Published : 24 Jul 2014 09:21 AM
Last Updated : 24 Jul 2014 09:21 AM

போதும் இந்த ரத்தக்களரி, நிறுத்துங்கள்

போரற்ற உலகம் வேண்டிக் குரல்கொடுக்கிறார் ஒரு தந்தை, குண்டுவெடிப்புகளின் பெரும் ஓசைகளுக்கு இடையே!

"பைத்தியம் என்பது, ஒரே செயலை… ஒரே வகையில் மீண்டும் மீண்டும் செய்துகொண்டு, முடிவு மட்டும் வேறுமாதிரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது” என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியிருக்கிறார்.

பாலஸ்தீனர்களும் இஸ்ரேலியர்களுமான நாம், நாசகரமான பல போர்களைப் பார்த்துவிட்டோம்; முடிவும் அதேபோலத்தான் ஒவ்வொரு முறையும் இருக்கிறது; அதிக சாவுகள், அதிக படுகாயங்கள், அதிக ரத்தக்களரி, அதிக பகைமை, அதிக வெறுப்பு. இப்படித் தொடர்ந்து போர் செய்துகொண்டே இருக்கும் நாம், எதை அடைய விரும்புகிறோம்?

இப்போதைய சண்டையில் மட்டும் இதுவரை 3,000-க்கும் மேற்பட்டவர்களை இழந்துவிட்டோம். 2,000 பேர் காயம் அடைந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவம் 2,300-க்கும் மேற்பட்ட முறை வான் தாக்குதலை மேற் கொண்டுள்ளது. காஸா பகுதியிலிருந்து 1,300-க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகள் ஏவப்பட்டுவிட்டன. 600 வீடுகளும் நிறுவனங்களும் தாக்கப்பட்டு முற்றாக நாசமாகிவிட்டன. இரண்டு தரப்பிலுமான மோதலைக் கண்டு குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டன. அன்றாட வாழ்க்கை என்பதே நிலைகுலைந்துவிட்டது.

நொறுங்கிப்போயிருக்கிறோம்

பாலஸ்தீனர்களை இஸ்ரேலிய விமானங்களும் பீரங்கிகளும் வேட்டையாடுகின்றன. லட்சக் கணக்கான இஸ்ரேலியர்களோ ராக்கெட் குண்டுகளுக்கு அஞ்சி இரவு - பகல் எந்நேரமும் பதுங்குகுழிகளில் தஞ்ச மடைகின்றனர். போரின் விளைவுகள் மோசமாக இருப்பதைத் தொலைக்காட்சித் திரைகளில் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், நாம் பார்க்காதது என்னவென்றால், இருதரப்பிலும் உண்மையில் இதைவிடப் பத்து மடங்கு உள்ளுக்குள் நாம் நொறுங்கிப்போயிருக்கிறோம், எல்லா வகையிலும் துயரத்தையே சந்திக்கிறோம் என்பதை.

2009 ஜனவரியில் இஸ்ரேலின் பீரங்கித் தாக்குதலுக்கு என்னுடைய அருமை மகள்கள் மூவரையும் பறிகொடுத்தேன். பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் சமாதானம் ஏற்பட என்னுடைய மூன்று மகள்கள் தான் தேவையான பலி என்றால், அவர்களுடைய மரணத்தைக்கூட ஏற்கத் தயாராக இருக்கிறேன். அறிவு, துணிச்சல், சக்திமிக்க வார்த்தைகள், அர்த்தமுள்ள நடவடிக்கைகள் மூலம் அந்த சமாதானத்தை நிரந்தரப்படுத்த கடுமையாக உழைக்கத் தயாராக இருக்கிறேன்.

ஆனால், இந்தப் போரிலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், (பாலஸ்தீனர்களும் இஸ்ரேலியர்களுமான) நாம் நம்முடைய தாக்குதல்களைத் தொடர, இந்த மோதல்களையே உதாரணங்களாகக் காட்டி, நியாயப்படுத்திக்கொண்டிருக்கிறோம். அச்சத்தினாலும் பழைய அனுபவங்களாலும் போரைக் கைவிடாமல் தொடர்கிறோம். பொறுப்பாக நடந்து கொண்டு, சமரசத்துக்கான முயற்சிகளில் தீவிரம் காட்டினால்தான், நமக்கு வேறு மாதிரியான முடிவு கிட்டும்.

தோல்வியுற்றவர்கள் நாம்

மோதல் என்பது அச்சம், சந்தேகம், பரஸ்பர அவநம்பிக்கையின் விளைவு. நாம் இந்த செயற்கையான மனத் தடைகளை உடைத்தெறிய வேண்டும் - ஏனென்றால், நாம் நம்முடைய இதயம், அறிவு, ஆன்ம உணர்வுகளில் மாற்றம் கண்டால்தான் இது சாத்தியம். தாள முடியாத சோகம், உயிருக்கும் மேலானவர்களின் இழப்பு, பாதுகாப்பற்ற நிலை, எந்த வேளையில் என்ன நடக்குமோ, எப்போது உயிருக்கு ஆபத்து வருமோ என்ற அச்சம் ஆகிய அனைத்தையும் நான் முழுதாக உணர்ந்திருக்கிறேன். தங்களுக்கு விருப்பமானவர்களை இழந்துவிட்டு, அன்றாடம் அச்சத்தில் வாழும் இஸ்ரேலியர்களின் மனநிலையையும் நான் நன்றாக அறிவேன். நம்பிக்கையையும் அமைதியான வாழ்க்கையையும் மீண்டும்பெற இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனர்களும் செய்ய வேண்டியது என்ன?

