

யாழ்ப்பாணத்தின் நிலாவரை எனும் இடத்தில் இயற்கையாக அமைந்த நிலக் கீழ்க் கிணறு ஒன்று உண்டு. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த வற்றாக் கிணறு, அப்பகுதி மக்களின் விவசாயத் தேவைக்கான நீரையும் வழங்குகிறது.
தொல்லியல் இடமாகவும் சுற்றுலாத் தலமாகவும் அமைந்த அந்தக் கிணற்றடியில், அண்மையில் இலங்கை ராணுவத்தினர் சிறிய அளவிலான புத்தர் சிலையை நிறுவினர். இதனால், அப்பகுதி மக்களிடத்தில் மாத்திரமின்றி வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு எழுந்தது. அடுத்த நாளே ராணுவத்தினர் அந்தச் சிலையை எடுத்துச் சென்றனர்.
சட்டவிரோத ஆக்கிரமிப்பு: ஈழத்தில் முல்லைத்தீவு என்ற மாவட்டம் இறுதிப் போர் நடந்த முள்ளிவாய்க்காலை உள்ளடக்கிய பகுதி. அங்கு உள்ள குருந்தூர்மலையில் பழைமையான சிவாலயம் ஒன்று இருந்தமைக்கு ஆதாரங்கள் இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் யாழ் பல்கலைக்கழகத் தொல்லியல் ஆராய்ச்சிக் குழு நடத்திய ஆய்வில், எண்முக சிவலிங்கத்தின் எச்சங்கள் கண்டறியப்பட்டன.
அந்தச் சிவலிங்கத்தின் சாயலில் தமிழ்நாட்டு ஆலயங்களிலும் சிவலிங்கங்கள் இருப்பதைத் தமிழ்நாட்டு ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தினர். ஆனால், அந்தப் பகுதிக்கு வந்த சிங்கள பிக்குகள், அது பௌத்த விகாரை இருந்த இடம் என்றும் அதில் பாரிய பௌத்த விகாரை கட்டப்போவதாகவும் அடாவடி செய்தனர்.
கோத்தபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அங்குபாரிய பௌத்த விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அன்றைய அரசின் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கா நேரில் சென்று அடிக்கல் நாட்டினார். அங்கு விகாரை அமைக்க நீதிமன்றம் தடைவிதித்தது. தமிழர்களின் தொன்மை வாய்ந்த இடத்தில் பௌத்த விகாரை அமைப்பதை உடன் நிறுத்தி, கட்டுமானப் பணிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதையும் மீறி இலங்கை ராணுவம் மற்றும் போலீஸாரின் பாதுகாப்பின் மத்தியில் பௌத்த விகாரை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தசமயத் தலமொன்று சிங்கள பௌத்த விகாரையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதியை மாத்திரமின்றி ஈழத்தின் முழுப் பகுதிகளையும் தமிழர்கள் இழந்துவிடும் அபாய நிலை உருவாகியுள்ளது.
சிப்பாயாக மாற்றப்படும் புத்தர்: ஞானத்தின் உருவகமாகவும் பக்குவத்தின் அடையாளமாகவும் புத்தர் கருதப்படுகிறார். ஆனால், இலங்கையில் புத்தரைப் பயன்படுத்தும் விதமே வேறாக இருக்கிறது. புத்தரை இங்கு ஒரு சிங்கள சிப்பாயாக - தமிழர்களின் ஆலயங்களையும் வாழ் நிலங்களையும் அபகரிக்கின்ற ஆக்கிரமிப்பாளராக மாற்றியிருக்கிறார்கள்.
தங்கள் நிலங்களையும் வீடுகளையும் ஆக்கிரமித்துச் செல்லும் ஒருவராகப் புத்தரைக் கண்டு ஈழ மக்கள் அச்சம் கொள்ளுகிற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் சிங்களப் பெரும்பான்மையின மக்கள் புத்தருக்கு ஏற்படுத்திய முகமும் அடையாளமும் கௌரவமும் இதுதான்.
இப்போது களத்தில் விடுதலைப் புலிகள் இல்லை. போராட்டத்தில் ஈடுபட்ட புலிகள் இயக்க முன்னாள் போராளிகளும் ஒவ்வொருவராக மரணித்துவருகின்றனர். ஈழ மக்கள் ஐந்து பேருக்கு ஒரு ராணுவ வீரர் எனும் விகிதத்தில் ஈழ நிலமெங்கும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
ஊர்கள், நகரங்கள், தெருக்கள் எங்கும் ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனி ஈழம் கேட்டுவிடாதபடிக்கு அரசமைப்பால் மாத்திரமின்றி, ஆட்சியால் மாத்திரமின்றி ராணுவ நிர்வாகக் கட்டமைப்பாலும் ஈழம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போதும் ஏன் புத்தர் ஈழ நிலங்களை அபகரிக்க பயன்படுத்தப்படுகிறார்?
குறிவைக்கப்படும் சிவாலயங்கள்: பொ.ஆ. (கி.பி.) ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் ஈழத்தை ‘சிவபூமி’ என்று அழைத்திருக்கிறார். அந்தளவுக்கு ஈழத்தில் ஈச்சரங்கள் என்கிற சிவாலயங்கள் நிறைந்து காணப்பட்டன. ஈழத்தின் நான்கு திசைகளிலும் சிவாலயங்கள் இருக்கின்றன.
