Published : 14 Sep 2017 09:14 AM
Last Updated : 14 Sep 2017 09:14 AM

மூன்று பார்வைகள்: பணமதிப்பு நீக்கம் தோல்விதானா?

அருண் குமார்(இடது):

றுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான வழிமுறையாக பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டபோதே அது தோற்கும் என்பது நிச்சயமாகிவிட்டது. கறுப்புப் பணம் ரொக்கமாக இருக்கும் என்ற தவறான கருத்தின் அடிப்படையில் அது மேற்கொள்ளப்பட்டது. ரொக்கத்தைப் புழக்கத்திலிருந்து எடுத்தால் கறுப்புப் பணத்தை வடிகட்டிவிடலாம் என்று நினைத்தனர். கணக்கில் காட்டப்படாமல் மறைக்கும் செல்வத்தில் ரொக்கமும் ஒன்று. அது வெறும் 1%. ரூ.500, ரூ.1,000 நோட்டுகளில் 98.8% மீண்டும் ரிசர்வ் வங்கிக்கே வந்துவிட்டது. எஞ்சியுள்ள ரூ.16,000 கோடியிலும் பெரும் பகுதி கணக்கில் வருவதுதான். சுருக்கமாகச் சொன்னால் பணமதிப்பு நீக்கம் மூலம் 0.01% கறுப்புப் பணம் கூட ஒழிக்கப்படவில்லை.

தான் தொடங்கிய நடவடிக்கையால் பலன் இல்லை என்று தெரிந்ததும் அரசு தர்மசங்கடத்துக்கு உள்ளானது. இதனால் பணமதிப்பு நீக்கம் தொடர்பான நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் தினந்தோறும் மாற்றிக்கொண்டே இருந்தது. அதனால் கிடைக்கக்கூடும் என்று சொன்ன பலன்களையும் விளைவுகளையும் மாற்றிமாற்றிப் பேசியது.

 

கையிலிருந்த பணம் முழுக்க வங்கிக்கு வந்ததும் நல்லது, கறுப்பை இப்போது பிடித்துவிடலாம் என்கிறது. அது அறிவித்த 50 நாள் கெடுவுக்குள்ளேயேகூட பணம் செலுத்துவதைத் தடுக்க விதிகளை மாற்றி மாற்றி அறிவித்தது. வயதானவர்களும் நோயாளிகளும் வைத்திருந்த பணத்தைப் பெறுவதற்கு மறுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்காடிக் கொண்டிருக்கிறது.

2016 நவம்பரில் இந்த நடவடிக்கையை அறிவித்தபோது இந்த நடவடிக்கையின் உண்மையான நோக்கம் ரொக்கமில்லாப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதுதான் என்றது மத்திய அரசு. இப்போதோ, உறங்கிக் கிடந்த ரொக்கம் பரிமாற்றத்துக்கு வந்துவிட்டது இதனால் ரொக்கத்துக்கும் மொத்த உற்பத்தி மதிப்புக்கும் இடையிலான விகிதம் குறைந்துவிடும், வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றெல்லாம் சொல்லத் தொடங்கிவிட்டது.

வங்கியில் அதிக மதிப்பில் பணம் செலுத்துவோரிடம் விசாரணை நடத்தி கறுப்புப் பணத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்று அரசு கூறுவதும் நடைமுறையில் சாத்தியம் இல்லை. வங்கிக்கு வந்த பணத்தில் பெரும்பகுதி லட்சக்கணக்கான வியாபாரிகளால் நடைமுறை மூலதனமாக வைத்திருந்த தொகைதான். அத்துடன் 25 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாடச் செலவுக்கு கையில் வைத்திருந்த தொகையுமாகும்.

போதிய ஏற்பாடுகள் செய்யாமல் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அமைப்புசாராத துறையில் பெருத்த இழப்பு ஏற்பட்டது. கோடிக்கணக்கானோர் வருமானத்தையும் வேலைவாய்ப்பையும் இழந்தனர். இது எவ்வளவு என்று கணக்கிடப்படாவிட்டாலும் இது நிச்சயம் லட்சம் கோடிகளில் இருக்கும். விவசாயிகள், வர்த்தகர்கள், இளைஞர்கள் இதனால்தான் போராடுகிறார்கள்.

கறுப்புப் பணம் ஒழிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் பணமதிப்பு நீக்கம் அதற்கான வழியல்ல; இந்த நடவடிக்கையின் பாதிப்பு கறுப்புப் பணத்தையே பார்த்திராதவர்கள் தலையில்தான் விழுந்தது. ரொக்கத்துக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு மெதுவாக மறைந்துவருகிறது. இந்த நடவடிக்கையால் சமூகத்துக்கும் பொருளாதாரத்துக்கும் நீண்ட கால நன்மைகள் ஏதேனும் இருந்தால், அது இனிமேல்தான் புலப்பட வேண்டும்.

