

ஓட்டத்தைக் கவனப்படுத்தி தேர்த் திருவிழாவைத் ‘தேரோட்டம்’ என்பதும் உண்டு. சூரியனும் சந்திரனும் தேர்க் கால்கள். வேதங்கள் நான்கும் தேரில் பூட்டிய குதிரைகள். சாரதியாக இருப்பது பிரம்மா. இறைவன் தேர் ஊர்வதைப் பிரபஞ்சத்தின் இயக்கமாக இப்படி அர்த்தப்படுத்துவது ஒரு வழக்கம். திருவாரூர்த் தேரோட்டம்தமிழ் இலக்கிய மரபு ஒன்றைக் காட்சிப்படுத்துவதாகவும் அர்த்தப்படுத்த இயலும்.
திருவாரூர் தியாகேசர் கோயில் நாகஸ்வரக் கலைஞர் பழனியப்பன், தேரோட்டத்தில் தான் வாசிக்கும் பாடல்களைப் பற்றி எனக்குச் சில அரிய தகவல்களைக் கொடுத்தார். அவர் குடும்பத்தினர் பல தலைமுறைகளாகத் தியாகேசர் கோயிலின் ஆஸ்தான கலைஞர்கள். நான்கு வீதிகளையும் சுற்றித் தேர் நிலைக்கு வரும் தூரத்தை எட்டு அங்கணங்களாக்கி ஒவ்வொன்றிலும் இன்னின்ன பாடல்களை வாசிக்க வேண்டும் என்கிற முறை இருப்பதாக பழனியப்பன் சொன்னார்.
அவர் நாகஸ்வரத்தில் வாசிக்க வேண்டியவற்றில் சில குறவஞ்சி இலக்கியப் பாடல்கள். குறவஞ்சியின் மரபை ஒட்டி அவை நகைச்சுவையாகவும் இருக்கும் என்றார் பழனியப்பன். நாகஸ்வரத்தில் ஸ்வரங்களுக்கே அதிகம் பழகிவிட்டதால், பாடல் வரிகள் அவருக்கு நினைவில்லை.
திருவாரூரின் குறவஞ்சி: குறவஞ்சியிலும் உலா இலக்கியத்தில் இருப்பதுபோல் தலைவனின் நகர உலா உண்டு. அவனைக் கண்டு மையல் கொள்ளும் தலைவி வசமிழந்து தன் ஆற்றாமையைச் சொல்லிப் புலம்புவது அதன் அடுத்த கூறு. ‘தியாகேசர் குறவஞ்சி’ என்கிற பதினேழாம் நூற்றாண்டுக் குறவஞ்சி நாடகம் ஒன்று உண்டு. தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் இருந்த அந்த நாடகப் பிரதியைத் தன் ஆய்வு முயற்சியால் நன்றாகச் செப்பனிட்டுள்ளார் வே.பிரேமலதா.
நாடகம் 1970இல் சரஸ்வதி மகால் நூலகப் பதிப்பாகவே வெளிவந்துள்ளது. திருவாரூர் கமலம்மாள் வழித்தோன்றலான பரதக் கலைஞர் பி.கே.திலகம்புகழ்பெற்றவர். அவரிடம் புழக்கத்தில் இருந்த ஸ்வர சாகித்தியங்களாகவே குறவஞ்சியின் பாடல்களைத் தந்துள்ளார் பதிப்பாசிரியர். இந்த நாடகம் அண்மைக் காலம்வரை பங்குனிப் பெருவிழாவில் கோயிலில் நடிக்கப்பட்டு வந்ததாகவும் அவர் கூறுகிறார்.
தியாகேசர் என்ற தலைவனின் உலாவாகவே திருவாரூர்த்தேரோட்டம் வடிவமைக்கப்பட்டதாகக் கருதுகிறேன். தமிழ்இலக்கிய மரபுகள் கோயில் விழாக்களாக வடிவம் பெறுவதுநம் பண்பாட்டில் புதுமையல்ல. மன்னன் என்கிற கதைப் பாத்திரத்தின் இடத்தில் இறைவனை வைத்து இலக்கியம் படைப்பதும் புதிதல்ல. சிவன் கோயில்களில் திருவூடல் பற்றியும்பெருமாள் கோயில்களில் அதைவிட விரிவான மட்டையடித் திருவிழா பற்றியும் நீங்கள் அறிந்திருக்கலாம்.
தேருக்குத் திராவிட விமானம்: திருவாரூர் தேர் மற்ற இடங்களின் தேர்களைவிடப் பெரிதும் மாறுபட்டது. இதர கோயில்களின் தேர்கள் பெரும்பாலும் சட்டத் தேர்கள். மரச் சட்டங்களைக் கொண்டு அவற்றை நிரந்தரமாக அமைத்திருப்பார்கள். திருவாரூர்த் தேரின் பீடம் மட்டும் நான்கு ஆள் உயரத்தில், எண்கோண வடிவில் நிரந்தரமாக இருப்பது.
அதன் பக்கங்களைப் புராணக் கதைகளின் மையக் கட்டங்களைச் சித்தரிக்கும் மரச் சிற்பங்களால் பொதிந்திருக்கிறார்கள். இரண்டு மூன்றாக உடைத்த பனை மரங்களைப் பீடத்தின் மேல் குத்துக்கால்களாக வைத்து அதற்கு மேல் மூங்கிலால் குடை விரித்ததுபோல் பன்னிரண்டு கோணத்தில் தேர் கட்டியிருப்பார்கள்.