திருக்கோணேச்சரம், திருக்கேதீச்சரம், நகுலேஸ்வரம், முன்னேஸ்வரம், தொண்டீச்சரம் என்று நான்கு திசைகளிலும் ஈழத்தின் மையத்திலும் காணப்படும் இந்த ஆலயங்கள்தாம் ஈழத்தின் பூர்விகக் குடிகள் தமிழர்கள் என்பதற்கான வலுவான ஆதாரங்கள். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தரும், சுந்தரரும் ஈழத்தின் சிவாலயங்களான திருக்கோணேச்சரம் மீதும் திருக்கேதீச்சரம் மீதும் பாடிய பாடல்கள் பக்திப் பாடல்களாக மாத்திரமின்றி ஈழத் தமிழர் வரலாற்று ஆதார மூலங்களாகவும் விளங்குகின்றன.
ஈழத்தில் தமிழர்களுக்கான சம உரிமை மறுக்கப்பட்டு, அவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டபோது தனி ஈழப் போராட்டம் முகிழ்ந்தது. ஆயுதப் போராட்டத்தை இலங்கை அரசு சிதைத்துவிட்டது. இப்போது ஈழத் தமிழர்கள்தாம் இந்தத் தீவின் ஆதிகுடிகள் என்பதற்கான அடையாளங்களாக நிமிர்ந்து நிற்கும் சைவ ஆலயங்களை அழித்துவிட வேண்டும் என்பதிலும், இவற்றின் தனித்துவமான வரலாற்றைத் திரித்துவிட வேண்டும் என்பதிலும் இலங்கை அரசும் இனவாதிகளும் பெரும் வன்மம் கொண்டுள்ளனர்.
இலங்கை அரசின் தொல்லியல் திணைக்களம் என்பது ஈழ மண்ணில் உள்ள தமிழ் அடையாளங்களையும் சைவ அடையாளங்களையும் அழித்து, ஈழத்தை சிங்கள பூமியாக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயல்படுகிற ஓர் அரச திணைக்களம். இன்றைக்கு ஆயுதங்கள் இல்லாமல் சீருடை இல்லாமல், நிலங்களை அபகரிக்கின்ற, ஆலயங்களை ஆக்கிரமிக்கின்ற போரை, தொல்லியல் திணைக்களம் வழியாக இலங்கை அரசு மேற்கொண்டுவருகிறது.
ஈழ மக்கள் மும்முனைப் போரை எதிர்கொண்டிருக்கிறார்கள். ஒரு புறத்தில் ராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கின்றனர்; இன்னொரு புறத்தில் சிங்கள மக்கள் ஈழ மண்ணில் வந்து குடியேறி ஆக்கிரமிக்கிறார்கள். மற்றொரு புறத்தில் தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமிப்பை மேற்கொள்கிறது.
ஆயுதமற்ற தாக்குதல்: தென்னிலங்கையில் இருக்கும் கதிர்காமம் முருகன் ஆலயம், தமிழர்கள் வழிபட்ட தொன்மையான ஆலயம். இன்று அது முழுமையாக சிங்கள ஆலயமாக்கப்பட்டுள்ளது. அதைப் போலத் தென்னிலங்கையில் மாத்தறை என்ற இடத்தில் தென்னாவரம் தொண்டீச்சரம் என்ற பழமையான சிவாலயம் ஒன்று இருந்தது. மாத்தறை என்பதன் பூர்விகத் தமிழ்ப் பெயர் மாதுறை.
அங்கிருந்த சிவாலயம் அழிக்கப்பட்டு, சிவலிங்கம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ‘தேவன்துறை கோயில்’, ‘நாக ரீச நிலாக் கோயில்’ என இந்த ஆலயம் அழைக்கப்பட்டது. இக்கோயிலில் உறையும் சிவபெருமான் தமது சிரசில் பிறை நிலவைச் சூடியிருப்பதனால், ‘சந்திர மௌலீஸ்வரர்’ எனும் திருப்பெயரைக் கொண்டவர். அதைப் போல கொழும்புவில் இரத்மலானையில் இருந்த நந்தீச்சரமும் அழிக்கப்பட்டது.
2009இல் ராணுவ நடவடிக்கை மூலமாக வடக்கு கிழக்கைக் கைப் பற்றிய இலங்கை ராணுவத்தினர், வடக்கு கிழக்கு நகரங்கள், தெருக்கள், முக்கிய இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகளையும் விகாரைகளையும் பௌத்த தூபிகளையும் வைத்தனர். பின்னர், அவற்றைப் பராமரிக்கத் தென்னிலங்கையிலிருந்து பௌத்த பிக்குகளை அழைத்துவந்து குடியேற்றினர்.
தமிழர்களின் நகரங்கள், நிலங்களில் அவர்களின் சமய அடையாளங்கள் இருக்கக் கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு, அங்கே பௌத்த, சிங்கள அடையாளங்களை விதைக்கும் ஆக்கிரமிப்பு நோக்கில்தான் இந்த வேலைகள் நடைபெறுகின்றன. சர்ச்சைக்குரிய கச்சத்தீவிலேயே புத்தர் சிலை வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இது இப்பிரச்சினை புதிய எல்லைக்குள் நுழைவதைக் காட்டுகிறது.
தூலமான ஆயுதப் போர் முடிந்துவிட்ட பிறகும், ஈழ நிலங்களை ஆக்கிரமிக்கும் போர் கத்தியின்றி ரத்தமின்றி நடந்துகொண்டே இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் ஈழ மக்கள் முற்றுமுழுதாக ஈழ மண்ணிலிருந்து துடைத்தழிக்கப்படுவார்கள். சமாதானம், கருணையின் வடிவமான புத்தரை வைத்து ஈழ மக்களின் பூர்விக நில அடையாளங்களை அழிக்கவும், சமயப் பண்பாட்டைச் சிதைக்கவும் முன்னெடுக்கும்ஆக்கிரமிப்பு யுத்தம், உடனே நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் ஈழ மக்களின் கோரிக்கை.