இடையிலாடும் ஊஞ்சல் 9: போதுமான அதிர்ச்சி இல்லாப் பொதுச் சமூகம்

இடையிலாடும் ஊஞ்சல் 9: போதுமான அதிர்ச்சி இல்லாப் பொதுச் சமூகம்
Updated on
2 min read

நம்முடைய தமிழ்ச் சமூகம் எல்லா நிகழ்வுகளுக்கும் அதிர்ச்சி அடைவதில்லை. சிலவற்றுக்குக் கூடுதலான அதிர்ச்சி அடைவதும், சில நிகழ்வுகளைக் கண்டுகொள்ளாமலே விடுவதும் என பாரபட்சமான அணுகுமுறையைக் கொண்டுள்ளது.

புத்தாண்டு அன்று புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மலம் கொட்டப்பட்டிருந்த சம்பவம் என்ன அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று பார்க்க வேண்டும். ஒன்றிரண்டு பத்திரிகைகளில் அதிர்ச்சி என்ற வார்த்தையுடன் இச்செய்தி வெளியானதைத் தவிர, வேறு எந்த அதிர்ச்சியும் சமூகத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இந்தத் தொட்டியிலிருந்து வந்த குடிநீரைப் பருகிய குழந்தைகள் பலரும், தொடர்ந்து உடல்நலப் பாதிப்புக்குள்ளான நேரத்தில்தான் தண்ணீரில் மலம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. இதைச் செய்தவர்கள் யார் என்பது தற்போதுவரை கண்டறியப்படவில்லை.

20 ஆண்டுகளுக்கு முன் - 2002இல், திருச்சி மாவட்டம் திண்ணியத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ராமசாமி, முருகேசன் இருவரின் வாயிலும் அந்த ஊரின் ஆதிக்க சாதியினர் மலம் திணித்த கொடுமை நடந்தது. அப்போதும் நம் சமூகம் பெரிய அதிர்ச்சி ஒன்றும் அடையவில்லை. 1940களில் தஞ்சை மண்ணில், தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளிகள் வாயில் பண்ணையார்கள் மாட்டுச் சாணத்தைக் கரைத்து வாயில் புகட்டுவதை ஒரு வழக்கமான தண்டனையாகச் செய்துகொண்டிருந்தார்கள்.

இது பற்றிக் கலாச்சாரத்திலும் கலை இலக்கியத்திலும் மகோன்னதமான இடத்தை அடைந்திருந்த தஞ்சை மண்ணின் பெருமக்கள் யாரும் அதிர்ச்சி அடைந்திருக்கவில்லை. செவ்வியல் சங்கீதத்தில் சிறு பிசிறும் தட்டிவிடவில்லை. எழுதப்பட்ட மகத்தான இலக்கியங்களில் யாரும் ஒரு வரி இதைப் பற்றி எழுதிவிடவும் இல்லை.

1999இல் திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளிகள், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கித் தங்கள் கோரிக்கைகளுடன் ஊர்வலமாக வந்தபோது, காவல் துறை தடியடியும் துப்பாக்கிச்சூடும் நடத்தியதில் ஒன்றரை வயதுக் குழந்தை விக்னேஷ் உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர். ஒரு மணி நேரம் பேருந்துப் போக்குவரத்துத் தடைபட்டதைத் தவிர வேறெந்த அதிர்ச்சியையும் சமூகம் காட்டிவிடவில்லை. திருநெல்வேலியில் அல்வா வியாபாரம் அன்றைக்கும் அமோகமாகத்தான் நடந்துகொண்டிருந்தது. குறை ஒன்றும் இல்லை.

இங்கு மட்டுமல்ல, மராட்டிய மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் உள்ள கயர்லாஞ்சி கிராமத்தில் 2006இல் நடந்த கொடுமையைத் திரும்ப எழுதவும் கை மறுக்கிறது. பையாலால் போட்மாங்கே குடும்பத்தின் பெண்களான சுரேகா, பிரியங்கா இருவரையும் ஆதிக்க சாதியினர் ஊர் கூடி வன்புணர்வு செய்ததோடு உயரே தூக்கிப்போட்டுக் கொலை செய்தனர்.

