Last Updated : 22 Dec, 2016 10:52 AM

 

Published : 22 Dec 2016 10:52 AM
Last Updated : 22 Dec 2016 10:52 AM

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன?

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிந்தைய, கருணாநிதியின் தள்ளாமைக்குப் பிந்தைய இந்த இரு வாரக் காட்சிகள் மீண்டும் ஒரு கேள்வியைத் திட்டவட்டமாக எழுப்புகின்றன. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன? மாநில நலன்களை விடுத்து, ஒரு சீட்டு நிறுவனம்போல அவரவர் நலன், பாதுகாப்பு சார்ந்து காய் நகர்த்தும் இந்த அரசாங்கத்தை எதிர்கொள்ளத் தொலைநோக்கும் துடிப்பும் செயலூக்கமும் ஒருங்கமைந்த, மக்களிடம் இடைவிடாது சுழலும் ஒரு தலைவர் இன்று இருக்கிறாரா? தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக மட்டுமல்ல; காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, விசிக, மதிமுக என எல்லா எதிர்க்கட்சிகளுமே இந்தக் கேள்விக்கு மனசாட்சியோடு முகங்கொடுக்க வேண்டும்.

தமிழகத்தின் அடுத்த தலைமுறைத் தலைவர் களில் பெரும்பாலானோர் தங்களுடைய எழுச்சிக்கு கருணாநிதி, ஜெயலலிதா இருவரின் ஆளுமையும் அரசியலும் தடையாக இருப்பதாக எண்ணிப் புலம்புபவர்கள். இருவரும் நேரடியாக இல்லாத அரசியல் களத்தில் தங்களால் மாயாஜாலங்களை நிகழ்த்திவிட முடியும் என்றும் நம்புபவர்கள். இதோ, அப்படியொரு சூழலும் வந்துவிட்டது. என்ன செய்கிறார்கள் எல்லாம்?

ஜெயலலிதா மறைவுக்கு ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிப்பதாக அறிவித்த அவருடைய சொந்தக் கட்சியான அதிமுககூட, ஜெயலலிதா காலமான அடுத்த நிமிடத்திலிருந்து தீவிரமான அரசியல் காட்சிகளை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளோ காலவரையற்ற தூக்கத்தில் மூழ்கியிருக்கின்றன. இரண்டு முக்கியமான விவகாரங்களை எடுத்துக்கொள்வோம்.

முதலாவது, பணமதிப்பு நீக்க விவகாரம். மோடி அரசு நவம்பர் 8 அன்று அறிவித்த ரூ.500, ரூ.1,000 பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின் நாட்டின் பொருளாதாரம், குறிப்பாக கிராமப்புறப் பொருளாதாரம் பெரிய அளவில் முடங்கியிருக்கிறது. பெருமளவிலானோருக்கு வேலை அளிக்கும் விவசாயமும் அமைப்புசாராத் துறையும் அடிவாங்கியிருக்கின்றன. நாட்டின் முன்னணித் தொழில்முனைவு மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தின் தொழில்துறை நிலைகுலைந்திருக்கிறது. சாமானிய மக்கள் ஒவ்வொரு நாளும் பணம் எடுக்க வங்கிகளின் முன் கால் கடுக்க காத்து நிற்கிறார்கள்.

வங்கத்தில் உள்ள நண்பர்களிடம் உரையாடும் போது சொல்கிறார்கள், "மோடியின் அரசியலைச் சுக்குநூறாக்கிக்கொண்டிருக்கிறார் மம்தா. பண மதிப்பு நீக்க நடவடிக்கையை முன்வைத்து மத்திய அரசாங்கம் எப்படியெல்லாம் பெருமுதலாளி களும், பெருநிறுவனங்களும் நாட்டைத் தனதாக்க வழிவகுக்கிறது; மக்களின் இன்னல்களை அரசாங்கம் எவ்வளவு துச்சமெனக் கையாள் கிறது; மூலதனமும் முதலாளித்துவமும் உலகமயமாக்கலும் எவ்வளவு எளிமையாக ஆட்சியாளர்களைத் தம் கையில் போட்டுக் கொண்டு, இந்தியாவைப் பொம்மையாக ஆட்டிப் படைக்கின்றன என்றெல்லாம் மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸார் ஊருக்கு ஊர் வங்கிகள் முன் நிற்கும் மக்களிடம் அம்பலப்படுத்துகின்றனர். விளைவாக, வங்கத்தின் எதிர்க்கட்சிகளும் இதைக் கையில் எடுக்க, கிராமப்புற - எளிய மக்களிடம் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றிப் பேசுவதற்கான சந்தர்ப்பமாக இதை மாற்றியிருக் கின்றனர்."