இது அந்தந்த ஆண்டுக்கெனக் கட்டுவது. இந்தப் பகுதி பீடத்தைப் போல் இரண்டு பங்குக்கு மேல் வளர்ந்து உயர்ந்திருக்கும். பீடத்தைவிடக் கால் பங்கு விரிந்து பரந்திருக்கும். இந்த அமைப்பைத் திராவிட விமானம் எனலாம். விமானத்தின் மேல் தகுந்த அளவில் சிகரமும் அதன் உச்சியில் கலசமும் கோயிலைப் போலவே இருக்கும். கலசத்துக்குக் கச்சிதமான அளவில் இரட்டைக் குடை.
விமானத்தைப் போர்த்தியிருக்கும் தேர்ச் சீலை அடர் மஞ்சள், பச்சை, சிவப்பு, நீலம் போன்ற வண்ணங்கள் சிதறியதொரு கோல ரகளை. குடை விளிம்பில் அதே வண்ணங்களில் கூத்தாடும் தொம்பைகள். நம் கண்கள் தொல்குடிகளின் அடர் வண்ண ரசனையைப் புதிதாகப் பழகிக்கொள்ளும்.
தேரின் பீடம் ஒரு தட்டு என்றால், அதன் மேல் படிப்படியாக உள்ளடங்கி மூன்று தட்டுகள் இருக்கும். உச்சித் தட்டு தியாகேசர் அமர்வதற்கு. அடுத்த கீழ்த் தட்டில் அர்ச்சகரும் அதற்கு அடுத்ததில் கோயில் நாகஸ்வரக் கலைஞரும் இருப்பார்கள்.
ஆர்ப்பாட்ட ஒலி பொருந்தாது: நாகஸ்வரக் கலைஞர் பழனியப்பன் இந்தக் கோயிலுக்கே உரிய பாரி நாயனம் வாசிப்பார். எப்போதும் உடன் வாசிக்கும் தவிலுக்குப் பதிலாக தேரோட்டத்தில் மட்டும் ஒருவர் கொடுகொட்டி வாசிப்பார். விளம்ப கதியில் வரும் இவற்றின் மெல்லிய நாதப் பரிமாணத்துக்கும், தேரின் ஆகிருதிக்கும் நம்மால் தொடர்பு அறிய இயலாது.
கண்கொள்ளாமல் விரிந்து கிடக்கும் வானத்தில் இரண்டே இரண்டு மீன் பூத்ததுபோன்ற தனிமையில், இந்த இசைக் கருவிகள் மென்மையாக ஒளிரும். இவ்வளவு பெரிய தேருக்கு ஆர்ப்பாட்ட ஒலிகள் எப்படியோ பொருந்தாமல் போகும் ஆச்சரியம் அன்று நிகழும். தேர் வேறொரு தளத்தில் நகர்வதாகவே இந்த இசை நமக்குத் தோன்றச் செய்யும்.
இளவேனில் திருவிழா: கோயிலிலிருந்து நடனமாடியபடியே தேருக்குப் புறப்படும் தியாகேசர் நாலுகால் மண்டபத்தை வந்தடைந்ததும் சற்று நிதானிப்பார். தேரிலிருந்தபடியே அதைப் பார்க்கும் நாகஸ்வரக் கலைஞர் பழனியப்பன், ‘இதுவல்லவோ நிறை செல்வத் திருவாரூர்!’ என்று கல்யாணி ராகத்தில் இசைப்பார். பாடலை இயற்றியவர் பாபநாச முதலியார் என்றார் பழனியப்பன். அநேகமாக ‘கும்பேசர் குறவஞ்சி’ என்ற நாடகத்தை இயற்றிய அதே ஆசிரியராக இருக்கலாம்.
உலா இலக்கிய மரபில் வரும் தலைவனின் நகரச் சிறப்பை ஒத்த ஒரு கட்டம் இது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்தத் திருவிழாவுக்கு ‘வசந்தன்’ என்றும் பெயர். காமதேவனுக்குக் கட்டியம் கூறும் பருவம். பங்குனி மாதம் என்பது இளவேனில் என்ற பெரும் பொழுது. திருவாரூர் மருத நிலம். இப்போது எனக்குக் குறவஞ்சித் தலைவனின் உலாவோடு தியாகேசரின் தேரோட்டத்தைப் பொருத்தி அர்த்தம்கொள்வதில் பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை.
தேரோடும் வீதி அங்கணங்களில் அது அதற்கு உள்ள பதங்கள், குறவஞ்சிக் கீர்த்தனங்கள், தில்லானா, ஊஞ்சல் பாட்டு, ஓடம், பிறகு நிலைக்கு வரும்போது இறக்கு மல்லாரி என்று வாசித்து நிறைவு செய்வார்களாம். இந்த முறையைத் திருவாரூர் இசை மூவரில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் தந்தை ராமசாமி தீட்சிதர் அமைத்ததாகப் பழனியப்பன் சொல்கிறார்.
அதற்கு முன் இருந்தவற்றில் விடுபட்டதும், புதிதாகச் சேர்ந்ததும் எவை என்று தெரிந்தால், நம் குறவஞ்சி அனுமானத்துக்கு மேலும் தரவுகளைக் காணலாம். நாடகத்தோடு இசையும் நடனமும் சேர்ந்தது குறவஞ்சி. தியாகேசர் குறவஞ்சியில் பாடல்களுக்கு இடையே நடனத்துக்கு உரிய ஜதிக் கோர்வைகள் உண்டு என்கிறார் பிரேமலதா. உலாவுக்கு இது கச்சிதமான அமைப்பு. தேரோட்டம் என்பதே திருவாரூரின் தேரோடும் வீதிகளில் நாடகமாக நிகழ்ந்த குறவஞ்சிதானோ!
- தங்க.ஜெயராமன் | ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: profjayaraman@gmail.com