Last Updated : 07 Sep, 2017 10:04 AM

 

Published : 07 Sep 2017 10:04 AM
Last Updated : 07 Sep 2017 10:04 AM

நேற்று நான் கல்புர்கி... இன்று நான் கவுரி லங்கேஷ்!

'கோழையே..!

உன்னிடம் தோட்டாக்கள்

என்னிடம் அழியா வார்த்தைகள்

எதற்கும் அஞ்ச மாட்டேன்.

நான் கவுரி லங்கேஷ்!'

அண்மைக் காலமாக கவுரி லங்கேஷ் (1962-2017) பங்கேற்ற கூட்டங்களில் இவ்வாறு ஓங்கி முழங்கிவிட்டே, இந்துத்துவத்தைச் சரமாரியாக வெளுக்கத் தொடங்குவார். பெங்களூருவில் நடக்கும் பெரும்பாலான முற்போக்கு அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டங்களிலும் அழையா விருந்தாளியாக அவரைப் பார்க்கலாம். சீராக வெட்டப்பட்ட நரை சிகை, ஒடிசலான தேகம், ஜோல்னாப் பையில் புத்தகங்கள், முகம் நிறையப் புன்னகையோடு ஒரு வயதான குழந்தையைப் போல இருப்பார்.

'தி இந்து'வில் தயாராகிவரும் சிறப்பு மலருக்கான கட்டுரைக்காக அண்ணன் சமஸ் நேற்று முன் தினம் மாலையில் பேசினார். அவர் சொன்ன தலைப்பைக் கேட்டதும், “இதற்கு மூத்த பத்திரிகையாளரும் இந்துத்துவ எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ் சரியாக இருப்பார். கர்நாடகத்தில் முக்கியமான அரசியல் விமர்சகராக இருக்கும் அவரிடம் கட்டுரை வாங்கலாம்” என்று சொன்னேன். அடுத்த சில நிமிடங்களில் கவுரி லங்கேஷைக் கைபேசியில் அழைத்தேன். “அலுவலகத்தில் ஒரு கூட்டத்தில் இருக்கிறேன். நாம் விரிவாகப் பேசிய பிறகு, எழுதித் தருகிறேன்” என்றார் வழக்கமான நேசத்தோடு.

அடுத்த சில மணி நேரத்தில், ‘கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார்’ என்று ஊடகங்களில் வெளியான பிரேக்கிங் செய்தி என் இதயத்தைச் சுக்குநூறாக்கியது. அதிர்ச்சியில் படபடப்புடன் உடல் நடுக்கமும் உண்டானது. அம்மா வயதில் இருக்கும், கவுரி லங்கேஷை, மனசாட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு, ஈவிரக்கமில்லாமல் அவரது வீட்டு வாசலுக்கே வந்து சுட்டுக்கொன்றிருக்கிறார்கள். தன் வாழ்நாளில் பெரும் பகுதியை இந்துத்துவத்துக்கு எதிராகவும், மானுடத்தின் விடுதலைக்காகவும் சிந்தித்த, ஊர்ஊராய்ச் சென்று பேசிய, பக்கம் பக்கமாய் எழுதிக் குவித்த, எவருக்கும் அஞ்சாமல் செயல்பட்ட ஒரு அசல் பத்திரிகையாளரைச் சுட்டுக்கொன்றிருக்கிறார்கள்.

சமூக மாற்றத்துக்கான கருவி

மறைந்த கன்னட எழுத்தாளரும், பத்திரிகையாளருமான பி. லங்கேஷ், கர்நாடக முற்போக்கு இயக்கத்தில் மிக முக்கியமான ஆளுமையாக இருந்தவர். பிராமணியமயமாக்கப்பட்ட மடங்களும், சாதி சனாதனச் சடங்குகளும் நிறைந்த கர்நாடகத்தில் தன் கவிதைகள், நாடகங்களின் மூலம் சீர்த்திருத்தக் கருத்துக்களை விதைத்தவர் லங்கேஷ். சமூகநீதியை நிலைநாட்ட 'லங்கேஷ் பத்திரிகை' என்ற வார இதழைத் தொடங்கி , தீவிரமான அரசியல் கட்டுரைகளை எழுதியவர்.