தமிழக அரசு கடந்த ஒன்றரை மாதத்தில் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. இரு தினங்கள் முன்பு மோடியைச் சந்தித்த பன்னீர்செல்வம், அவரிடம் அளித்த "ஜெயலலிதாவுக்குப் பாரத ரத்னா வழங்க வேண்டும், நாடாளுமன்றத்தில் சிலை வைக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட 29 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய 141 பக்க மனுவில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்கள் படும் அவஸ்தை தொடர்பில் ஒரு வார்த்தை இல்லை. இதுபற்றி அரசை எதிர்க்கேள்வி கேட்கவும் அதன் மக்கள் விரோதப் போக்கை அம்பலப்படுத்தவும் தமிழக எதிர்க்கட்சிகளிடம் எந்தத் திட்டமும் இல்லை.

இரண்டாவது, சேகர் ரெட்டி விவகாரம். வேலூரைச் சேர்ந்த இவர், தமிழக அரசின் ஒப்பந்ததாரர்களில் முக்கியமானவர். மணல் குவாரிகள் முதல் போயஸ் தோட்டம் வரை ஆளுங்கட்சியினர் மத்தியில் செல்வாக்கோடு பேசப்படுபவர். திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர். சேகர் ரெட்டி தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் சமீபத்தில் நடத்திய சோதனைகளில் ரூ.147 கோடி பிடிபட்டிருக்கிறது. நாமெல்லாம் ஒரு நாளைக்கு ரூ.2,000 புதிய நோட்டு ஒன்றைப் பெற ஏடிஎம் முன் பலமணி நேரம் அன்றாடம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில், புதிய ரூ.2,000 நோட்டுக் கட்டுகளாக மட்டும் பிடிபட்டிருப்பது ரூ.34 கோடி. கூடவே, 22,250 பவுன் - 178 கிலோ தங்கம். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் நெருக்கமானவராகச் சொல்லப்படும் சேகர் ரெட்டியோடு பன்னீர்செல்வம் மொட்டை சகிதமாகக் காட்சித் தரும் புகைப்படம் இந்த அரசுக்கும் சேகர் ரெட்டிக்கும் இடையிலான தொடர்பை எளிதில் உணர்த்தக் கூடியது.

டெல்லியில் உள்ள நிதி அமைச்சக அதிகாரிகள், "இது வெறும் பணப் பதுக்கலாக மட்டும் தெரிய வில்லை. மாறாக, பழைய ரூபாய் நோட்டுகளைத் தங்கமாகவும், புதிய ரூபாய் நோட்டுகளாகவும் மாற்றும் வேலையும் நடந்ததாகத் தெரிகிறது. அதிகாரத்தில் இருக்கும் பலரின் ஊழல் கறுப்புப் பணம் சேகர் ரெட்டியின் மூலமாக வெள்ளையாக மாறியிருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன" என்கிறார்கள்.

வருமான வரித் துறையின் தொடர் நடவடிக்கை யாக அடுத்து தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் சோதனை நடந்திருக்கிறது.

தமிழகத்தில் சமீப காலத்தில் உயர் பொறுப் பிலிருப்பவர்கள் எவரும் இவ்வளவு வில்லங்கமான விவகாரங்களில் இத்தனை அப்பட்டமாகச் சிக்கியதில்லை. இதுபற்றியெல்லாம் அறிக்கை கள் விடுவதைத் தாண்டி, தமிழக எதிர்க் கட்சிகளுக்குச் செய்ய ஒன்றும் இல்லை.