- அருண்குமார், சமூக அறிவியல் கழகப் பேராசிரியர்

தீரஜ் நய்யார் (வலது):

சி

றிது காலத்துக்கு மக்களுக்கு நெருக்கடி ஏற்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. மக்களிடம் செலவுக்குப் பணத்தட்டுப்பாடு ஏற்படும், சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள், நுகர்வு குறையும், பொது உற்பத்தி மதிப்பு (ஜி.டி.பி.) கூட அடிவாங்கும் என்பது தெரியும். ரொக்கத்தில் 99% வங்கிகளுக்கே திரும்பிவிட்டது, யாரும் கறுப்புப் பணத்தைக் கொளுத்திவிடவில்லையே என்று விமர்சிக்கின்றனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போதே ‘பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா’ அறிவிக்கப்பட்டது. மறைக்க முடியாத கறுப்புப் பணத்தை அறிவித்து, டெபாசிட் செய்து, அதற்காகக் கணிசமான அபராதத்தையும் செலுத்த வேண்டும். முழுக் கறுப்புப் பணத்தையும் இழப்பதற்குப் பதில் அதில் ஒரு பகுதியையாவது திரும்பப் பெற வேண்டும் என்ற எண்ணமே கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு ஏற்படும். அப்படி அறிவிக்காமல் டெபாசிட் செய்தவர்களால் அதை முழுக்க வெள்ளையாக மாற்றிக்கொள்வது எளிதல்ல. வருமான வரித்துறை கேள்விகள் கேட்டு வரியையும் அபராதத்தையும் சேர்த்தே வசூலிக்கும்.

சந்தேகத்துக்கிடமான உயர் மதிப்பு டெபாசிட்டுகளை வருமான வரித்துறை அடையாளம் கண்டு விசாரிக்கக் காலதாமதம் ஆனாலும் எதிர்காலத்தில் அது வரி வருவாயைப் பெருக்கும். 2016 நவம்பர் 8 முதல் டிசம்பர் 31 வரையில் 1.09 கோடி வங்கிக் கணக்குகளில் ரூ.2 லட்சம் தொடங்கி ரூ.80 லட்சம் வரையில் ரொக்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதன் சராசரி ரூ.5.03 லட்சம். ரூ.80 லட்சத்துக்கும் அதிக மதிப்புள்ள டெபாசிட்டுகள் 1.48 லட்சம் கணக்குகளில் போடப்பட்டுள்ளன. இவற்றின் சராசரி ரூ.3.31 கோடி. இது பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரொக்கத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு மடங்கு. இது முழுக்க கறுப்புப் பணம் இல்லைதான்; இதில் மூன்றில் ஒரு பங்கு கறுப்புப் பணமாக அறியப்பட்டாலும் நவம்பர் 8-க்கு முன்பிருந்தது எவ்வளவு என்று தெரியவரும். இந்தத் தொகைகள் கறுப்போ வெளுப்போ இனி இவர்கள் தங்களுடைய வருமானத்தை மறைக்க முடியாமல் தொடர்ந்து வரி செலுத்த நேரிடும். எனவே, இதன் பலன் இந்த ஓராண்டோடு முடிவதல்ல.

இன்னொரு நன்மை ரொக்கமில்லாப் பரிவர்த்தனை. அரசு தொடர்பான பரிமாற்றங்கள் இனி ரொக்கமில்லாமல் மேற்கொள்ளப்படும். 2015-16-ல் பண அட்டை - கடன் அட்டை மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைத் தொகை முறையே ரூ.1.6 லட்சம் கோடி - ரூ.2.4 லட்சம் கோடி. 2016-17-ல் அது இரண்டின் மூலமும் தலா ரூ.3.3 லட்சம் கோடி. 2016-ல் தேசிய மின்னணு நிதி மாறுகை மூலம் 160 கோடி பரிமாற்றங்கள் நடந்தன. அதன் மதிப்பு ரூ.120 லட்சம் கோடி. அதற்கு முந்தைய ஆண்டு அது 130 கோடி பரிமாற்றங்களாகவும், மதிப்பு ரூ.83 லட்சம் கோடியாகவும் இருந்தன. 2016-17-ல் கூட கடைசி 4 மாதங்களில்தான் இந்தப் பரிமாற்றங்கள் அதிகரித்தன. 2017-18-ல் இது நிச்சயம் அதிகரித்திருக்கும். பணமதிப்பு நீக்கத்தால் ஒரு பயனும் இல்லை என்று ஒரே வாக்கியத்தில் விமர்சனத்தை முடித்துவிடக் கூடாது. நிகழ்காலத்தைத் தாண்டிய எதிர்காலம் ஒன்று இருக்கிறது.

