

ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் கொள்கை வகுப்புக் குழுவில் இடம்பெற்றிருக்கிறீர்கள். எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறதா?

அப்படியெல்லாம் எந்தத் திட்டமும் எனக்கு இல்லை.

உங்கள் வழக்கின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

மேல்முறையீட்டு நீதிமன்றங்கள்தான் அதை முடிவுசெய்ய வேண்டும்.

இந்திய ஜனநாயகத்தைப் பற்றியும் தேர்தல்களைப் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?

எப்போதுமே தேர்தல்களை நான் ஆதரிக்கிறேன். கடந்த காலங் களில் நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதற்காக, வாக்குச்சாவடி முறைகேடுகளை விசாரிப்பதில் நான் உதவி யிருக்கிறேன். இல்லாத வாக்குச்சாவடிகளை இருப்பதாகக் காட்டிய முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவர நான் உதவியிருக்கிறேன்.

இந்திய ஜனநாயகத்தில் நிறைய குறைகள் இருக்கின்றன. ஆனால், ஜனநாயகத்தின் உண்மையான மாற்று வடிவத்துக்காக மக்கள் அனைவரும் போராடுவதற்கு இப்போதைய ஜனநாயகம் அத்தியாவசியமானது. இந்தப் போராட்டம் நீண்டதாகவும் கடுமையானதாகவும் இருக்கும். ஆனால், நமக்கு அதைத் தவிர வேறு வழியே இல்லை.

தொடர்புக்கு: samas@kslmedia.in


சத்தீஸ்கர்ராய்பூர்மேக்னட்டோ மால்கனிம வளங்கள்மனிதவளம்மாநில சுகாதாரம்ஊட்டச்சத்துப் பற்றாக்குறைமாவோயிஸ்டுகள்பினாயக் சென்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x