Published : 18 Sep 2017 10:06 AM
Last Updated : 18 Sep 2017 10:06 AM

வரலாறு என்ன வைத்திருக்கிறது நவாஸ் ஷெரீபுக்கு?

ரலாறு எப்போதுமே தானாகத் திரும்பிவிடுவதில்லை பாகிஸ்தானில்; மற்றெல்லா நாட்டுப் பிரதமர்களைப் போல தானும் 70-வது சுதந்திர தினத்தன்று கொடியேற்றி வைத்து உரை நிகழ்த்தப்போகிறோம் என்று பிரதமர் நவாஸ் ஷெரீஃப் நினைத்திருக்கக் கூடும். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாகப் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். பாகிஸ்தானின் தந்தை முகம்மது அலி ஜின்னா கனவு கண்ட சமத்துவ -வளமான பாகிஸ்தானை அடையும் இலக்குக்கு வெகு சமீபத்தில் நாட்டைக் கொண்டுவந்துவிட்டோம் என்று நாட்டு மக்களிடையே தொலைக் காட்சியில் உரை நிகழ்த்த அவர் சிந்தித்திருக்கக்கூடும்.

சொந்த ஊரான லாகூரில், மினார்-இ-பாகிஸ்தான் என்ற பொது இடத்திலிருந்து மக்களிடம் பேச வேண்டிய உரையைக் கூட அவர் தயாரித்து வைத்திருக்கக்கூடும். பாகிஸ்தானின் 19-வது பிரதமராகப் பதவி ஏற்று தான் நிகழ்த்திய சாதனைகளையும், தன்னுடைய அரசின் நேர்மையான செயல்களையும் பட்டியலிட விரும்பியிருந்திருக்கலாம்.

தனக்கு முன்னால் பிரதமர் பதவி வகித்த ஒருவர் கூடத் தங்களுடைய முழு பதவிக் காலத்தையும் பூர்த்திசெய்ததில்லை என்ற கூற்று தன்னால் முறியடிக்கப்பட்டுவிடும் என்றுகூடக் கூற அவர் எத்தனித்திருப்பார். ஆனால், பதவியை இழந்து லண்டனுக்குச் செல்ல வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்றுவரும் தனது மனைவியைக் கவனித்துக்கொள்கிறார் நவாஸ்.

ஆட்டக்காரர்கள் யார் யார்?

2013-ல் பிரதமராக அவர் பதவியேற்றபோது மூன்றாவது முறையாகப் பிரதமராகும் அதிர்ஷ்டம் பெற்றவர் என்று எல்லோரும் பாராட்டினார்கள். அந்த அதிர்ஷ்டம் முழு பதவிக் காலத்தையும் கழிப்பதற்கு உதவவில்லை. மாறாக, மூன்று முறை பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், மூன்று முறையும் பதவிக் காலத்தை முடிக்க முடியாமலேயே பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்டார் என்பதே இனி பேசப்படும். பதவியிலிருந்து அகற்றப்படுவது மூன்றாவது முறையாக இருந்தாலும், ‘வரலாறு திரும்புகிறது’ என்ற சொலவடை இப்போது பொருந்தாது.

பாகிஸ்தானின் 70 ஆண்டு சுதந்திர வரலாற்றைப் பார்க்கும்போது சிவிலியன்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோ அல்லது ராணுவத்தால் நியமிக்கப்பட்டோ பிரதமராகப் பதவியிலிருந்து காலத்துக்கு இணையாக சர்வாதிகாரிகளும் ஆட்சி நடத்தியிருக்கின்றனர். எண்ணிக்கையில் சொல்வதானால் 2011-ல் அதுவரை சர்வாதிகாரிகள் ஆண்டதைவிட சிவிலியன்கள் ஆண்ட ஆண்டுகள் சற்றே அதிகம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத சிவிலியன்கள் பதவியில் இருந்தபோது அவர்கள் ராணுவத்தின் ஆதரவில்தான் இருந்தார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. பாகிஸ்தானின் அரசியல் மீது ராணுவம்தான் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நீதித் துறை, நாடாளுமன்றம் போன்றவையும் அரசியல் ஆதிக்கத்துக்கு ஆசைப்படுகின்றன. 1958 முதல் 2008 வரையிலான 50 ஆண்டுகளில் ராணுவத்துக்கிருந்த கேள்விகளுக்கு அப்பாற்பட்ட செல்வாக்கில் பங்கு கோரி, இப்போது பிற அமைப்புகளும் போட்டியிடுகின்றன.