-தீரஜ் நய்யார், நிதி ஆயோக் அமைப்பில்பொருளாதாரம் -நிதி-வணிகத்துறையின் தலைவர்.

பிரணாப் சென் (மையம்):

றுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவருவதுதான் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கம். ‘கறுப்புப்பண’ செல்வந்தர்கள் மிகக் குறைந்த அளவுதான் ரொக்கம் வைத்திருப்பார்கள். பெரும்பாலான தொகை தங்கமாகவும் நிலமாகவும் பங்குச் சந்தை முதலீடாகவும் வெளிநாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டிருக்கும். கறுப்புப் பணம் மொத்த கறுப்புப் பொருளாதாரத்தில் 6% மட்டுமே. எனவே, நோக்கமும் கொள்கையும் ஒத்திசைவாக இல்லை.

பணமதிப்பு நீக்கத்தால் கறுப்புப் பணக்காரர்கள் தங்கள் வசம் வைத்திருக்கும் பணத்தில் ரூ.3.4 லட்சம் கோடியிலிருந்து ரூ.4 லட்சம் கோடி வரையில் வங்கிகளுக்குக் கொண்டுவராமல் தங்களிடமே வைத்திருந்து அழித்துவிடுவார்கள் என்று அதிகாரிகள்தான் மதிப்பிட்டார்கள். இதை மோடி சொல்லவில்லை என்பது என் ஞாபகம். ஆனால், எதிர்பார்த்தபடி அப்படி எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. கள்ள ரூபாய் நோட்டுகளை அழிக்க முடியும் எல்லைக்கு அப்பாலிருந்தும் உள்நாட்டிலும் தீவிரவாதச் செயல்களுக்கு இப்பணம் பயன்படுத்தப்படுகிறது என்று மோடி கூறினார். அப்போது அரசுத் தரப்பில் இந்தத் தொகை ரூ.400 கோடியாக இருக்கக்கூடும் என்று மதிப்பிட்டனர். ஆனால், அது ரூ.40 கோடிக்குக் குறைவு. இது கள்ள நோட்டுகள் பற்றிய அனுமானம். இது எவ்வளவு இருக்கும் என்று யாராலும் ஊகிக்கக்கூட முடியாது. இதற்காகப் பிரதமரைக் குற்றம்சாட்டுவது சரியல்ல.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை எதிர்பார்த்தபடி பலன் தரவில்லை என்று அரசுத் தரப்பில் அதற்கான காரணங்களை மாற்றி மாற்றிப் பேசினார்கள். முதலில் ரொக்கமே இல்லாத பரிவர்த்தனைக்காக என்றனர், பிறகு குறைந்த அளவு மட்டுமே ரொக்கப் பயன்பாட்டுக்காக என்றனர், பிறகு பொருளாதாரத்தை முறைப்படுத்துவதற்காக என்றனர். கடைசியாக, இப்போது கிடைக்கும் தகவல்களிலிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுப்பார்கள் என்றனர். முக்கிய நோக்கத்தைவிட அதற்கடுத்து கூறப்பட்ட இந்த நோக்கங்கள் எல்லாம் நீண்டகால நோக்கில் அமல்படுத்தப்பட வேண்டியவை. ரொக்கமில்லாப் பரிவர்த்தனை அல்லது ரொக்கம் குறைவான பரிவர்த்தனையை எடுத்துக்கொள்வோம். இரண்டு வழிகளில் இதைச் செய்யலாம். முதலில் பொருள் அல்லது சேவைக்குப் பணம் தரும் வழிமுறையை மாற்ற வேண்டும். மின்னணு பரிமாற்றங்கள் அதிகரித்தன என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த பிறகு இந்தப் பரிமாற்றங்கள் குறைந்துவிட்டன. எனவே, ரொக்கத்துக்கு மாற்றாக மின்னணு பரிமாற்றத்துக்கு மக்கள் மாறிவிட்டார்களா என்றால் பதில் அளிப்பது கடினம். ரிசர்வ் வங்கிக்கோ, இதர வங்கிகளுக்கோ பணமதிப்பு நீக்க நடவடிக்கை முன்கூட்டியே தெரியாது. எனவே, அவர்களால் தயாராக இருக்க முடியவில்லை. ரிசர்வ் வங்கி முடிந்த அளவு இதைச் சரியாக நிர்வகித்தது; ஆனால் அதன் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டது. அதே வேளையில் கடந்த 8 மாதங்களில் வருமான வரித்துறை என்ன செய்தது?

-பிரணாப் சென், தேசியப் புள்ளிவிவர ஆணையத்தின் முன்னாள் தலைவர்.

© ‘தி இந்து’ ஆங்கிலம். தொகுப்பு : அனுராதாராமன். தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x