Published : 10 Sep 2017 02:49 PM
Last Updated : 10 Sep 2017 02:49 PM

உலகம் முழுவதும் இயங்கும் ‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’ வலைப்பின்னல்! - கொடூரங்களில் இருந்து நம் குழந்தைகளை காப்பது எப்படி?

உலகம் முழுவதும் எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தாலும் உலகம் உயிர்ப்புடன் இருக்கின்றது என்றால் காரணம் குழந்தைகளே. ஒரு குழந்தையின் சிரிப்பில் நமது அத்தனை கவலைகளையும் மறந்துவிடுகிறோம். ஆனால், பாலியல் இச்சைக்காக டெல்லியில் ஏழு வயது குழந்தை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருக்கிறது என்றால் அதை இயல்பான ஒருவனால் செய்திருக்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. என்னவிதமான பிரச்சினை இது, உளவியல் சிக்கலா, பாலியல் வறட்சியா, இதன் பின்னணி என்ன என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

டெல்லி என்றில்லை, கடந்த 2011-ம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 7,112 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 33,098 குழந்தைகள் பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டில் சென்னை போரூரில் ஏழு வயது சிறுமி ஹாசினி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இரண்டே வயதான ரோஹிணி சிதைக்கப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டாள். பிஞ்சுக் குழந்தையைக் கொல்லத் துணியும் அளவுக்கு செல்லும் பாலியல் வக்கிரம் கொண்ட மனநிலை குறித்து மனநல மருத்துவரான மோகன வெங்கடாஜலபதியிடம் பேசினோம்.

“இது மிகவும் வக்கிரமான உளவியல் சிக்கல். இந்தக் கோளாறை Pedophilia என்கிறது உளவியல் உலகம். 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மீது ஏற்படும் முறையற்ற காம இச்சைதான் இந்த உளவியல் சிக்கல். இதற்கு பெண்களும் விதிவிலக்கு அல்ல. பொதுவாக இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இவர்கள் சிறுவர்களாக இருந்தபோது பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம்.

அடிப்படையிலேயே தன்னம்பிக்கை குறைவானவர்களாகவும் மனச்சோர்வு, மனப்பதட்டம் கொண்டவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட அதிக வாய்ப்பு உண்டு. யாருடனும் கலகலப்பாக பேசாமல் தனிமையில் இருப்பவர்களுக்கும் இதுபோன்ற பாதிப்புகள் நேரிடலாம்.

குற்ற உணர்வு இல்லாத..

சமூக விரோத மனப்பாங்கு மற்றும் ஆளுமை கோளாறு கொண்டவர்களும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட தயாராக இருப்பார்கள். இந்த வகையினர் குற்றத்தில் ஈடுபட்ட பின்னரும் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அடுத்தக் குற்றத்துக்கு தயாராகிவிடுவார்கள். மேற்கண்ட வகையினருக்கு பொதுவான அம்சமாக தனது பாலியல் தேவைக்கு ஏற்ற பெண் கிடைக்கவில்லை என்பது காரணமாக இருக்கும்.

அதேசமயம், தனக்கு ஏற்ற பெண் துணை இருந்தும் திருப்தி அடையாமல் குழந்தைகளை தங்களது வக்கிரத்துக்கு பயன்படுத்திக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களைப்போல் இல்லாமல் குறிப்பிட்ட சூழ்நிலையில் உணர்ச்சிவயப்பட்டு இதுபோன்ற குற்றங்களை செய்பவர்களும் இருக்கிறார்கள்.

இவர்கள் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வது உட்பட பல்வேறு வகைகளில் பயன்படுத்தி தங்கள் இச்சைகளை தீர்த்துக்கொள்வார்கள். குழந்தைகளை நிர்வாணப்படுத்தி தங்களுடன் தூங்கச் செய்வது, இரு குழந்தைகளுக்கு இடையே பாலியல் சீண்டலை உள்ளாக்கி அதை ரசிப்பது, குழந்தைகளுக்கு ரத்தக் காயம் வரவழைக்கும் வகையில் பாலியல் சித்ரவதை செய்வது உட்பட வார்த்தைகளால் விவரிக்க முடியாத வக்கிரச் செயல்களை இவர்கள் செய்கிறார்கள்.

வலைப்பின்னல்

சாதாரண விவகாரம் அல்ல இது. உலகம் முழுக்க தொழில் ரீதியான நீண்ட வலைப்பின்னல் கொண்டது. ‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’ என்கிற பெயரில் இயங்கும் இவர்கள், மூன்றாம் நாடுகளில் இருக்கும் அனாதை இல்லங்கள், சிறுவர் காப்பகங்கள், குடிசைப் பகுதிகளைக் குறி வைத்து செல்கிறார்கள். குழந்தைகளை தத்து எடுப்பது, ஆதரவு தருவது, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட உதவிகளை செய்வது ஆகிய காரணங்களைச் சொல்லி குழந்தைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருகிறார்கள். பதின்ம பருவம் வரை தொடர்ந்து பாலியல் வக்கிரங்களுக்கு உள்ளாக்கப்படும் குழந்தை, பதின்ம வயதில் தானும் இதே போன்ற காரியங்களில் ஈடுபட ஆரம்பிக்கும். இதில் பதின்ம வயது அடைந்த பெண் குழந்தைகள் பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்டு விடுகிறார் கள்.

சமீபகாலமாக உலகம் முழுவதும் இதுபோன்ற உளவியல் சிக்கல் கொண்ட குற்றவாளிகள் பெருகி வருகிறார்கள். அதனால்தான் ‘இண்டர்போல்’ போலீஸ் இந்தக் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும் தனிப்பிரிவை தொடங்கி இருக்கிறது.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் இதுபோன்ற குற்றவாளிகள் நிறைய பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் இவர்களை குணப்படுத்திவிட முடியுமா, சமூகத்தில் இயல்பான மனிதர்களாக இவர்கள் மாற முடியுமா என்று கேட்டால் அது மிகவும் சிக்கலான கேள்விதான்...” என்கிறார்.

என்னதான் தீர்வு?

நம் குழந்தைகளை நாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது மட்டுமே தீர்வு. குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை உறவினர்கள், அக்கம்பக்கத்தினருடன் பழகவிடும்போது பெற்றோரின் கண்காணிப்பு மிக முக்கியம். வீடுகளில் நம் குழந்தைகளை கொஞ்சுகிறோம் என்கிற பெயரில் பிறப்புறுப்பை தொட்டு கொஞ்சுவது, அங்கு முத்தமிட்டு கொஞ்சுவது போன்ற விஷயங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தங்கள் உடலின் மறைவுப் பகுதிகளில் தொடுதல் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்தான் உருவாக்க வேண்டும்.

கடைசி வரை பெற்றோருக்குத் தெரியாமல் பாதிக்கப்பட்டு வரும் குழந்தைகளும் இருக்கிறார்கள். கணவன், மனைவி இருவரும் பணிக்குச் செல்லுதல், தனிக்குடித்தனம், குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புதல் உள்ளிட்ட காரணங்களால் பெற்றோர் - குழந்தைகள் இடையே உரையாடல் குறைந்து வருகிறது. எனவே, குழந்தைகளிடம் நிறைய நேரம் பேச வேண்டும். நண்பர்களைப் போல இயல்பாக பேச வேண்டும். அப்போதுதான் தங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை குழந்தை தயங்காமல் பெற்றோரிடம் சொல்லும். நம் குழந்தையை பாதுகாப்பதைவிட பெரிய வேலை நமக்கு வேறொன்றும் இல்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x