சொல்… பொருள்… தெளிவு | மத்திய பட்ஜெட்: ஓர் அறிமுகம்

சொல்… பொருள்… தெளிவு | மத்திய பட்ஜெட்: ஓர் அறிமுகம்
Updated on
2 min read

மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) என்பது அடுத்த நிதியாண்டுக்கான வரவு-செலவுகளின் வகைப்படுத்தப்பட்ட பட்டியலைக் கொண்டது. மக்கள் நலனுக்காகப் பணத்தை எப்படிச் செலவிட வேண்டும் என்பதை அமைச்சகங்களும் துறைகளும் திட்டமிடுவதற்கு நிதிநிலை அறிக்கை வழிசெய்கிறது. முக்கியமாக, உண்மையான செலவு, வளர்ச்சி, பொருளாதாரக் குறியீடுகளை அது கண்காணிக்கும்.

வருமான வரி, ஜிஎஸ்டி, சுங்க வரி, சரக்கு வரி ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயே மத்திய அரசாங்கத்தின் முதன்மை வருமானம். கல்வி, சுகாதாரம், நலத் திட்டங்கள், உள்கட்டமைப்புத் திட்டங்கள், நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதங்களை வாங்குதல், அரசு ஊழியர்களுக்கான ஊதியம் - ஓய்வூதியம் போன்றவை அரசாங்கத்தின் முக்கியச் செலவுகள்.

நிதிநிலை அறிக்கையும் அரசமைப்பும்: இந்திய அரசமைப்பின் 112ஆவது கூறு, இந்தியாவின் மத்திய நிதிநிலை அறிக்கையை ‘இந்தியக் குடியரசின் வருடாந்திர நிதி அறிக்கை’ என்று குறிப்பிடுகிறது. இந்தக் கூற்றின்படி, ஒவ்வொரு நிதியாண்டுக்குமான அரசின் வருமானம், செலவு, திட்டமிடல் ஆகியவற்றை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கையை, நிதியாண்டு தொடங்குவதற்கு முன்னதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும்.

நிதியாண்டு: 1867க்கு முன்னர், இந்திய நிதியாண்டு மே 1இல் தொடங்கி ஏப்ரல் 30இல் முடிவடைந்தது. தற்போது நடைமுறையில் உள்ள இந்திய நிதியாண்டு, பிரிட்டிஷ் அரசின் நிதியாண்டுடன் இணைந்ததாக இருக்குமாறு 1867இல் மாற்றியமைக்கப்பட்டதாகும். இதன்படி, இந்தியாவின் நிதியாண்டு ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 1இல் தொடங்கி மார்ச் 31இல் முடிவடைகிறது.

குடியரசுத் தலைவரின் பங்கு: நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்யும் நாளை முடிவுசெய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருடையது. அந்த நாளில் மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முன், குடியரசுத் தலைவரை நிதியமைச்சர் சந்திப்பது சம்பிரதாயம்.

நிதிநிலை உரை: நிதிநிலை உரையை நிதியமைச்சர் இரண்டு பகுதிகளாக வழங்குகிறார். முதல் பகுதியில், பொருளாதார ஆய்வறிக்கை இடம்பெறும். இரண்டாம் பகுதியில், புதிய வரித் திட்டங்களின் அறிமுகமும் புதிய திட்டங்களின் அறிவிப்பும் அடங்கியிருக்கும்.

பொருளாதார ஆய்வறிக்கை: பொருளாதார ஆய்வறிக்கை முறை 1951இல் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய வரவு-செலவுத் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறையாக இந்த அறிக்கை காணப்படுகிறது. பொருளாதார ஆய்வை நிறைவேற்றி அறிக்கை வெளியிடும் பொறுப்பு, நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையைச் சார்ந்தது. இந்தப் பொருளாதார ஆய்வறிக்கைக்குத் தலைமைப் பொருளாதார ஆலோசகரும் நிதியமைச்சரும் ஒப்புதல் அளிப்பார்கள்.

அரசின் கடந்த ஆண்டு பொருளாதாரச் செயல்பாட்டை அளவிடும் மதிப்பீட்டு அறிக்கையாக இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை விளங்கும். அதன் விரிவான புள்ளிவிவரத் தரவுகள், பொருளாதாரக் குறியீடுகளையும் சமூகக் குறியீடுகளையும் கோடிட்டுக் காட்டும்.

இடைக்கால நிதிநிலை அறிக்கை: இடைக்கால நிதிநிலை அறிக்கை என்பது நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் ஆண்டில், முழு வரவு-செலவுத் திட்டத்துக்குப் பதிலாகச் சமர்ப்பிக்கப்படும் ஒன்று. இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வரி விகிதங்களில் மாற்றம் செய்ய அனுமதி உண்டு. சில மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறும் என்பதால், இதில் பெரிய மாற்றங்கள் இருக்காது; முக்கியமாக, புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய முடியாது.

செலவு அனுமதிக் கோரிக்கை (Vote on Account): நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட முழுமையான நிதிநிலை அறிக்கை, நாடாளுமன்றத்தில் நிறைவேறி, பின்னர் குடியரசுத் தலைவரிடம் அனுமதியைப் பெறுவதற்கு அதிகக் காலம் எடுக்கும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின்னரே, நிதிநிலை அறிக்கையில் உள்ள அம்சங்கள் நிதி ஆணையாக மாறும். அதுவரை, அரசு தனக்குத் தேவையான பணத்தை அரசுக் கருவூலத்திலிருந்து எடுத்துக்கொள்ள அனுமதிப்பதற்கான வழிமுறையே ‘செலவு அனுமதிக் கோரிக்கை’. இதன் மூலம் அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான பணத்தை, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் அரசு எடுத்துக்கொள்ள முடியும். தேர்தல் நேரத்தில் அதற்கான அனுமதி 4 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

பட்ஜெட் பெயர் வந்தது எப்படி?: ‘பட்ஜெட்’ என்ற சொல் ‘bougette’ என்ற பிரெஞ்சுச் சொல்லிலிருந்து உருவானது. ‘சிறிய தோல் பை’ அல்லது ‘பணம் கொண்ட பர்ஸ்’ என்பதே இதன் அர்த்தம். நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன்பாக ‘பிரீஃப்கேஸ்’ போன்ற பெட்டிகளை நிதியமைச்சர்கள் காண்பிப்பதைப் பார்த்திருக்கலாம்.

தொகுப்பு: முகமது ஹுசைன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in