Published : 17 Jul 2014 10:00 AM
Last Updated : 17 Jul 2014 10:00 AM

அமைதியான ஆசியா சாத்தியமா?

அண்டை நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகள்தான் காலம்காலமாக உலக அமைதிக்குப் பேராபத்தாக இருந்து வந்திருக்கின்றன. தற்காலப் புவியரசியலும் அதற்கு விதிவிலக்கல்ல. இஸ்ரேல்-பாலஸ்தீனம், உக்ரைன்-ரஷ்யா, தென் கொரியா-வட கொரியா, இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-சீனா என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்த நாடுகளின் தலைவர்கள் சந்தித்துக்கொள்வது மிகமிக அரிதாகத்தான் நிகழும். அப்படிச் சந்தித்துக்கொள்ளும்போது நட்புறவோடு அவர்கள் உரையாடிக்கொள்வது பெரும் அதிசயம். எனவேதான், ‘பிரிக்ஸ்'

அமைப்பு நாடுகளின் மாநாட்டுக்காக பிரேசிலுக்குச் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்தது சமாதான நடவடிக்கைகளின் முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. மோடியும் ஜின்பிங்கும் சுமார் 80 நிமிடங்கள் இருதரப்பு உறவுகள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்கள்.

மோடியின் முந்தைய நிர்வாகச் சிறப்புகளை ஜின்பிங்கும், ஜின்பிங்கின் அக்கறை மிகுந்த அணுகுமுறையை மோடியும் பாராட்டிப் பேசியிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக, வரும் நவம்பர் மாதம் சீனாவுக்கு வர வேண்டும் என்றும், ஆசிய-பசிபிக் நாடுகளின் மாநாட்டில் பார்வையாளராகப் பங்கேற்க வேண்டும் என்றும் ஜின்பிங் மோடிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்த அழைப்பைப் பரிசீலிப்பதாக மோடி தரப்பில் பதில் தரப்பட்டுள்ளது. அதே சமயம், செப்டம்பர் மாதம் தான் இந்தியா வருவதை உறுதிப்படுத்தியிருக்கிறார் ஜின்பிங்.

இரு நாடுகளுக்கும் இடையில் ஆண்டுக் கணக்காக நீடித்துவரும் எல்லைப் பிரச்சினைகள்தான் இந்தச் சந்திப்பின் மையம். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாகப் பேசி இதைத் தீர்க்கலாம் என்று ஜின்பிங் கூறியிருக்கிறார். தீர்வு ஏற்படும்வரை எல்லையில் அத்துமீறலோ பதற்றமோ ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மோடி வலியுறுத்தியிருக்கிறார்.

கைலாச–மானசரோவர் யாத்திரைக்கு இமாசலப் பிரதேசம் வழியாகச் செல்வதற்கு அனுமதியும் கோரப்பட்டிருக்கிறது. அதைப் பரிசீலிப்பதாக சீன அதிபர் ஆமோதித்திருக்கிறார்.

இந்தச் சந்திப்பில் பொருளாதாரமும் முக்கிய இடத்தை வகித்தது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பற்றுவரவில் சீனா ஏற்றுமதி செய்வது அதிகமாகவும் இறக்குமதி செய்துகொள்வது குறைவாக இருப்பதையும் சுமார் ரூ.1,75,000 கோடிக்குத் துண்டுவிழுவதையும் மோடி சுட்டிக்காட்டியிருக்கிறார். இதைச் சரிசெய்வதாக சீன அதிபர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்தியாவில் புதிய சாலைகளை அமைக்கவும் அடித்தளக் கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் சீனா முதலீடு செய்யலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளில் அடித்தளக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற் காகத் தொடங்கப்படவுள்ள புதிய வங்கிக்கு இந்தியா தொடக்க கால உறுப்பினராகவும், அதன் நிறுவனர்களில் ஒருவராகவும் இருக்க வேண்டும் என்றும் அழைத்திருக்கிறார் சீன அதிபர். மேலும், 2001-ல் ஆரம்பிக்கப்பட்ட ஷாங்காய் கூட்டுறவு நிறுவனம் என்ற அமைப்பில் இந்தியா சேர்ந்துகொள்ள வேண்டும் என்று ஜின்பிங் கோரிக்கை விடுத்திருக்கிறார். இந்தியாவும் சீனாவும் இந்த அளவுக்கு நெருங்கிவந்திருப்பது இந்த மாநாட்டுக்குக் கிடைத்த பெரும் வெற்றி என்றே சொல்ல வேண்டும்!

இரு பெரும் நாடுகளான சீனாவும் இந்தியாவும் பரஸ்பரம் பொருளாதார ஒத்துழைப்பை வளர்த்துக்கொண்டு சமரசத்தை ஏற்படுத்திக்கொண்டால், ஆசியக் கண்டத்துக்குப் பெரும் நிம்மதி ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, அமைதியான ஆசியா என்ற இலக்கை நோக்கிய சிறு காலடியாக இந்தப் பேச்சுவார்த்தை அமையுமென்றால், நிச்சயம் நாம் அதை வரவேற்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x