முதல் முறை அல்ல!

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை நீதித் துறை பதவியிலிருந்து நீக்குவது இது முதல்முறையல்ல. ஆனால், மீதி எல்லா சந்தர்ப்பங்களிலும் ராணுவம் அல்லது அதிபரின் பங்குக்குத் துணையாகத்தான் நீதித் துறை செயல்பட்டிருக்கிறது. 1993-ல் நவாஸ் ஷெரீஃப் பிரதமர் பதவியிலிருந்து முதல் முறை அகற்றப்பட்டபோது, அரசியல் சட்டத்துக்குக் கொண்டுவரப்பட்ட எட்டாவது திருத்தம் கையாளப்பட்டது. அரசியல் சட்டத்தின் 58 2(பி) பிரிவு, நாடாளுமன்றத்தையே கலைக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கிறது. பேநசீர் புட்டோ (1991, 1996) நவாஸ் ஷெரீஃப் இருவருமே இச்சட்டப் பிரிவின்படி பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். குலாம் இஷ்ஹாக் கான் அதிபராக இருந்தபோது, இந்த மூன்று நீக்கங்களும் இடம்பெற்றன. 1999-ல் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப், பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான அரசைக் கலைத்துவிட்டு, மூன்றாவது முறையாக ராணுவ சர்வாதிகார ஆட்சியைக் கொண்டுவந்தார். ‘நாட்டின் நன்மைக்கு அவசியம்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் 1958, 1977 மற்றும் 1999 ஆண்டுகளில் ஆட்சிக் கலைப்பை நீதித் துறை ஆதரித்து அம்முயற்சிகளுக்கு அரசியல் சட்ட - நீதித் துறை ஆதரவை வழங்கியிருக்கிறது.

ராணுவத்தின் வல்லாதிக்கத்திலிருந்து நாட்டின் அரசியல் நிகழ்வுகளை நகர்த்தும் பணியில் ஊடகங்கள், ஜனநாயக ஆதரவு இயக்கங்கள் ஆகியவற்றுடன் நீதித் துறையும் சேர்ந்துகொண்டது 2007-08 காலத்தில் நடந்தது. அதை ‘வழக்கறிஞர்களின் இயக்கம்’ என்று அழைத்தார்கள். ராணுவத்துக்கு ஏவலாளியாக இருப்பதைவிட, தன்னுடைய சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் நிலைநாட்ட நீதித் துறை முற்படுகிறது என்ற நம்பகத்தன்மை அப்போது ஏற்பட்டது. இப்படி நம்பிக்கை வைக்கப்பட்ட நீதித் துறைதான் கடைசியாக இழந்த 3 பிரதமர்களில் இருவரின் பதவியைப் பறித்துள்ளது. பாகிஸ்தான் அரசியலில் 2008-ல் ஏற்பட்ட புதிய திருப்பத்துக்குப் பிறகு, நீண்ட நாட்கள் பதவியிலிருந்த யூசுப் ராஜா கிலானி (பாகிஸ்தான் மக்கள் கட்சி), நவாஸ் ஷெரீஃப் (பாகிஸ்தான் முஸ்லிம் லீக்) ஆகியோரின் பதவிகளைப் பறித்துள்ளது.

