

நம் மொழியைப் போல் கவிதையை ஓர் உயர்திணையாகப் பாவிக்கிறோம். அவளைத் தேவி எனத் தரிசிக்கிறோம். ‘கவிதையைப் போன்றதுதான் காதலும். கவிதையும் காதலும் ஒன்றை ஒன்று சார்ந்தவைதான்; அதன் ஜீவன் இதுதான்’ என்றெல்லாம் கற்பிதம் கொள்கிறோம். கவிதையை ஒரு வாளைப் போல் ஏந்தி உலகின் பல பகுதிகளில் பெரும் புரட்சிப் போராட்டங்கள் நடந்துள்ளன. அறத்தையும் வீரத்தையும் நம் தெள்ளு தமிழ், பாடியுள்ளது. ஆனாலும் காதலையும் கவிதையையும் ஓருயிர், ஈருடலாகப் பார்க்கிறது ஒரு காலகட்டத்தின் பேதை மனம்.
மேற்கில் உருவான ‘மாடர்ன் பொயட்ரி’ (நவீன கவிதை) தமிழில் அறிமுகமாகி ஓர் அறிவுத் தளத்தில் வேதாந்தம் பேசித் திரிந்தது. அது மக்கள் மயப்பட்டது வானம்பாடி இயக்கக் கவிஞர்களால்தாம். அது இன்னும் நெருங்கி வந்தது, அவர்கள் எழுதிய காதல் கவிதைகளால்தாம் என உரக்கச் சொல்கிறது அந்தக் காலம். புரட்சி பாடிய அவர்கள், பூந்தென்றல் காதலையும் பாடினார்கள்.
1971இல் வெளிவந்த கவிஞர் மீராவின் ‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பு ஒரு புதிய திரைப்படத்தைப் போலப் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்தத் தொகுப்பு வெளிவந்து, அரை நூற்றாண்டுக்குப் பிறகும் அதன் பெயர் இப்போதும் அடிபடுகிறது. 70களில் தொடங்கி 90கள் வரை வாரப் பத்திரிகைகள், இணைப்பிதழ்கள் ஆகியவற்றில் காதலைச் சொல்லப் புறப்பட்ட லட்சக்கணக்கான கவிஞர்களின் முன்னுதாரணம் இந்தத் தொகுப்புதான். இன்றும் திரைப்படப் பாடல்களில் மீராவின் லட்சணங்களைப் பார்க்க முடிகிறது ‘நீயே என் திசை’, ‘என் வீட்டு முற்றத்தில் பெய்யும் மழை/உன் வீட்டு முற்றத்திலும் பெய்கிறது/...என் இதயத்தில்/ நுழையும் காதல் மட்டும்/உன் இதயத்தில் நுழையவில்லையா? இந்த வரிகள் அதற்கான பதங்கள்.
மீரா ஒரு கவிதையில், ‘முத்துகளும் மணிகளும் ஒரு பட்டத்து அரசரின் ஒளிவீசும் மகுடமும் தராத கர்வத்தை ஒரு பெண்ணின் காதல் நேசம் தந்துவிடுகிறது’ என்கிறார். கல்லைக் கனியாக்கும் காதலின் ரசவாதத்தைப் பற்றி எழுதும்போது ‘என் எண்ணங்களில் பாடும் கன்னங் கரிய குயிலே...’ என அழைக்கிறார். ‘உனக்கென்ன/ஒரு பார்வையை வீசிவிட்டுப் போகிறாய்/என் உள்ளமல்லவா.../பற்றி எரிகிறது’, ‘எனக்குப் பிடித்த கவிதை உன் பெயர்தான்’ எனக் காதலின் பேதைமை நிறைந்த கவிதைகளை மீரா இதில் மீட்டியிருப்பார். காதலை எழுதுவது தரக் குறைவு ஒன்றும் அல்ல என்பதையும் எழுதியிருப்பார். மகாகவியே ‘காதல், காதல் காதல்/காதல் போயிற் காதல் போயிற்/சாதல், சாதல், சாதல்’ என எழுதவில்லையா? அவர் வழி வந்த பாரதிதாசனும் ‘கன்னியரின் கடைக்கண் பார்வை பட்டால் காளையற்கு மாமலையும் ஓர் கடுகாம்’ எனத் தொடரவில்லையா?