தன் தந்தை பெரிய பத்திரிகை ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் திகழ்ந்தபோதும் அவரது நிழலில் கவுரி நிற்கவில்லை. டெல்லியில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகையில் செய்தியாளராகப் பணிக்குச் சேர்ந்தார். சில ஆண்டுகள் ‘சன்டே’ இதழிலும் பணியாற்றிய பிறகு, பெங்களூரு திரும்பியதும் வேறு இதழ்களில் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். தந்தையின் மறைவுக்குப் பின், ‘லங்கேஷ் பத்திரிகை’யின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற கவுரி, தன் தந்தையைப் போலவே முற்போக்குக் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளித்தார். வாராவாரம் நிகழும் அரசியல், சமூகப் போக்குகளை அவதானித்து, அவற்றுள் மறைந்திருக்கும் உள் அரசியலை அம்பலப்படுத்தினார்.

இந்து மதத்தின் மனுதர்மத்தையும், ஏற்றத்தாழ்வை உருவாக்கிய சாதி அமைப்பையும், பெண்ணை அடிமையாக்கிய சடங்குகளையும் வீரியத்தோடு எதிர்த்தார். இதனால் ஆர்எஸ்எஸ், பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத் மட்டுமல்லாமல் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என எல்லோரின் எதிர்ப்புக்கும் ஆளானார். 10-க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை சந்தித்த கவுரி லங்கேஷ், அண்மையில் பாஜக எம்பி பிரஹலாத் ஜோஷி தொடுத்த வழக்கில் தண்டிக்கப்பட்டார். அப்போது, “மோடியின் பக்தர்கள் என்னை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ள முயற்சிக்கிறார்கள்” என்றார்.

இந்துத்துவ எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, மூட நம்பிக்கை ஒழிப்பு உள்ளிட்டவற்றுக்காக முதல் ஆளாக கவுரி லங்கேஷ் களத்தில் நின்றார். பரபரப்புக்காக எதையோ எழுதித் தள்ளிவிட்டுப் போகாமல், உண்மையின் பக்கம் நின்று சம்பவங்களை அணுகினார். இதனால் பெங்களூருவில் இருக்கும் பெரும்பாலான இளம் பத்திரிகையாளர்களுக்கு அவர் ஆதர்சமாக இருந்தார். ‘பத்திரிகையாளர் மன்ற’த்துக்குள் அவர் நுழைந்தால், திரும்பவும் காரில் ஏறுவதுவரை இளையோர் கூட்டம் அவரை மொய்க்கும்.

நக்சலைட் மறுவாழ்வும், மூடநம்பிக்கை சட்டமும்

2000-களின் தொடக்கத்தில் கர்நாடகத்தில் ‘பசுமை வேட்டை’ என்ற பெயரில் நக்சலைட்டுகளை அழிப்பது சூடுபிடித்தது. பத்திரிகையாளர்கள் காட்டுக்குள் நுழையவும், நக்சலைட்களைப் பற்றி எழுதவும் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டன. குதிரேமுக், மங்களூரு, சிக்மகளூரு பகுதியில் மலைகளில் வாழ்ந்த அப்பாவிப் பழங்குடிகளும் தலித்துகளும் ஏழைகளும் சூறையாடப்பட்டனர். கெடுபிடிகளைத் தாண்டிக் காட்டுக்குள் போன கவுரி லங்கேஷ் அப்பாவிகளையும், நக்சலைட்களையும் பேட்டியெடுத்து வெளியிட்டார். அப்போது வெளியான சாகீத் ராஜன் உள்ளிட்டோரின் பேட்டிகள் அரசு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தின. இதையடுத்து கவுரி லங்கேஷ், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய நக்சலைட் மறுவாழ்வுத் திட்டத்தை உருவாக்கினார். இதனால் மேற்குத் தொடர்ச்சி மலையில் இப்போது தோட்டாக்கள் வெடிக்கும் சத்தம் நின்று, மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.

இதேபோல, எச்சில் இலைமீது தலித்துகள் உருளும் சடங்கு, அந்தரத்தில் முதுகில் அலகு குத்திக்கொண்டு தொங்குவது, நிர்வாண பூஜை, நரபலி போன்று கர்நாடகக் கோயில்களில் தொடரும் மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்கச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கவுரி லங்கேஷ் எழுதிவந்தார். இதற்காக முதல்வர் சித்தராமையாவை அடிக்கடி சந்தித்து வலியுறுத்திக்கொண்டே இருந்தார். சில மாதங்களுக்கு முன், 'காரின்மீது காக்கை அமர்ந்ததால், ஆட்சிக்கு ஆபத்து என்று நினைத்து சித்தராமையா காரை மாற்றிவிட்டார்' என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. அன்று காலையே சித்தராமையாவின் வீட்டுக்கு நேராகச் சென்ற கவுரி லங்கேஷ், “மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவருவதாகச் சொன்ன நீங்களே இப்படி பண்ணலாமா?” என உரிமையோடு சண்டை போட்டார். உண்மையைக் கண்டறிந்த பிறகு, “சித்தராமையா காரை மாற்றவில்லை. ஏனென்றால் அவர் எடியூரப்பா இல்லை” என்று கட்டுரை எழுதினார்.