சுற்றிலும் அரங்கேறும் காட்சிகளைக் கவனியுங்கள். காலமெல்லாம் நடத்திப் பழகிய திமுகவுக்குள்ளான உட்கட்சி கோதாவிலேயே இன்னமும் தீவிரமாக இருக்கிறார் ஸ்டாலின். விஜயகாந்திடம் எதிர்பார்க்க ஏதுமில்லை. தேமுதிகவை மரணப் படுக்கையில் தள்ளிய பெருமித சாதனைக்குப் பின், அடுத்த இலக்கு தேடிக்கொண்டிருக்கிறார் வைகோ. திருமாவளவன் திசை தேடும் குழப்பத்தில் இருக்கிறார். துண்டைக் கையில் போட்டுக்கொள்ளும் பாணியை அரசியலுக்கு அறிமுகப்படுத்திய தா.பாண்டியனும் அவர் வழிவந்த முத்தரசனும் நவீன புரட்சியைப் பவ்ய உடல்மொழி மூலம் வெளிப்படுத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஜி.ராம கிருஷ்ணனைக் கடைசியாகப் பரபரப்பாக மருத்துவமனைகளின் வாசல்களில் பார்த்த ஞாபகம். உருப்படியான அறிக்கைகளைத் தொடர்ந்து வெளியிடுவதில் ராமதாஸ் முன்னணியில் இருக்கிறார். ஆனால், முதல்வர் கையெழுத்திட பேனாவும் கையுமாகத் திரிந்த அன்புமணி என்று அங்கே ஒருவர் இருந்தாரே, தேர்தலுக்குப் பின் அவர் என்னவானார்? இவர்கள் எல்லோரையும் விஞ்சிவிட்டவர் தமிழக காங்கிரஸின் புதிய தலைவர் திருநாவுக்கரசர். "ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் வெள்ளை அறிக்கையும் வேண்டாம்; கறுப்பறிக்கையும் வேண்டாம்" என்று வெள்ளையறிக்கை கேட்டவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடியையும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனோடு இது தொடர்பில் அவர் நடத்திவரும் குடுமிப்பிடிச் சண்டையையும் பார்த்து அதிமுக அமைச்சர்களே திகைத்து நிற்கிறார்கள்!

ஒரே ஒரு கேள்வி, எந்த அடிப்படையில் இவர்கள் எல்லாம் தங்களுக்குத் தமிழக மக்கள் நாளை மகுடம் சூட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?

தமிழகத்தில் ஏனைய எல்லாக் கட்சிகளையும் விட அதிமுக பிரமாண்டமான இடத்தில் நிற்க இதுநாள் வரை அதன் வசம் இரு அஸ்திரங்கள் இருந்தன. ஒன்று, எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் தம் தனிப்பட்ட கவர்ச்சியை மூலதனமாக்கி உருவாக்கிய பிம்பத் தலைமை. மற்றொன்று, கடைசிக் கிராமத்துக்கும் அவர்கள் கொண்டுசென்ற கட்சி அமைப்பு. அதிமுக அதன் பிம்பத் தலைமையை இழந்திருக்கலாம்; அதன் கட்சி அமைப்பு இன்னும் உயிரோட்டத்துடன் இருக்கிறது. அதிமுகவின் எல்லா வியூகங்களையும் மீறி திமுக இவ்வளவு காலம் வலுவோடு நிற்க கருணாநிதியின் அயராத உழைப்பும் திமுகவிடம் அவர் தக்கவைத்த போராட்டக் குணமுமே மூலகாரணங்கள். அன்றைய கம்யூனிஸ்ட்டுகள் முதல் பாமக வரையிலும்கூட இந்தப் போராட்டக் குணத்தில் ஊறியிருந்தார்கள்.

ஜெயலலிதாயிஸத்தின் தாக்கமோ என்னமோ, கடந்த பத்தாண்டுகளில் திமுக உள்ளிட்ட எல்லாக் கட்சிகளுமே கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடமிருந்து விலகின. தொலைக்காட்சிகளும் சமூக வலைதளங்களும் பெருகிவிட்ட இந்நாட்கள், அன்றாடம் ஒரு அறிக்கை, அவ்வப்போது பேட்டிகள், சூழல் நெருக்கும்போது சில போராட்டங்கள் - பொதுக்கூட்டங்கள் என்பதாக மக்கள் அரசியலைச் சுருக்கிவிட்டன. தமிழகத்தைப் பிம்ப அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான தருணம் இது. தமிழகத்தை ஜெயலலிதாயிஸத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்றால், எதிர்க்கட்சித் தலைவர்கள் முதலில் தாங்கள் ஜெயலலிதா அல்ல என்பதை உணர வேண்டும்; 'உள்ளேன் ஐயா ரக' அடையாள அரசியலிலிருந்து விடுபட்டு வீதியில் இறங்க வேண்டும்!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x