Published : 26 Sep 2017 10:15 AM
Last Updated : 26 Sep 2017 10:15 AM

தாவுவதே தப்பா? தப்புத் தப்பாய் தாவுவது தப்பா?

புத்தம் புதிதாகவே ஒரு வீட்டைக் கட்டினாலும் அதில் எப்படியோ பல்லிகளும் பாச்சைகளும் குடிவந்துவிடுவதைப் போல எந்த நாட்டில் ஜனநாயகம் காலூன்றினாலும் அங்கே முதலில் கட்சி அரசியலும் பிறகு கட்சித் தாவல்களும் ஊடுருவிவிடுகின்றன. உகாண்டாவில் அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சிப் பொறுப்பைத் தன் வசம் எடுத்துக் கொண்ட இடி அமின் ஒரு முறை சொன்னார், “எங்கள் நாட்டில் எத்தனை மரங்கள் இருக்கின்றனவோ, அத்தனை குரங்குகளும் இருக்கின்றன; எனவே ஒரேயொரு மரத்தை விட்டுவைத்துவிட்டு மிச்ச எல்லாவற்றையும் வெட்டிவிட்டேன்” என்று.

தமிழர்களான நம்முன் உள்ள கவலையெல்லாம் பழனிசாமி தலைமையிலான அரசின் கதி என்னவாகும் என்பதுதான். இந்த ஆட்சி நீடித்தாலும் அதன் நிர்வாகத் ‘திறமை’யால் அவதிப்படப்போவதும் நாம்தான். திமுக ஆட்சிக்கு வந்தால் பாதிப்பா என்று சிலர் கேட்பதும் காதில் விழுகிறது. திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கு யார் யாரோ ஒன்-லைன்களைச் சொல்லிக்கொடுத்து, என்ன கெட்டப்பில் குளோசப் காட்சிகள் வர வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில்கூட சேர்ந்து நடிக்க மறுப்பவர்களை, ஒன்றாகக் கட்சி தொடங்கச் சொல்கிறார்கள். டெல்லியிலிருந்து கேஜ்ரிவாலும் வேறு சில வாள்களும் சென்னைக்குப் படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை! எப்படிப்பட்ட நவரத்தினங்களை அமைச்சர்களாக்கியிருக்கிறார்-? அற்புதமான நிதியமைச்சராக ஜேட்லி வாய்த்திருக்கிறார். அரசின் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான பற்றாக்குறை 4%-க்கு மேல் போகக் கூடாது என்பதில் கண்டிப்புடன் இருக்கும் ஜேட்லி, தமிழ்நாட்டுக்கு நிரந்தர ஆளுநரை நியமிக்காமல் மகாராஷ்டிர ஆளுநருக்கு டி.ஏ., லஞ்ச் அலவன்ஸ் மட்டும் கொடுத்து எப்படிச் சமாளிக்கிறார் பாருங்கள். குஜராத் தலைநகர் காந்திநகரில் வெறும் 1.30 லட்சத்தில் (2002-ம் ஆண்டில்) சொந்த வீடு வாங்கிய சிக்கனக்காரர் மோடி. அவரது அமைச்சர் என்றால் தொக்கா?

தொடங்கிய பிரச்சினைக்கு வருவோம். தமிழ்நாட்டில் இப்போது நிலவுவது குழப்பமான அரசியல் நிலையா, அரசியலால் ஏற்பட்ட குழப்ப நிலையா என்பதுதான் பிரச்சினை. ஜனநாயகத்தில் பொழுதுபோக்குகள் அவசியம். இல்லாவிட்டால் மக்கள் விலைவாசி உயர்வு, வேலையில்லைத் திண்டாட்டம், நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் என்று கவனத்தைத் திசைதிருப்பி கவலையில் ஆழ்ந்துவிடுவார்கள். டிடிவி தினகரன் தரப்பு ‘குறைந்த செலவில் நிறைய ஆதாயம்’ பார்க்க முற்பட்டதால் ஆட்சியைக் கவிழ்க்க போதுமான எண்ணிக்கையில் பேரவை உறுப்பினர்கள் தேறவில்லை.

