

துருக்கி - சிரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலநடுக்கம் எதிர்பாராதது அல்ல. வரலாற்றுரீதியாக அந்தப் பகுதிகள் தொடர்ச்சியாக நிலநடுக்கத்தை எதிர்கொண்டே வந்திருக்கின்றன.
எனினும், இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்படக் காரணம் என்ன? நவீன காலத்தில் நிலநடுக்கத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் என்பவை, இடிந்துவிழும் கட்டிடங்களால் ஏற்படுபவைதான். நிலநடுக்கம் ஏற்படச் சாத்தியமுள்ள பகுதிகளில், அதைத் தாங்கும் திறனில்லாமல் எந்த வரைமுறையுமின்றிக் கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்கள்தான் இன்றைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்.
மக்கள்தொகை அடர்த்தி மிகுந்த, வளர்ந்துவரும் நாடுகளில் நடுத்தர, கீழ் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மக்களே இதுபோன்ற கட்டிடங்களில் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்துவருகின்றனர். ஆக,துருக்கியில் நாம் பார்ப்பது, சக்திவாய்ந்த பயங்கர நிலநடுக்கம், கட்டுமானத் தரத்தின் தோல்வி ஆகியவற்றின் இணைப்பே.
உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதவையா?: துருக்கியில் 3,000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து நொறுங்கியுள்ளன. இது அக்கட்டிடங்களின் கட்டுமானத்தில் அடிப்படையிலேயே தவறு இருப்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
கட்டுமானப் பணிகளில் முறையான ஒழுங்குமுறை விதிகளைக் கொண்டிருப்பதும், அவை முறையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதும் நிலநடுக்கத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும்.
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதி, நிலநடுக்கத்துக்கான சாத்தியம் அதிகம் உள்ள நிலப்பரப்பாகும்; மக்கள்தொகை அடர்த்தியும் மிக அதிகம். அதேபோல் நியூஸிலாந்து, ஜப்பான், சிலி போன்ற நாடுகளும் நிலநடுக்க அச்சுறுத்தலை எப்போதும் எதிர்கொண்டிருப்பவை.
இந்த இடங்களில் ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 3,000-5,000 பேர்வரை பலியாகினர்; இன்று அந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. இந்த நாடுகளில், கட்டிட ஒழுங்குமுறை வழிமுறைகள் (Regulatory mechanisms) மிகச் சீராக வகுக்கப்பட்டு, கறாராக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில், நிலநடுக்கத்தால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகாமல் உயிரிழப்புகளைக் குறைத்துள்ளனர். இந்த நிலைக்கு அந்த நாடுகள் பொருளாதாரரீதியில் மேம்பட்டிருப்பதும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.
இந்தியாவில் நிலநடுக்கம்: துருக்கியைப் பொறுத்தவரை அந்நாட்டின் நிலப்பரப்பு முழுவதுமே நிலநடுக்கத்துக்கு உட்பட்டது. ஆனால், இந்தியாவின் நிலை துருக்கியைப் போன்றது அல்ல. இந்தியாவில் சில பகுதிகளுக்கு நிலநடுக்க குறித்த அச்சுறுத்தல் சிறிதளவும் இல்லை; மறுபுறம் சில பகுதிகளில் குறைவாகவும், சில இடங்களில் மிக அதிகமாகவும் அச்சுறுத்தல் உள்ளது.
தென்னிந்தியாவில் நிலநடுக்கம் என்பது மிக அரிது. ஆனால், குஜராத், மகாராஷ்டிரம், இமாசலப் பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் நிலநடுக்கம் மக்கள் வாழ்வில் ஆழமான தாக்கம் செலுத்தியிருக்கிறது.
இந்தியாவில் நிலநடுக்கச் சாத்தியக்கூறு அளவீட்டைக் குறிக்க, நிலநடுக்கத்தின் அளவைப் பொறுத்து மண்டலம் 1 முதல் மண்டலம் 5 வரை என நிலப்பகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால், நிலநடுக்கம் ஏற்படச் சாத்தியமில்லாத ‘மண்டலம் 1’ பகுதியாக வரையறுக்கப்பட்டிருந்த மகாராஷ்டிரத்தின் லாத்தூர்-கில்லாரி பகுதியில், 1993இல் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டது.
எனவே, நிலநடுக்கம் ஏற்படச் சாத்தியமில்லாத இடமென்று எதுவுமில்லை என்கிற அடிப்படையில், மண்டலம் 1ஐ விடுத்து, நிலநடுக்கத்தின் தீவிரத்தைப் பொறுத்து மண்டலம் 2 முதல் மண்டலம் 5 வரை நிலநடுக்கம் கண்காணிக்கப்படுகிறது.