கருத்துரிமைக்கான குரல்

நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்துத்துவா அமைப்பினருக்கு எதிராக கவுரி லங்கேஷ் கர்ஜித்தார். மறைந்த கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தி கொலை மிரட்டலுக்கு ஆளானபோது, அவருக்குத் தைரியமூட்ட தினமும் வீட்டுக்குப் போய் வந்தார். 'மாதொருபாகன்' நாவலுக்காக பெருமாள் முருகனை சாதிவெறி அமைப்பினர் மன்னிப்பு கேட்க வைத்தபோது, அவருக்காக கர்நாடகத்தில் கவுரி லங்கேஷ் குரல் கொடுத்தார். ரோஹித் வெமூலா சாம்பலாக்கப்பட்டபோது, 'குற்றவாளிகளைத் தண்டியுங்கள்' என்று துடித்தார்.

காவிரி விவகாரத்தில் பெங்களூருவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது, கன்னட அமைப்பினரைக் கண்டித்தார். கன்னடத் தொலைக்காட்சி அலைவரிசையில் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக கன்னட ஊடகங்கள் கொந்தளித்தபோது, கவுரி லங்கேஷ் 'இடியட் பாக்ஸ்' என நெருப்பாகக் கொதித்தார். கடைசியாக, கொல்லப்படுவதற்கு முன்புகூட, ரோஹிங்கியா இஸ்லாமியரை இந்தியாவை விட்டு வெளியேற்றக் கூடாது என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். இப்படி நாட்டின் எந்த மூலையில் அடக்குமுறை நடந்தாலும், அதற்கு எதிரான போர்க்குரலாக கவுரி லங்கேஷ் ஒலித்தார்.

'ஜெய் பீம்' முழக்கம்

மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, கவுரி லங்கேஷ் இன்னும் வேகத்தோடு இந்துத்துவத்தை எதிர்த்தார். இதனால் ஏராளமான கொலை மிரட்டல்களுக்கும் பாலியல் பலாத்கார மிரட்டல்களுக்கும் ஆளானார். காந்தியைப் போல, கல்புர்கியைப் போல என்னைக் கொன்றாலும், எனது பணியை நிறுத்த மாட்டேன். 'நாளை நடக்கக் கூடியது இன்றே நடக்கட்டும். இன்று நடக்கக் கூடியது, இப்போதே நடக்கட்டும். இங்கே யாரைக் கண்டு அச்சம்?' என்ற பசவண்ணரின் வசனத்தைக் கூறி, பதிலடி கொடுத்தார் கவுரி லங்கேஷ்.

இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராக வெடித்துக் கிளம்பிய ரோஹித் வெமூலாவை கவுரி லங்கேஷ் ஆச்சரியத்துடன் பார்த்தார். மோடியின் பக்தர்களிடமிருந்து இளைஞர்களாலே இந்தியாவைக் காப்பாற்ற முடியும் என நம்பினார். ஜே.என்.யு. மாணவர் தலைவர் கன்னையா குமார், குஜராத் உனா தலித் போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஜிக்னேஷ் மேவானி, ஜெய் பீம் ஆர்மி சந்திரசேகர் ஆகியோரைத் தனது சொந்தப் பிள்ளைகளாகவே பாவித்தார். அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் வலியுறுத்தும் புரட்சியாளர் அம்பேத்கரின் 'ஜெய் பீம் கோஷமே' பன்முக இந்தியாவை மீட்டெடுக்கும் என முழங்கிக்கொண்டே இருந்தார்.

அந்த குரல் இப்போது, 'நேற்று நான் கல்புர்கி. இன்று நான் கவுரி லங்கேஷ்' என திக்கெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

-இரா. வினோத்,

தொடர்புக்கு: vinoth.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x