விளைநிலம் மட்டுமல்ல, விலங்குகளின் உயிரும் முக்கியம்!

விளைநிலம் மட்டுமல்ல, விலங்குகளின் உயிரும் முக்கியம்!
Updated on
1 min read

உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் எனப் பொதுவாகச் சொல்லிவிடுகிறோம். ஆனால், அதை நடைமுறையில் கடைப்பிடிக்கிறோமா என்பதுதான் கேள்வி. சமீபத்தில் வெளியான இரண்டு செய்திகள் இந்தக் கேள்வியை மிகத் தீவிரமாக முன்வைக்கின்றன.

முதலாவது, தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழந்த சம்பவம். இரண்டாவது, மதுரை மாவட்டம் பூலாங்குளம் கிராமத்தில் 30 மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம். வயல்வெளிகள் சேதமாவதைத் தடுக்கும் நோக்கில் நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் என்பதுதான் இரண்டு சம்பவங்களுக்கும் பொதுவான அம்சம்.

கடந்த சில ஆண்டுகளாகவே, மனித–விலங்குகள் எதிர்கொள்ளல் ஒரு பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. ‘வயல்வெளிகள், தோப்புகளில் யானைகள் அட்டகாசம்’ என்கிற தலைப்பில் முன்வைக்கப்படும் செய்திகள், காட்டுயிர்கள் தரப்பின் நியாயத்தைப் புறந்தள்ளிவிடுகின்றன.

எந்த உயிரினமும் மனிதர்களுக்கோ அவர்களின் உடைமைகளுக்கோ சேதத்தை விளைவிக்கும் நோக்கம் கொண்டவையல்ல. உணவு, குடிநீர் உள்ளிட்ட தேவைகள் வனப் பகுதிகளில் பூர்த்தியடையாத சூழல் ஏற்பட்டால்தான் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு வன விலங்குகள் வருகின்றன.

யானைகள் அவற்றின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்படுவதால், மக்கள் வாழும் இடங்களுக்கு வருகின்றன. தருமபுரி சம்பவத்தைப் பொறுத்தவரை, மனித–விலங்கு எதிர்கொள்ளல், விலங்குகளால் ஏற்படும் பயிர்ச்சேதம் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்ட குழு (Anti-depredation squad), இந்த யானைக் கூட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்துவந்திருக்கிறது.

அக்குழுவின் கண்காணிப்பையும் மீறி இந்தத் துயரச் சம்பவம் நடந்திருக்கிறது. இப்படியான சம்பவங்கள் உயிர்ச்சூழலில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றன. இந்தச் சம்பவத்தில் நல்வாய்ப்பாக இரண்டு யானைக் குட்டிகள் உயிர் தப்பின என்றாலும் அவற்றை மீண்டும் யானைக் கூட்டத்துடன் சேர்ப்பது வனத் துறையினருக்குச் சவாலாக மாறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

யானைகள் உயிரிழக்கக் காரணமான மின்வேலியை அமைத்த விவசாயி மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை. யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளால் பயிர்ச்சேதம், உயிர்ச்சேதம் ஏற்படுவது உண்மைதான். ஆனால், அவற்றைத் தடுக்க மின்வேலிகளை அமைக்கச் சட்டம் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. ஆனால், விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் வனத் துறையினரால் முறையாகக் கட்டுப்படுத்தப்படுகிறார்களா என்பது ஆய்வுக்குரியது.

மதுரை மாவட்டத்தில் மயில்கள் கொல்லப்பட்ட சம்பவமும் வனத் துறை காட்டிய அலட்சியத்தால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 2018இல் இம்மாவட்டத்தின் மருதங்குளம் கிராமத்தில் 47 மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நிகழ்ந்திருக்காது என காட்டுயிர் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மனித - விலங்கு எதிர்கொள்ளலைத் தவிர்க்க கண்காணிப்புக் கேமரா பொருத்துவது உள்ளிட்ட பணிகளுக்காக மாநில அரசு கணிசமான நிதி ஒதுக்கவே செய்கிறது; அது மட்டும் போதாது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஆக்கிரமிப்புகளை அகற்றி, யானை வழித்தடங்களை மீட்டெடுப்பது என அரசு இன்னும் தீவிரமாகச் செயல்பட்டாக வேண்டும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in