நான் நிரபராதி

நவாஸின் பதவிப் பறிப்பு முந்தைய இரண்டு சம்பவங்களிலிருந்து மாறுபட்டிருந்தது என்பதுடன் கிலானியின் நீக்கத்திலிருந்தும் வேறுபடுகிறது. பேநசீர் புட்டோவின் படுகொலைக்குப் பிறகு பதவியை நிரப்புவதற்காக அமர்த்தப்பட்டவர்தான் கிலானி. புட்டோக்களே கட்சியின் தலைவர்களாகவும் பிரதமர்களாகவும் இருந்துள்ளனர். பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராக இப்போது ஆசிஃப் சர்தாரி பதவி வகிக்கிறார். ஆனால், நவாஸ் ஷெரீஃப்போ பாகிஸ்தானிலேயே மிகவும் பிரபலமான கட்சியின் தலைவர் மற்றும் அதன் முக்கியக் குரலுமாவார். பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்டவுடன் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் அவரை நீக்குமாறு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

1999-ல் பதவி நீக்கப்பட்டவுடன் கைது செய்யப்பட்ட நவாஸ் ஷெரீஃப் தேசிய தொலைக்காட்சி மூலம் அவமானப்படுத்தப்பட்டார். இம்முறை தனக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டதாகக் கூறி வீதிக்குச் சென்றிருக்கிறார் நவாஸ். நீதித் துறையைவிட வலுவானதான மக்கள் ஆதரவுடன் ஜனநாயகப்படி தான் பிரதமரானதை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். 1999-ல் நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டு ஜனநாயகம் முடிவுக்கு வந்தது. இம்முறை, நவாஸுக்குப் பதிலாக இன்னொருவர் பிரதமராகப் பதவியேற்க முடிந்திருக்கிறது. நாடாளுமன்றமும் இப்போது உயிர்ப்புடன் இருக்கிறது. ஜனநாயக நியதிகள், நடைமுறைகள் இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளன.

எனவே, பாகிஸ்தானில் ஜனநாயக நடைமுறைகளுக்குப் பாதிப்பு இல்லை, அவை தொடர்கின்றன, நவாஸின் எதிர்காலம்தான் என்னாகும் என்ற நிச்சயமில்லை என்று கூறலாம். பிரதமரை உச்ச நீதிமன்றம் பதவி நீக்கம் செய்தது சரியா, தவறா என்ற விவாதம் வழக்கறிஞர்களிடையே இன்னமும் தொடர்கிறது. நவாஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஏராளம் என்றாலும், இப்போது பதவி நீக்கம் செய்யப்பட்டதன் முக்கியக் காரணம், 2013 தேர்தலின்போது துபாயைச் சேர்ந்த நிறுவனத்திடமிருந்து பெற்ற தொகையைத் தன்னுடைய வருவாயாகக் குறிப்பிடத் தவறிவிட்டார் என்பதன் பேரில்தான் பதவி பறிக்கப்பட்டுள்ளது. “இந்தத் தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடருவேன், வெற்றி பெறுவேன். சட்டப்படியே இதை எதிர்த்து வாதாடி மீண்டும் பிரதமர் பதவி ஏற்பேன். நான் நிரபராதி”என்றார் நவாஸ் ஷெரீஃப்.

1999-ல் அவரைப் பதவியிலிருந்து நீக்கி, சிறையில் அடைத்து, வெளிநாட்டுக்கும் விரட்டிய பிறகு, அவருடைய அரசியல் வாழ்க்கை அத்துடன் முடிந்தது என்றே கருதப்பட்டது. அதன் பிறகு, அவர் நாடு திரும்பி, தேர்தலில் வெற்றிபெற்று அரசியல் வரலாறு படைத்தார். இதோ, 2018-ல் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இந்நிலையில், நவாஸ் ஷெரீஃபால் மீண்டும் அரசியலில் எழ முடியுமா, மீண்டும் வரலாறு படைக்க முடியுமா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன!

- எஸ்.அக்பர் ஜைதி, கராச்சி வாழ் அரசியல்

பொருளாதார அறிஞர்,

கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர்.

தமிழில்: சாரி,

©: ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x