

தமிழில் பிரிட்டிஷ் காலத்திலிருந்தே பெண்கள் எழுதத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், பெண்கள் தங்கள் உலகத்தைப் படைப்பு களுக்குள் வைத்தது பிறகுதான் நடந்தது. பெண்ணியம் என்கிற சித்தாந்தம் இயல்பான கதைகளில், கவிதை களில் வெளிப்படத் தொடங்கியது. இந்த வரிசையில் முக்கியமானவர் அம்பை. தமிழில் இவர் உருவாக்கிய சிந்தனைப் பள்ளியின் தொடர்ச்சி என இன்றைக்கு வரை தொடரும் பெண் எழுத்தாளர்களைச் சொல்லலாம்.
அம்பை, 1944இல் கோயம்புத்தூரில் பிறந்தவர். பதின்ம வயதில் எழுதத் தொடங்கினார். தன் எழுத்துகளைத் தானே மதிப்பிட்டுத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டார். ஆடுகளும் மாடுகளும் லட்சக்கணக்கான சிற்றுயிர்களும் ஆண்களும் வாழும் இந்தச் சமூகத்தில் பெண்களின் இடம் என்ன என்கிற கேள்வியை அவர் தன் கதைகளின் மையமாகக் கொண்டார். சாமானியப் பெண்களின் நிலையை அவர்களுக்கு அருகில் சென்று பதிவுசெய்துள்ளார். சொல்லும் தொனியில் இயல்பை உறுதிப்படுத்தினார் அம்பை. தங்கள் வாழ்க்கையில் அமிழ்ந்திருக்கும் பெண்களின் கள்ளங்கபடத்தை அழகாகத் தன் கதைகளில் வெளிப் படுத்தினார். இவருக்கு 2021ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது.
எண்பதுகளின் இறுதியில் தமிழ்க் கவிதையுலகுக்குள் நுழைந்தவர் சுகந்தி சுப்ரமணியன். சுகந்தியின் கவிதைகளில் வெளிப்பட்ட சுதந்திரம் விசேஷமானது. கவிதைக்கான தனித்த பொருள், மொழி என்ற பெரும் பிரயத்தனங்கள் சுகந்தியின் கவிதைகளுக்கு இல்லை. எல்லாக் கவிதைகளிலும் அபூர்வமான வெள்ளந்தித்தனம் பொதிந்திருக்கும். அது இயல்பாகப் பெண்களின் இருப்பைச் சித்தரிக்கும். தன் வாழ்க்கையையே உதாரணமாக மாற்றிப் பெண்களின் உலகத்தை சுகந்தி தன் கவிதைகளில் சொல்லியிருப்பார்.
தொண்ணூறுகளின் மறுமலர்ச்சிக் காலத்தில் எழுதவந்தவர்களில் ஒருவர் மாலதி மைத்ரி. இவரது கவிதைகள் பெண்ணின் உடலை, அதன் உடனான மனதைச் சித்தரிப்பவை. பெண்ணின் உடல் குழந்தைப் பருவத்திலிருந்து அடையும் மாற்றத்தை விந்தையாக நோக்கும் இவரது கவிதைகள், அதனால் பெண்கள் அடையும் மனச் சிதைவையும் சொல்கின்றன. கூற்றுமொழியில் செறிவும் உவமைப் பொருளில் செவ்வியல் தன்மையும் கொண்டவை இவரது கவிதைகள்.
பரபரப்பான இந்த உலகிலிருந்து, வாழ்க்கையிலிருந்து தனித்திருக்கும் பெண்களின் தனிமையைத் தன் கவிதைகள் வழியே சித்தரித்தவர் சல்மா. மத, சமூகக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு பெண்ணின் நிலையை அதன் இயல்புடன் சொன்னார். குடும்பம், கலவி என எல்லாவற்றிலும் பெண்கள் வகிக்கும் பங்கு என்ன என்பதை அதன் பச்சையான யதார்த்தத்துடன் அவரது படைப்புகள் பதிவுசெய்தன. இவரது நாவல் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ இந்த வகையில் முக்கியமானது.
பெண்கள் அதுவரை பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளாத மனத்தின் இருட்டைத் தன் கவிதைகளின் மூலம் ஒளியேற்றிக் காட்டியவர் குட்டிரேவதி. பெண்கள் பாதுகாத்துக்கொள்ளும் உடலை அவர்களுக்கே காண்பித்தவை இவரது கவிதைகள். இது அவரது ஒரு அம்சம்தான். ஆண்/பெண் உறவுகளுக்கு இடையிலான பாசாங்குகளைப் பெண்கள் பக்கம் நின்றும் குட்டிரேவதி சொல்லியிருக்கிறார்.
