Last Updated : 03 May, 2017 09:11 AM

 

Published : 03 May 2017 09:11 AM
Last Updated : 03 May 2017 09:11 AM

அவரவர் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வேண்டும்!

5 கேள்விகள் 5 பதில்கள்

தாழ்த்தப்பட்டோர் என்ற பிரிவின் கீழ் எங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. பெரியாரிய, அம்பேத்கரியர்களின் எதிர்ப்புக்குப் பிறகும், தன் கருத்தில் உறுதியாக இருக்கும் அவருடன் ஒரு பேட்டி.

தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வேண்டாம் என்று மறுப்பது ஏன்?

இங்கே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எல்லாம் ஒரே சாதியாகப் பார்க்கப்படுவ தில்லை. அவர்கள் இடஒதுக்கீட்டை அனுபவித் தாலும், வெளியே நாங்கள் வன்னியர், தேவர், நாடார் என்று கௌரவமாகச் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாகத் தாழ்த்தப்பட்டோர் அனைவரும் ஒரே சாதியினராகப் பார்க்கப்படுகிறார்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ் என்று உச்ச பதவியை அடைந்தாலும், ‘அவன் எஸ்சி’ என்று கூசாமல் சொல்கிறார்கள். இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் 2,000 சாதிகள் இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஒரு கலாச்சாரம், ஒரு வரலாறு இருக்கிறது. உதாரணமாக, மகாராஷ்டிராவில் உள்ள மகர் சமூகத்தினர் போர்க் குணம் மிக்கவர்கள். ஆதிக்கத்துக்கு எதிராகக் கடுமையாகக் குரல்கொடுத்தவர்கள். சிவாஜியின் படையில் அங்கம் வகித்தவர்கள். தமிழ்நாட்டில் தேவேந்திரர்களும் அத்தகைய வரலாறு கொண்டவர்கள். “எங்களை எஸ்.சி. பட்டியலில் எப்படிச் சேர்த்தார்கள் என்றே தெரியவில்லை. இப்படியொரு இடஒதுக்கீடே தேவையில்லை” என்று எம்மக்கள் வேதனையோடு சொல்கிறார்கள்.

காலங்காலமாக இழைக்கப்பட்ட சமூக அநீதிக்கான பதிலீடு அல்லவா இடஒதுக்கீடு? சாதி வெறியர்கள் குறைத்துப் பேசுகிறார்கள் என்பதற்காக அந்த உரிமையையே விட்டுக்கொடுப்பீர்களா?

இடஒதுக்கீடே வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. இடஒதுக்கீட்டில் வந்தவன் என்ற வசையை எஸ்.சி.க்கள் மட்டும் ஏன் சுமக்க வேண்டும் என்கிறேன். எல்லோருமே இடஒதுக்கீட்டை அனுபவிக்கிறபோது, பி.சி., எம்.பி.சி., எஸ்.சி. என்ற பிரிவுகள் எதற்கு? இடஒதுக்கீட்டுப் பிரிவு என்று ஒரே பிரிவாக அறிவியுங்கள். அதில், ஒவ்வொரு நபரின் குடும்பப் பின்னணி, நிலவுடமை, கல்விப் பின்னணி எல்லாவற்றையும் தீர ஆராய்ந்து, உண்மையிலேயே பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்றுதான் சொல்கிறேன். அப்படி முடியவில்லை என்றால், தேவேந்திர குல வேளாளர்களுக்குத் தனியாக இடஒதுக்கீடு தந்துவிடுங்கள். அதே பாணியில், மக்கள்தொகை அடிப்படையில் மற்ற சாதிகளுக்கு ஒதுக்கீடு கொடுத்தாலும், ஆட்சேபனை இல்லை. பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் எல்லாம் இடஒதுக்கீட்டுடன் சமூக அந்தஸ்தையும் அனுபவிப்பதைப் போல, தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் அது தேவை என்கிறேன்.

அடுத்து, தனித் தொகுதியும் வேண்டாம் என்பீர்கள்.. அப்படித்தானே?

தாழ்த்தப்பட்டவர்களை ஒரே பட்டியலாக அறிவித்தது அம்பேத்கர் செய்த தவறு. இரட்டை வாக்குரிமை கேட்டு காந்தியிடம் போராடிய அவர், இன்றைய தனித் தொகுதி முறையை ஒப்புக்கொண்டதும் தவறு. அவரது முடிவுகள் அன்றைய காலத்துக்கு உவப்பானதாக இருந்திருக்கலாம். இன்று இந்தத் தனித் தொகுதி முறையால் தாழ்த்தப்பட்டோருக்கு என்ன நன்மை விளைந்துவிட்டது? அவர்களால் கட்சிக் கட்டுப்பாட்டை மீறித் தங்கள் சமூகத்துக்காகப் பேச முடிகிறதா? எனவே, தனித் தொகுதியும் தேவையில்லை. இது எனது கருத்து மட்டுமல்ல, இதே கருத்தோடு இன்னும் பல தலித் அமைப்புகள் வருவார்கள்.

திராவிடக் கட்சிகளைக் கடுமையாக விமர்சிக்கிறீர்கள், பாஜகவிடம் மென்மையாக நடந்து கொள்கிறீர்கள். பாஜகவுடன் கூட்டணிக்கான அச்சாரமா இது?

திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு கால ஆட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். ‘பிராமணரல்லாதோர் ஆட்சியமைப்போம்’ என்று சொல்லி ஆட்சியைப் பிடித்தவர்கள், மிகத் தந்திரமாகத் தாழ்த்தப்பட்டோரையும் சிறுபான்மையினரையும் கை கழுவி விட்டார்கள். தமிழகத்தில் நடக்கிற குழப்பங் களுக்கெல்லாம் பாஜகதான் காரணம் என்று சொல்வதை நான் ஏற்கவில்லை என்பதாலேயே நான் பாஜக ஆதரவாளன் ஆகிவிடுவேனா? தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று, சசிகலா குடும்பத்தை எதிர்க்க வேண்டும் அல்லது ஆதரிக்க வேண்டும். ஆனால் இவர்களோ முதல் நாள் சசிகலாவைச் சந்தித்து வாழ்த்திவிட்டு, மறுநாள் அவர் சிறை செல்வதை வரவேற்கிறார்கள்.

தினகரன் ஓட்டுக்குப் பணம் கொடுத்ததை விமர்சித்த அதே வாயால், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையையும் குறை கூறுகிறார்கள். இதுதான் தவறு. நான் மக்களின் விருப்பத்தைத்தான் பிரதிபலிக்கிறேனே தவிர, கூட்டணியை மனதில் வைத்துச் செயல்படவில்லை.

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணியே கிடையாது என்றால், உங்கள் முன் இருப்பது மூன்று வாய்ப்புதான். பாமக, பாஜக, நாம் தமிழர். எதை ஏற்கிறீர்கள்?

திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளுக்கு முடிவுரை எழுதப்பட வேண்டும். திமுக, அதிமுக வீழ்த்தப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். எங்களுக்குள் ஒரே வேவ் லெங்க்த் இருக்கிறது என்றும் சொல்ல முடியாது, இருக்கக் கூடாது என்றும் சொல்ல முடியாது. தேர்தல் வரட்டும் பார்க்கலாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x