Published : 12 Sep 2017 08:52 AM
Last Updated : 12 Sep 2017 08:52 AM

மத்திய அரசின் திட்டங்கள் எல்லாம் சமூகப் புரட்சியா?

நி

தியமைச்சர் அருண் ஜேட்லி ,“பொதுச் சரக்கு-சேவை வரியானது ‘ஒரே வரிவிகிதம்-ஒரே சந்தை-ஒரே இந்தியா’ என்பதை உருவாக்கியிருக்கிறது. ‘ஜன்தன்’ யோஜனாவும் ‘ஆதார்’, மொபைல் போன் ஆகியவை இணைந்த ‘ஜாம்’ எல்லா மக்களையும் பொதுவான நிதி, பொருளாதார, டிஜிட்டல் உலகத்தில் இணைத்துவிடும்; எந்த இந்தியரும் பிரதான நீரோட்டத்தைவிட்டு வெளியே இருக்க வாய்ப்பே கிடையாது” என்று பெருமிதப்பட்டிருக்கிறார். ‘ஜன்தன்’ திட்டத்தின் மூன்றாவது ஆண்டு விழாவையொட்டிய ஃபேஸ்புக் பதிவில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். அனைவரையும் சமமாக நடத்த வேண்டும், அனைவருக்கும் சம வாய்ப்பு கிட்ட வேண்டும் என்பதுதான் அரசின் வரையறையாக இருக்கிறது என்ற வகையில் இது வரவேற்கப்பட வேண்டியதே.

‘ஜாம்’ என்று சுருக்கமாக அழைக்கப்படுவது ஏழைகளுக்கான ‘ஜன்தன்’ கணக்கு, ‘ஆதார்’ அடையாள அட்டை, இவ்விரண்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஏழைகளிடம் வங்கிகளில் போடும் அளவுக்குப் பணம் உபரியாக இருக்காது. அதே சமயம், வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்றவற்றுக்கான ஊதியம் அரசினால் இதில் நேரடியாகக் கணக்கில் போடப்படும். அந்தத் தகவல் மொபைல் வழியாகக் கணக்கு வைத்திருப்பவருக்குத் தெரிவிக்கப்படும். சில பணப் பரிமாற்றங்களை மொபைல் மூலம் மேற்கொள்ளவும் வழிசெய்யப்பட்டிருக்கிறது. இதற்காகவே ‘பீம்’ என்ற செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏழைகளுக்கு இதில் நேரடிப் பணப்பயன் கிடைக்கிறது என்பதால், இதை ‘சமூகப் புரட்சி’ என்கிறார் ஜேட்லி.

வங்கிக் கணக்குக்கும் அப்பால்

சமூகநலத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி வேறு எங்கும் கசிந்துவிடாமல் பயனாளிகளுக்கே நேரடியாகப் போய்ச் சேருவதும், ஏழைகள் அரசுடைமை வங்கிகளில் கணக்கு வைத்திருப்பதும் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவையே. ஆனால், இந்த ‘ஜாம்’ மூலமே சமூகத்தின் அனைத்துத் தரப்பையும் பொருளாதார முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுவந்துவிட்டதைப்போலப் பேசுவதுதான் மிகையாகத் தெரிகிறது. எல்லோருக்கும் வங்கியில் கணக்கு இருக்கிறது, எல்லோராலும் மொபைல் போன் வைத்திருக்க முடிகிறது என்பதாலேயே பொருளாதார முன்னேற்றத்தில் அனைவரும் பங்கேற்கின்றனர் என்றாகிவிடாது.

பொருளாதாரத்தில் சம வாய்ப்பு என்றால், ஏழைகளுக்கும் வேலைவாய்ப்பு நிச்சயம் என்பதும், வேலை செய்தால் ஊதியம் உண்டு என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், எல்லோருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். வேலைவாய்ப்பு தானாக உருவாகிவிடாது. பொருட்களுக்கும் சேவைகளுக்கும் தேவை ஏற்படும்போதுதான் வேலைவாய்ப்புகள் உருவாகும். இதற்கு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ பொருளாதாரத் தேவைகள் ஏற்பட வேண்டும்.

