Last Updated : 04 May, 2017 09:26 AM

 

Published : 04 May 2017 09:26 AM
Last Updated : 04 May 2017 09:26 AM

அறிவோம் நம் மொழியை: கூட்டணியில் மேலும் சில சிக்கல்கள்!

இந்த வாக்கியத்தைப் பாருங்கள்:

‘கடிகாரத்தை அவருக்குத் தருவதைத்தான் விரும்பவில்லை என்று…’ முற்றுப்பெறாத இந்த வாக்கியத்தை எப்படி வேண்டுமானாலும் முடிக்கலாம்.

‘கடிகாரத்தை அவருக்குத் தருவதைத்தான் விரும்பவில்லை என்று அவருடைய நண்பர் சொன்னார்’ என்று முடித்தால், கடிகாரத்தைத் தவிர, வேறு எதையாவது தரலாம் எனப் பொருள் வருகிறது. அல்லது அவருக்குப் பதில் வேறு எவருக்காவது தரலாம் என்றும் பொருள் கொள்ளலாம்.

இதே வாக்கியத்தை இப்படி எழுதினால்… கடிகாரத்தை அவருக்குத் தருவதைத் தான் விரும்பவில்லை என்று…

இந்த வாக்கியத்தை ‘கடிகாரத்தை அவருக்குத் தருவதைத் தான் விரும்பவில்லை என்று அவருடைய நண்பர் சொன்னார்’ என்று முடித்தால், நண்பருக்கு விருப்பம் இல்லை என்னும் பொருள் வருகிறது. தான் என்னும் சொல்லை அதற்கு முன் வரும் சொல்லோடு சேர்த்து எழுதினால், கூடுதல் அழுத்தம் கிடைக்கிறது. பிரித்து எழுதினால் நான் என்னும் பொருள் வருகிறது.

கொள் என்னும் சொல்லை எடுத்துக் கொள்வோம். ‘இதை உன்னுடையதாகக் கொள்’, ‘இதை எடுத்துக்கொள்’ ஆகிய வாக்கியங்களை ஒப்பிட்டுப்பாருங்கள்.

‘என் நம்பிக்கையாகக் கொண்டேன்’, ‘எனக்கென எடுத்துக்கொண்டேன்’ என்னும் வாக்கியங்களையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.

சேர்ப்பதும் பிரிப்பதும் வேறு வேறு பொருள்களைத் தருகின்றன அல்லவா? எந்தப் பொருளில் தர விரும்புகிறோமோ அதற்கு ஏற்ப சேர்த்தோ, பிரித்தோ எழுத வேண்டும். முதல் வாக்கியத்தில் உன்னுடை யதாகக் (கருதிக்)கொள் என்னும் பொருள் வருகிறது. இரண்டாவது வாக்கியத்தில் எடுத்துக் கொள் என்று, எடுத்தல் என்னும் வினைக்குத் துணையாக வருகிறது. எனவே, முதல் வாக்கியத்தில் பிரித்தும் இரண்டாவதில் சேர்த்தும் எழுத வேண்டும். கொள்ளுதல் என்னும் பொருளில் கொள் என்பதைப் பயன் படுத்தினால், பிரித்து எழுத வேண்டும். எடுத்துக் கொள், சேர்ந்துகொள், பார்த்துக்கொள், புரிந்து கொள் என்று இன்னொரு சொல்லுக்குத் துணையாக இது பயன்படுத்தப்படும் போது சேர்த்து எழுத வேண்டும். கொண்டு என்பதும் இதேபோலத் தான்.

ஒரு சொல்லைப் பிரித்து எழுதுவதிலும் சேர்த்து எழுதுவதிலும் இத்தனை வேறுபாடுகள் எழும்போது, பிரித்து அல்லது சேர்த்து எழுதுவதை எப்படி எளிதாக எடுத்துக்கொள்ள முடியும்? பேசும்போது தான் என்னும் சொல்லுக்கான பொருள் குரலின் ஏற்ற இறக்கங்கள், அழுத்தங்களின் மூலம் தெளிவாகிறது. ஆனால் எழுதும்போது? பழக்கம் காரணமாகவும், இடச்சார்பு கருதியும் சரியான பொருளை அறிந்துகொண்டுவிடலாம். ஆனால், குழப்பமே எழாத வண்ணம் எழுத முயல்வதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும் அல்லவா?

அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x