மீராவின் அன்னம் பதிப்பகம் வழி முதல் தொகுப்பை வெளியிட்டவர் கவிஞர் நீலமணி. தன் ரத்தினச் சுருக்கமான கவிதைகள் வழி, தனி அடையாளம் பெற்றவர். இவரது புகழ்பெற்ற கவிதைகளைக் கடந்து வராதவர்கள் குறைவு. நீலமணியின் காதல் கவிதைகளையும் இந்த வரிசையில் வைத்துப் பார்க்கலாம். 1987இல் வெளிவந்த ‘உப்பு நதிகள்’ என்ற தொகுப்பு மீராவின் தொகுப்புபோல் புகழப்பட்ட ஒன்று. பின்னால் கவிதை எழுதவந்த பலsரையும் நீலமணியின் இந்த இரண்டடிக் கவிதை வடிவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நீலமணியின் இந்த இரண்டை விஸ்தரித்து எழுதினார்கள் என்றும் சொல்லலாம். ‘நீ கோலம் போடுகிறாய்/ உன் விரல்களிலிருந்து உதிர்வது/ என் உயிர்ப்பொடி’, ‘நீ நீர்க்குடமெடுத்துச் செல்கிறாய்/ நான் தளும்பிக்கொண்டிருக்கிறேன்’.
இந்தப் பூமி உருண்டையை புரட்டிவிடக்கூடிய நெம்புகோல் கவிதையை உங்களில் யார் பாடப் போகிறீர்கள் என்கிற கேள்வியுடன் கவிதைகள் செய்யவந்த மு.மேத்தாவின் காதல் கவிதைகளும் திரைப்பாடல்களும் பெயர்பெற்றவை. மு.மேத்தா, கவி ராஜனாகக் கல்லூரிகளில் கொண்டாடப்பட்ட ஆளுமை. அவரது சமூகக் கவிதைகளைவிடவும் காதல் கவிதைகளுக்கு கல்லூரி வளாகங்களில் அந்தக் காலத்தில் தேரோட்டம் நடத்தப்பட்டது. ‘கண்களால் நீ எழுதும் கவிதைகளுக்கு/அர்த்தம் புரியாமல்/நான்/அவதிப்படுகிறேன்’. ‘விரித்தவர்களே அகப்பட்டுக் கொள்ளும் விசித்திர வலை/காதல்’. இதேபோல் கொண்டாடப்பட்ட கவிதைகளுக்குச் சொந்தக்காரர்களில் ஒருவர் கவிஞர் வைரமுத்து. திரைப்பாடல்களையும் தன் கவிதை நீட்சியாகக் கொண்டார். இவரது பிரபலமான ‘காதலித்துப் பார்’ கவிதையில் ‘உனக்கும் கவிதை வரும்/கையெழுத்து அழகாகும்/ தபால்காரன் தெய்வமாவான்’ என்ற வரிகளைப் பாடித் திரியாத காதல் பறவைகள் அந்தக் கால வேடந்தாங்கலில் இல்லை.
‘நீ வராத நேரங்களில்/ நினைக்கப்படுகிறார்கள் ஒரு அபிதா, ஒரு சசி, ஒரு ஜமுனா’ என்று யுகபாரதி தன் கவிதையில் குறிப்பிடுவதுபோல், கலாப்ரியாவின் சசியும் தமிழ்க் கவியுலகம் காதலித்த திரு உருக்களில் ஒன்று. ‘சசி/சஸி/ஸஸி/ஸசி/எப்படிச்சொன்னாலும்/நீ என் ஸசி/ஸஸி/சஸி/சசி’ என்கிறது கலாப்ரியாவின் ஒரு கவிதை. ‘அணு அணுவாய் சாவதற்கு/முடிவெடுத்த பின்/காதல் சரியான வழிதான்’ என்கிற கவிஞர் அறிவுமதியின் காதல் கவிதைதான் ‘சேது’ படத்தின் ஆதாரம். இந்தக் காதல் கவிதைகளின் தொடர்ச்சி இன்றும் அறுந்துவிடவில்லை. மொழியளவில் சற்று தேய்வழக்காகியிருக்கிறது.
இருபத்தியொன்றாம் நூற்றாண்டு பலவற்றையும் மாற்றி விட்டது. அதன் அறிவியல் வளர்ச்சியால் மனிதர்கள் மாறியிருக்கிறார்கள். தொலைதொடர்பு சாதனங்களுக்கு இடையில் இருக்கிறது காதல். ஆனால், காதல் மனத்தில் பழைய உணர்வுகளின் சாரம் இருக்கிறது. அதனால் இன்றும் மீராவின் வரிகளைப் போன்ற ஒரு பிரதி கைமாற்றப்படுவதைப் பார்க்க முடிகிறது. ’நடராஜர் காலில் மிதிபட்டுக் கிடக்கும் முயலகன் சிலையைப் போல் காதலில் மிதிபட்டுக் கிடக்கிறது காலம்’ எனக் கவிஞர் யுகபாரதி தன் கட்டுரை ஒன்றில் எழுதியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் அப்பால் இன்றைய காலமும் அதற்கு விதிவிலக்கல்ல எனத் தோன்றுகிறது.