Published : 18 May 2017 08:01 AM
Last Updated : 18 May 2017 08:01 AM

தமிழைக் கட்டாயமாக்குவதில் என்ன தயக்கம்?

கேரளத்தையடுத்து மேற்கு வங்கமும் பள்ளிக்கூடங்களில் தாய்மொழியைக் கட்டாயப் பாடமாக்கி உத்தரவிட்டிருக்கிறது. மொழியுரிமைப் போராட்டத்தில் இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்த தமிழ்நாடு, தமிழ்மொழியைக் கட்டாயப் பாடமாக அறிவிப்பதற்கு ஏன் இன்னும் காலம் தாமதம் செய்கிறது என்று புரியவில்லை.

கேரள அரசு மலையாளம் கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்ற அவசரச் சட்டத்தை ஏப்ரல் மாதத்தில் இயற்றியது. இதன்படி, கேரளத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை இனி மலையாளப் பாடம் கட்டாயம். அது எந்தக் கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளியாக இருந்தாலும் சரி, “மலையாளம் சொல்லித் தராத பள்ளிகளுக்கான அனுமதி ரத்து செய்யப்படும்’’ என்று சொல்லிவிட்டார் முதல்வர் பினராயி விஜயன். மேலும், “பள்ளிகளில் மலையாளத்தில் பேசுவதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தப் பள்ளி நிர்வாகமும் தடை விதிக்கக் கூடாது’’ என்பதையும் இந்தச் சட்டம் உறுதிசெய்கிறது.

இந்நிலையில், வங்கத்திலும் பள்ளிக்கூடங்களில் வங்க மொழி கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மம்தா பானர்ஜி. “வங்காளம், இந்தி, ஆங்கிலம், உருது, குர்முகி, நேபாளி, சந்தாலி ஆகிய மொழிகளில் எதை வேண்டுமானாலும் மாணவர்கள் தங்களது முதல் மொழியாகத் தேர்வுசெய்து கொள்ளலாம். இரண்டாவது, மூன்றாவது மொழிகளையும் அவர்களது விருப்பம்போலத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால், இந்த மூன்று மொழிகளில் வங்காளியும் ஒன்றாக இருக்க வேண்டும்” என்ற முதல்வர் மம்தாவின் அறிவிப்பு, மூன்று மொழிக் கொள்கைக்குப் புதிய பரிணாமத்தை அளிக்கிறது. ஒருபுறம் வங்க மொழியைத் தவிர்க்க முடியாது என்ற நிலையை உருவாக்கியிருக்கும் அவர், இரண்டாவது, மூன்றாவது மொழிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மாணவர்கள் பக்கம் திருப்பியிருக்கிறார்.

தாய்மொழியில் அடிப்படைக் கல்வி பயில்வது கற்கும் திறனை அதிகரிக்கச் செய்கிறது என்று கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். தாய்மொழியைக் குறைந்தபட்சம் ஒரு பாடமாகவேனும் மாணவர்களுக்குக் கற்பிப்பது மிக மிக அவசியமான ஒன்று. மேலும், இந்தியைக் கட்டாயப் பாடமாக்க மத்திய அரசு முயற்சித்துவருகையில், இந்தி பேசாத மாநிலங்கள் தங்களது மொழியுரிமையைப் பாதுகாத்தாக வேண்டிய சூழலும் உருவாகியுள்ளது. இந்நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியை பாடத்திட்டத்தில் கட்டாயமாக்கியிருக்கும் பினராயி விஜயனும், மம்தா பானர்ஜியும் பாராட்டுக்குரியவர்கள். கேரளம், மேற்கு வங்கத்தையடுத்து அஸ்ஸாம் மாநிலத்திலும்கூட அஸ்ஸாமிய மொழியைக் கட்டாயப் பாடமாக்குவதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன. அஸ்ஸாமில் மொழிச் சிறுபான்மையினர் வங்காளி அல்லது போடோ மொழிகளைத் தேர்வுசெய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகமும் தமிழ்மொழியைப் பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும். கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே அரசு இவ்விஷயத்தில் ஒரு உறுதியான முடிவெடுத்தாக வேண்டும். அப்போதுதான் பாடத்திட்டம், ஆசிரியர் நியமனங்கள் ஆகியவற்றைப் பள்ளி நிர்வாகங்கள் திட்டமிடுவதற்கும் வசதியாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x