பெண் என்னும் அடையாளம் உள்ளும் புறமுமாக நிகழ்த்தக்கூடிய பாதிப்புகளைத் தன் கவிதைகள் வழிச் சொன்னவர் கனிமொழி கருணாநிதி. பெண் என்னும் தனி மனுஷியின் அடையாளமே ஒரு புனைவு எனக் கவிதையில் சொல்கிறார். கடவுளர், வீட்டார், உறவுகள் எல்லாம் பெண் என்னும் சொல்லப்பட்ட அடையாளத்தை உருவாக்க எடுத்துக் கொள்ளும் பிரயத்தனங்கள் எனத் தன் கவிதைகள் வழிக் கண்டறிந்துள்ளார்.
லீனா மணிமேகலையின் கவிதைகள் பெண்ணுடலைப் பாடுபவை. பெண் எனும் பிறவியை ஆராதிக்கும் இவரது கவிதைகள் மொழியளவிலும் கவித்துவம் கொண்டவை. உலக அளவில் முன்னெடுக்கப்பட்ட உடல் அரசியல் கவிதைப் போக்குடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய தமிழ்க் கவிதைகள் இவை. நிலா தேய்ந்து வளர்வதற்கும் பெண்ணுடலுக்குமான உறவை லீனாவின் வரிகள் கவித்துவம் ஆக்குகின்றன. பெண்ணின் எந்தெந்த இயல்புகள், உடல் உறுப்புகள் பண்பாட்டின் பெயரால் விலக்கிவைக்கப் படுகின்றனவோ அவற்றை லீனா தன் கவிதைகள் வழி கொண்டாடுகிறார்.
அ.வெண்ணிலாவின் எழுத்துகள் பெண் என்கிற தன்னிலையில் அவர்களின் ஒரு துண்டு வாழ்க்கையை வெளிப்படுத்துகின்றன. எளிய நம்பிக்கையுடன் வாழும் வெண்ணிலாவின் பெண்கள் அடையாளச் சிக்கலுக்கு எதிராகப் புரட்சிசெய்பவர்கள் அல்ல. ஆனால், அவர்களின் அன்றாடத்துக்குள் நடக்கும் சம்பவங்கள் அவர்களை எப்படிப் பாதிக்கின்றன எனப் பகிர்வதன் வழி தங்களை வெளிப்படுத்துபவர்கள். பொருளாதாரத் தேவைக்காக வேலைக்குச் சென்றாலும் குடும்ப அமைப்புக்குள் பெண்ணாக இருப்பதன் நிதர்சனத்தை அ.வெண்ணிலா சொல்லியிருப்பார்.
புனிதங்களின் பாரம் தாங்காமல் குடைசாயும் பெண்ணுடலைக் காத்திரமாக அறிவிப்பதுதான் சுகிர்தராணியினுடைய கவிதைகளின் ஓர் ஆதாரமான அம்சம். தான் காணும் காட்சிகளையும் இந்த உடலின் அம்சமாகவே சுகிர்தராணி பார்க்கிறார். அதை ஒரு தார்ச்சாலையை வெற்றுடம்புடன் ஒப்பிட்டுப் பார்க்கிறது அவரது ஒரு கவிதை. புறக் காட்சிகளின் பிரம்மாண்டத்தைத் திரும்பத் திரும்பக் கவிதைகளுக்குள் பெண்ணுடலாகப் பிரதிஷ்டை செய்கிறார் சுகிர்தராணி.
பெருந்தேவியின் கவிதைகள் பெண்களுக்கு என உருவாக்கப்பட்டிருக்கும் கற்பிதங்களைக் கேள்விக்கு உள்ளாக்குபவை. ஆண்/பெண் உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களையும் இவரது கவிதைகள் சித்தரிக்கின்றன. அவை பெண்களின் எளிய காதலைத் தீவிரமாக வெளிப்படுத்துபவை. பெண்களின் காதலுக்கு ஆண்டாள் காலத்துச் செவ்வியல் தன்மையை ஏற்றுபவை.
தனி மனித அனுபவமாக உள்ளே ஒடுங்கியிருந்த கவிதையை வெளிக்கு கொண்டுவந்தவர்களுள் இளம்பிறையும் ஒருவர். ஆணாதிக்கச் சமூக நிலையில் பெண்ணாக இருப்பதன் நிதர்சனத்தை வெளிப்படுத்துவதே இளம்பிறை எழுத்தின் பணி. கவிதை அனுபவத்துடன் ஆணாதிக்கச் சமூகத்தை, சமூக அவலங்களை, ஆண்-பெண் உறவு முரண்களையும் சொன்னவை இளம்பிறையின் எழுத்துகள்.
சர்வதேச மகளிர் நாள்: மார்ச் 8.
- தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in