தொழிலாளர்களுக்குத் தேவை ஏற்படுகிறது என்றால் உழைக்கத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் வேலை கிடைத்தாக வேண்டும். இதை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் ‘ஜாம்’ திட்டத்துக்குக் கிடையாது. இதற்கு முக்கிய காரணம் ‘ஜாம்’ டிஜிட்டல் உலகுடன் சம்பந்தப்பட்டது. நம்முடைய அன்றாட வாழ்க்கையோ செங்கல்லும் கலவையும் கலந்ததுபோன்ற நிஜத் தன்மையுள்ளது. அன்றாட வாழ்க்கையில் பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்பு சிறிதும் உயரவில்லை. பொருளாதாரச் சீர்திருத்தம் தொடங்கிய காலத்திலிருந்தே இதுதான் நிலவரம்.

1991-ல் அறிமுகமான பொருளாதாரச் சீர்திருத்தம், அரசின் கொள்கைகளை இறுக்கமான நிலையிலிருந்து தாராள நிலைக்குக் கொண்டுசென்றது. இதனால் தொழில் நிறுவனங்கள் எளிதாக உற்பத்தியில் ஈடுபட முடிந்தது. சர்வதேசச் சந்தையில் போட்டியிட வேண்டுமானால் தரம் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்று தொழிலதிபர்களுக்கு உணர்த்திற்று.

தாராளமயம் என்பது சட்டங்களை நீக்குவது, திருத்துவது, புதிதாக எழுதுவது மட்டுமல்ல. தண்ணீர் வழங்கல் முதல் கழிவுகள் மேலாண்மை வரையில் அனைத்துவித அடித்தளக் கட்டமைப்பு சேவைகளையும் மேம்படுத்துவது. இதற்குப் பெருமளவிலான முதலீடு தேவை. இது நம்மிடம் இல்லையே என்று தனியார் நிறுவனங்கள் அஞ்சிப் பின்வாங்கிவிடும். இந்த சேவைகளைத் தனியார் நிறுவனங்கள் அளிக்க முற்பட்டால் செலவும் எக்கச்சக்கமாகிவிடும். இதனால் முக்கியமான உற்பத்தி மேலும் தாமதப்படும். எனவேதான் உலக அளவில் இந்த சேவைகளை அரசே செய்துதருகிறது. இந்தியாவில் இச்சேவைகளை அரசால் இலவசமாகச் செய்துதர முடியாது. தனியாராலும் செய்துகொள்ள முடியாது. காரணம், இந்தியாவில் பெரும்பாலான உற்பத்தி - சேவை போன்றவை சுய வேலைவாய்ப்புகளால் உருவானவை. எனவே, இத்தகைய சேவைகளை அரசே வழங்குவதை அரசின் பொதுக் கொள்கையிலேயே சேர்க்க வேண்டும்.

திறனில் கவனம் தேவை

‘ஜாம்’ என்பது அதிகாரம் வழங்கும் உத்தியும் அல்ல, சமத்துவத்தை உருவாக்கும் ஏற்பாடும் அல்ல. ‘சமத்துவம் என்றால் மனிதர்களுக்குச் சமமான திறனை வழங்குவது’ என்று அமர்த்திய சென் கூறியிருக்கிறார். அது மனிதர்களுக்குச் சமமான செயல் திறனை வழங்குவது. எல்லா மனிதர்களுக்கும் அத்தியாவசியமான செயல் திறன்களை உரிய பயிற்சிகள் மூலம் அளித்திருந்தால் நாம் சமூகப் புரட்சியே செய்துமுடித்திருப்போம். இது எப்போது சாத்தியம் என்றால் சமூகம் முழுவதற்கும் கல்வியும் சுகாதார வசதிகளும் கிடைக்கும் வாய்ப்புகளை உருவாக்கியிருக்க வேண்டும்.