நம்முடைய மக்களின் மனப்புண்களை முற்றாக ஆற்ற வேண்டும், அங்குமிங்குமாகப் புண்களை ஆற விடாமல் திறந்து வைத்திருக்கக் கூடாது. சமாதானத்தைப் படிப்படியாகவோ, தவணை முறையிலோ, தற்காலிகமாகவோ கொண்டுவர முயற்சிகள் செய்யக் கூடாது. முயன்றால் முடியாதது ஏதுமில்லை; இனி மாற்றவே முடியாது என்ற நிலையை எட்டுவதற்கு முன்னால், இந்த சமரச முயற்சிகளில் இறங்க வேண்டும். பாலஸ்தீனர்களும் இஸ்ரேலியர்களுமான நாம் அநேக ஆண்டுகளாகக் கோபத்திலேயே கொப்பளித்துக்கொண்டிருக்கிறோம். நம்முடைய கோபம் சாதித்தது என்ன? நாசத்தையும் அநீதியையும்தான் அந்தக் கோபம் நமக்குப் பரிசாகத் தந்திருக்கிறது. இந்தப் போர் முடிந்தால் முடிந்துவிடும் என்று நம்புகிறேன், எல்லோரும் வெற்றியைக் கொண்டாடுவார்கள். உண்மையில், நாம் அனைவருமே இந்தப் போரினால் தோல்வியுற்றவர்கள்தான்.

எந்த விதமான வெற்றி இது?

எந்த விதமான வெற்றி அனாதைக் குழந்தைகளையும் கை-கால்கள் ஊனமுற்ற குழந்தைகளையும் தருகிறது? ஆற்ற முடியாத மனப் புண்களை எந்த வெற்றி தருகிறது? தன்னுடைய அருமைக் குழந்தைகள் மூவரையும் போருக்குப் பலிகொடுத்த தந்தை என்ற வகையில், எல்லா மனிதர்களின் துயரங்களையும் உணர்கிறேன், உள்வாங்கிக்கொள்கிறேன், போதும் இந்த ரத்தக்களரி… நிறுத்துங்கள் என்று கண்ணீருடன் வேண்டிக்கொள்கிறேன். வரலாற்றில் இது மிகவும் முக்கியமான கட்டம், இதை எல்லோரும் நல்ல விதமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். போருக்கு இத்தனை ஆண்டுகளைச் செலவிட்ட நாம், சமாதானத்துக்கு எஞ்சிய நாள்களைச் செலவிடுவோம்.

இஸ்ரேலியர்களின் எதிர்காலப் பாதுகாப்பு, சுதந்திரம், நம்பிக்கை அனைத்தும் பாலஸ்தீனர்களின் சுதந்திரம், பாதுகாப்பு, நம்பிக்கை ஆகியவற்றை உறுதி செய்வதில்தான் இருக்கிறது. ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் போன்றவர்கள் நாம். நம்மில் யாராவது ஒருவருக்கு அடிபட்டால், அது இன்னொரு வரையும் பாதிக்கும். நம்மில் ஒருவருக்கு ஒரு தீங்கு செய்யப்பட்டால், அது இன்னொருவருக்கும் சேதத்தையே ஏற்படுத்தும். நாம் துணிச்சலாகச் செய்யக் கூடிய ஒரே செயல், நம்மிடமுள்ள கண்ணியம், கருணை, ஆன்மபலம் ஆகியவற்றைப் பரஸ்பரம் தழுவிப் பெறுவதுதான். நமக்கு வேறு வழியே இல்லை. நாம் ஒற்றுமையாக இருந்துதான் நம்முடைய புண்களை ஆற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய கண்ணீரைத் துடைத்துக்கொள்ள வேண்டும். பழைய காலங்களின் அனுபவங்கள் தந்த பாடங்களின் அடிப்படையில் எதிர்காலத்தில் அடியெடுத்து வைக்க வேண்டும். “உண்மையிலிருந்து விலகும் ஒரு சமுதாயம், அந்த உண்மையைப் பேசுகிறவர்களைக்கூட வெறுப்போடுதான் பார்க்கும்” என்று ஜார்ஜ் ஆர்வெல் கூறியிருக்கிறார். நாம் அனைவருமே சிந்தும் ரத்தம் ஒரே நிறம்தான், நம் அனைவருக்குமே வாழ்க்கை அபூர்வமானதும் ஒரே மாதிரியானதும்தான். அடுத்தவர்களைக் கொல்லவும் அச்சுறுத்தவும் எந்தவித நியாயமான காரணமும் நமக்கு இல்லை.

மனித சமூகத்தை முன்னெடுத்துச் செல்லும், சமரசத்தையே விரும்பும் புதிய தலைமுறையை நாம் உருவாக்குவோம். இப்பூவுலகிலேயே மிகவும் புனிதமானவை மனிதநேயமும் சுதந்திரமும்தான்.

தி கார்டியன், தமிழில்: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x