கட்சித் தாவல் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் உண்மையான நோக்கம் ஜனநாயகம் நிலைக்க வேண்டும், எந்தவித அச்சுறுத்தலும் இன்றி ஆட்சிகள் நடக்க வேண்டும் என்பதற்காக அல்ல; பணம் - பதவி போன்ற ஆசை காட்டல்களால் ஆளும் கட்சியைச் சேர்ந்த பேரவை, மக்களவை உறுப்பினர்கள் கட்சி விசுவாசத்தை மாற்றிக்கொண்டுவிடக் கூடாது என்பதற்காகவும் அல்ல. ஆளும் கட்சிகள் அச்சமின்றி தங்களுடைய (ஊழல், அராஜக) ஆட்சியைத் தொடரவும், மனசாட்சியுள்ள எந்த உறுப்பினராவது (ஒருவேளை அப்படி யாராவது அரசியலுக்கு வந்துவிட்டால்) ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்க முடியாதவாறு முளையிலேயே கிள்ளி எறியவும்தான் இந்தச் சட்டம். இந்தச் சட்டப்படியான அதிகாரத்தை ஆளும் கட்சியின் தலைவரிடமே கொடுத்தால் கடுமையான விமர்சனம் வரும் என்பதால் பேரவைத் தலைவர், மக்களவைத் தலைவர் போன்றோருக்கு அளித்தார்கள். அவர்கள் கட்சி சார்பற்று செயல்பட வேண்டும் என்று ஜனநாயக நெறிமுறை சொன்னாலும், நடைமுறையில் அவர்கள் ஆளும் கட்சியின் விருப்பப்படிதான் செயல்படுவார்கள். எனவே ஆளும் கட்சியின் செயல்பாடுகள், திட்டங்கள் மீது அதிருப்தி ஏற்பட்டாலும் யாரும் எதிர்த்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் கட்சித் தாவல் தடைச் சட்டம். இச்சட்டத்தின் இரண்டாவது பாரா பிரிவு 2(1)(ஏ), 2(1)(பி) ஆகியவற்றிலும் தார்மிகம், நேர்மை, ஜனநாயகம் பற்றியெல்லாம் கவலை இல்லை. கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டியது பற்றி மட்டும்தான் பேசப்படுகிறது. ஆளும் கட்சி என்றாலே புனிதம்தான், அதன் தலைமையின் முடிவுகளும் அப்படித்தான் என்ற அடிப்படையில், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது இந்த ஜனநாயக பாதுகாப்புச் (!) சட்டத்தைக் கொண்டு வந்திருக் கிறார்கள்.

“முதல்வர் பழனிசாமியை மாற்ற முயற்சிக்கிறோம்; இல்லையேல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துவிட்டோம். இந்த ஆட்சி நீடிப்பது நல்லதல்ல” என்று மதுரையில் 11.9.2017-ல் பேட்டியளித்தார் டி.டி.வி. தினகரன். “நீதி தேவதை எங்களுக்குத் துணை! துரோகம் செய்த எடப்பாடியை ஒரு வாரத்தில் வீட்டுக்கு அனுப்புவோம். வழக்கில் திமுகவுடன் இணைந்ததில் எந்தத் தவறும் இல்லை” என்று அடையாறில் 15.9.2017-ல் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் அதே தினகரன். “தினகரன், சசிகலா எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்படுவோம்” என்று கூறியிருக்கின்றனர் குடகில் தங்க வைக்கப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்கள். அவர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை ஆதரிக்கவில்லை, அவர் இருக்கும் அணியையும் ஆளும்கட்சியாகக் கருதவில்லை என்று இதிலிருந்து புரிகிறது. “இந்த ஆட்சி போக வேண்டும், விரைவில் தேர்தலைச் சந்தித்து தமிழகத்துக்கு நல்லாட்சி தருவோம்” என்றும் தினகரன் கூறியிருக்கிறார். அப்படியே ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை மேற்கொள்வதையும் ஒப்புக் கொள்கிறார்.

தினகரனிடம் பாராட்ட வேண்டிய அம்சம், இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்ததாகக் கைதான வழக்காக இருந்தாலும் சரி, அன்னியச் செலாவணி விதி மீறல் (மோசடி அல்ல மக்களே!) வழக்காக இருந்தாலும் சரி, வருவாய்க்குப் பொருந்தாத சொத்து வழக்காக இருந்தாலும் சரி அன்றலர்ந்த தாமரை போன்ற மலர்ந்த முகத்துடன் சிரித்தபடியே பேட்டி தருவார். அத்துடன் நகைச்சுவை உணர்ச்சியும் மிகுதி. பதவியில்லாமல் தூங்க மாட்டார் பன்னீர் செல்வம், துரோகம் செய்தவர் எடப்பாடி, ஊழல் பேர்வழிகள், மோசடிப் பேர்வழிகள் என்று தான் பார்த்து டிக்கெட் கொடுத்து வளர்த்துவிட்டவர்களை வசைபாடுகிறவர் அடுத்து ஊழலற்ற, நல்லாட்சியைத் தரப்போவதாகக் கூறும் நகைச்சுவை உணர்ச்சியை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை.

பேரவைத் தலைவரின் முடிவு தார்மிக நெறிப்படி சரியா என்ற கேள்வியே அபத்தம். அரசியலுக்கும் தார்மிகத்துக்கும் எந்தக் காலத்திலும் உறவே கிடையாது. சென்னை உயர் நீதிமன்றம் என்ன சொல்கிறதென்று பார்ப்போம். அதுவரை தினகரன், எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜயகாந்த், கமல்ஹாசன் பேட்டிகளை இடைவிடாது பார்த்துக் களிப்போம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x