ஆட்சியின் நிர்வாகக் கோளாறுகளால் ஏற்படும் விளைவுகளைப் பார்த்துவருகிறோம். உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களைப் போதிய அளவு கையிருப்பில் வைத்திருக்காததால் ஏராளமான குழந்தைகளை அரசு மருத்துவமனையில் பறிகொடுத்தோம். மும்பையில் ஒரே நாளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் இன்னொரு உதாரணம். சுகாதாரம், கல்வி, கழிவுநீர்க் கால்வாய், திடக்கழிவு மேலாண்மை போன்ற பல அடித்தளக் கட்டமைப்புப் பணிகளில் மிகவும் பின்தங்கியிருக்கும் நாட்டில் ‘ஜாம்’ சாதனை குறித்து அரசு மார்தட்டுவது வியப்பை ஏற்படுத்துகிறது.

‘ஜாம்’ என்பது அரசு தரும் நலநிதியை உரியவரிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் சாதனம் அவ்வளவே. அதுவே சமூகப் புரட்சியாகிவிடாது. அனைத்து இந்தியர்களுக்கும் சமமான திறனை வழங்கி அனைத்திலும் சமவாய்ப்பு அளிக்கும்போதுதான் சமூகப் புரட்சி ஏற்படும். அடித்தளக் கட்டமைப்புகளுக்குப் போதிய ஒதுக்கீட்டை அளித்து, இலக்குகளைச் செய்துமுடிப்பதற்கு அவகாசம் அளித்துச் செயல்படுத்திய பிறகே இது சாத்தியம். ‘ஜாம்’ என்பது டிஜிட்டல் பயன்பாட்டில் சமத்துவத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், அது ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தேவைப்படும் அதிகாரத்தை அளித்துவிடவில்லை. தகவல் தொழில்நுட்பத்தை அரசு சரியாகப் பயன்படுத்தி ‘ஜாம்’ திட்டத்தைக் கொண்டுவந்திருக்கலாம். இதே முறையை உற்பத்தியிலும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் பயன்படுத்த முடியாது. இந்நாட்டின் பெரும்பாலான மக்கள், அதிகாரம் பறிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே இது நடந்தது என்றாலும், மோடி ஆட்சியின் சில சாதனைப் பிரச்சாரங்கள் அவர்களிடையே, ‘நாம் நன்றாக இருக்கிறோம்’ என்ற கற்பனையான திருப்தியை ஏற்படுத்தப் பார்க்கிறது.

சரியும் பொருளாதாரம்

கடந்த சில ஆண்டுகளாகவே தனியார் முதலீடு குறைந்துகொண்டே வருகிறது. அப்படியும் ஒட்டுமொத்த வளர்ச்சிவீதம் பராமரிக்கப்படுவதற்குக் காரணம், பொது முதலீட்டை அரசு அதிகப்படுத்தியதுதான். இப்போது அந்த வளர்ச்சிகூட ஸ்தம்பித்திருக்கிறது. சமீபத்திய, ஜிடிபி வளர்ச்சிவீதம், 2016-17-ம் ஆண்டின் சராசரிக்கும் குறைவாக இருக்கிறது. கடந்த ஐந்து காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி சரிந்துகொண்டே வருகிறது. தன்னுடைய கொள்கைகளுக்குக் கிடைக்கும் வெற்றி தொடர்பாக அரசு சொல்லிக்கொள்வதற்கும், தனியார் மதிப்பிடுவதற்கும் பொருத்தமில்லை. ‘ஜாம்’ தொடர்பான அரசின் எக்களிப்பு இதற்கு நல்ல உதாரணம்!

தமிழில்: சாரி,

©: ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x