இந்தியாவில் 23 பெருநகரங்கள் உள்ளன. இந்த நகரங்களில் மக்கள்தொகை அடர்த்தி மிகுந்து காணப்படுகிறது. பெரிய நிலநடுக்கம் வரப்போவதில்லை என்று வைத்துக்கொண்டாலும், இவ்வளவு எண்ணிக்கையில் வாழும் மக்களுக்கான இருப்பிடங்கள் மிதமான நிலநடுக்கத்தைக்கூடத் தாங்கும் திறனற்றவையாக உள்ளன.
லாத்தூர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 2001இல் ஏற்பட்ட பூஜ் நிலநடுக்கத்தின் விளைவால், இந்தியாவின் நிலநடுக்க மண்டலங்கள் வரையறுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து முக்கியப் பெருநகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகியவை மண்டலம் 3 அல்லது அதற்கு அதிகமான நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.
2002இல் வரையறுக்கப்பட்ட இந்த விதிமுறைகள், தொடர்ந்து மேம்படுத்தப்பட்டுவந்திருக்கின்றன. 2016க்குப் பிறகு இப்போது அது சீராய்வில் உள்ளது. மேம்படுத்தப்பட்ட புதிய விதிமுறைகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோஷிமட்டும் அதன் பிறகும்: உத்தராகண்ட் மாநிலம் ஜோஷிமட்டில் மேற்கொள்ளப்பட்ட பெரும் கட்டுமானப் பணிகளே அப்பகுதியைச் சிதைத்துவிட்டன. இந்திய தீபகற்பத்தின் தென் பகுதியில் கிழக்கு, மேற்கு மலைத் தொடர்கள் உள்ளன. இவை லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி வளர்ந்தவை. இன்று அவை குறிப்பிட்ட ஒரு நிலைத்தன்மையைப் பெற்றுவிட்டன; இனி அவை வளராது.
ஆனால், இமயமலைப் பகுதி, கிழக்கு-மேற்கு மலைத்தொடர்களுடன் ஒப்பிட மிக இளமையானது. இமயமலையின் நிலப்பரப்பு இன்னும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. நிலப்பகுதியின் ஒன்றிணைவு பாறைகளின் இறுக்கத்தையும் அழுத்தத்தையும் அதிகரித்து, நிலநடுக்கத்துக்கு வழிவகுக்கிறது.
ஆக, இமயமலை நிலப்பகுதி என்பது அடிப்படையில் தளர்வானதாக, எளிதில் நெறுங்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. இந்தத் தன்மைகொண்ட நிலப்பரப்பில் பெரும் உள்கட்டமைப்புத் திட்டங்கள், நீர்மின் நிலையங்கள் போன்றவற்றுக்காகச் சுரங்கம் அமைப்பதும், நிலம் திருத்தியமைக்கப்படுவதும் அதன் ஒட்டுமொத்த தன்மையைக் குலைத்துப் பேரழிவுக்கு வித்திடுகின்றன.
கட்டமைப்புப் பொறியியலும் கட்டுமானப் பொறியியலும் கட்டிடத்தின் நிலைத்தன்மையைச் சமரசமின்றி உறுதிப்படுத்தும் இடத்துக்கு வந்துவிட்டன. வெடிவிபத்துகளிலிருந்து கட்டிடங்கள் உடைந்து நொறுங்குவதைத் தடுத்து நிறுத்தும் தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது.
அறிவியலும் தொழில்நுட்பமும் அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிட்டன. கொள்கை வகுப்பதிலும் அதை நடைமுறைப்படுத்துவதிலும்தான் நம்முடைய பிரச்சினை அடங்கியிருக்கிறது.
நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடிய கட்டிடங்கள் வரைபடத்தில் இருக்கலாம், திட்டம் வகுக்கப்பட்டிருக்கலாம்; ஆனால், கட்டுமானத்தில் பணத்தைச் சேமிக்கும் நோக்கில், கட்டுமானப் பொருள்களின் தரத்தில் சமரசம் செய்துகொள்வதே நிதர்சனம்.
இந்தச் சமரசம், நிலநடுக்கத்தையும் மீறிய பயங்கர அழிவைக் கொண்டுவரும். கட்டுமானத்தில் மேற்கொள்ளப்படும் சமரசத்துக்கு உயிரை விலையாகக் கொடுக்கக் கூடாது. நாம் செயல்படத் தொடங்க வேண்டும்.
- எழுத்தாக்கம்: சு.அருண் பிரசாத்