

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்டவர்கள், அம்பாசமுத்திரம் சரக உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் தலைமையிலான காவலர்களால் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கின்றன.
மார்ச் 23 அன்று கொலை முயற்சி வழக்கில் கைதுசெய்யப்பட்டு, காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிலர், தங்கள் பற்கள் உடைக்கப்பட்டதாகவும் விதைப்பைகள் நசுக்கப்பட்டதாகவும் காணொளி மூலம் தெரிவித்தது, சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிற வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வேறு சிலரும் இதேபோல் கொடூரத் தாக்குதல்களுக்கு ஆளாகியிருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து, திருநெல்வேலி ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின்படி சேரன்மாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் தலைமையில், பல்வீர் சிங் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. சட்டமன்றத்தில் இது குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தார். மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து, இந்த விவகாரம் மீதான விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. இந்நடவடிக்கைகள் நம்பிக்கையளிக்கவே செய்கின்றன.
அதேநேரம் புகார் அளித்தவர்களில் சிலர், புகாரைத் திரும்பப் பெறுமாறு காவல் துறையினர் தங்களை வற்புறுத்துவதாக ஊடகங்களில் தெரிவித்திருப்பதும் கவனத்துக்குரியது. குறிப்பாக, தான் கீழே விழுந்ததால்தான் பல் உடைந்தது என்று ஒருவர் பின்வாங்கியிருக்கிறார். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் நெரிக்கப்படுகின்றனவா எனும் கேள்வி எழுந்திருக்கிறது.
இந்த விவகாரத்தில் உண்மைகள் அனைத்தையும் வெளிக்கொண்டுவருவதிலும் தவறிழைத்தவர்களை உரிய வகையில் தண்டிப்பதிலும் தமிழ்நாடு அரசு எந்த விதமான பாரபட்சத்தையும் காண்பிக்கக் கூடாது. பல்வீர் சிங் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், அவர் மட்டுமல்லாமல் அவருக்குத் துணைபோன அனைவரும் உரிய வகையில் தண்டிக்கப்பட வேண்டும்.
2020இல் தூத்துக்குடி சாத்தான்குளம் காவல் நிலையத்தில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை-மகனாகிய பி.ஜெயராஜ், ஜெ.பெனிக்ஸ் இருவரும் கொடூர சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. ஆனால் அதற்குப் பிறகும் காவல் நிலைய வன்முறைகள் தொடர்ந்துகொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
மக்களவையில் வெளியிடப்பட்டிருக்கும் தரவுகளின்படி, தமிழ்நாட்டில் 2016-17 தொடங்கி 2021-2 2வரையிலான ஐந்தாண்டு காலத்தில் காவல் துறை அல்லது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த 478 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். குற்றம்சாட்டப்படும் காவல் துறை அதிகாரிகள் மீது மேஜிஸ்திரேட்/நீதிமன்ற விசாரணை நடத்தப்படுவதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதும் அரிதான நிகழ்வாகவே உள்ளது.
காவல் நிலைய வன்முறைகளைத் தடுக்க, காவலர்களின் உளவியல் அழுத்தங்களைக் குறைக்கும் நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றன. காவலர்கள் மிக அதிக நேரம் பணியில் இருக்க வேண்டியிருப்பது, விடுமுறை இல்லாமல் வேலைபார்க்க வேண்டிய சூழல் உள்ளிட்ட பிரச்சினைகள் உடனடியாகக் களையப்பட வேண்டும். பிற அரசுத் துறை பணியாளர்களைப் போலவே காவல் துறையினருக்கும் பாதுகாப்பான, நிம்மதியான பணிச்சூழலை ஏற்படுத்தித் தர வேண்டிய பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.