இன்னொரு கேள்வியும் எழுப்பப்பட வேண்டும். மலம் அள்ளுவதற்கென்றே ஒரு சாதியை ஒதுக்கிவைத்துள்ள ‘நாகரிக’ சமூகம் நம்முடையது. எல்லாச் சாதிகளிலும் ஏழைகள் இருக்கின்றனர். ஆனால், எந்தச் சாதி ஏழையும் அடுத்த சாதியினரின் மலத்தை அள்ளப்போவதில்லை. ஆதிக்க சாதிகளாக வலம்வருகின்ற இடைநிலைச் சாதியினர்தான் புதுக்கோட்டை மாவட்டத்தின் இறையூரிலும் திருச்சி மாவட்டம் திண்ணியத்திலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக மலத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

இப்போது மட்டும் எப்படி அவர்கள் மலம் அள்ளினார்கள்? இறையூரின் குடிநீர்த்தொட்டியில் அள்ளிப் போடப்பட்ட மலத்தின் அளவு அதிகம். அவ்வளவு மலத்தையும் ஒரு தனிநபர் மட்டும் கொட்டியிருக்க முடியாது. ஒரு குழு இறங்கி வேலை செய்திருக்க வேண்டும். மனித மலத்தைக் குழுவாகச் சென்று சேகரித்து, பத்திரமாக அதைச் சுமந்துகொண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் ஏணியில் ஏறி உள்ளே கொட்டியிருக்கிறார்கள். இவ்வளவு பக்குவமாக மலம் அள்ளிய இந்த ஆதிக்க சாதியாரை, நிரந்தரமாக ஊர் மலத்தை அள்ளச்சொல்லித் தீர்ப்பு வழங்க நம் சட்டத்தில் இடமில்லையே!

மேலே குறிப்பிட்ட எல்லாக் கொடு நிகழ்வுகளும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் என்பதால்தான் நம் சமூகம் அதிர்ச்சியடையாமல் நிதானம் காக்கிறது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இந்த ‘நம் சமூகம்’ என்கிற சொற்கள் யாரைக் குறிக்கின்றன. நம் சமூகம் என்கிற பொதுச் சமூகம் அப்படி இருக்கத்தான் செய்கிறதா?

1920-30களில் தமிழ்நாட்டில் ‘பிராமணர் அல்லாதோர் நலச் சங்கம்’ உருவாகி, பிற சாதியார் நலன்களுக்காகப் போராடி நல்ல மாற்றங்களுக்கு வித்திட்டது வரலாறு. ஆனால் உண்மையில், பிராமணர்–பிராமணர் அல்லாதார் என்பதாக நம் சமூகம் பிளவுண்டிருப்பதைவிட தலித்-தலித் அல்லாதோர் என்கிறதாகத்தான் ஆழமாகப் பிளவுண்டு கிடக்கிறது. அதனால்தான் தலித் மக்களுக்கு அநீதி நிகழும்போது அசட்டையாக இருக்கிறது ‘பொதுச் சமூகம்’.

பொதுச் சமூகம் எனப் புரிந்துகொள்ளப்பட்டுள்ள தலித் அல்லாதார் சமூகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப ஒரு பேரியக்கம் இன்று தேவைப்படுகிறது. சாதி எனும் கற்பிதத்தை அவர்கள் மனங்களிலிருந்து அகற்றிட மாபெரும் அறிவியக்கம் நடத்தப்பட வேண்டும். வகுப்பறைகளிலும் தெருக்களிலும் ஒரே நேரத்தில் பாடங்கள் நடத்தப்பட வேண்டும்.

உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத சாதி, இந்தியாவின் பெரும்பான்மை மதத்தைச் சார்ந்த மக்களிடையிலேயே தீவிர பிளவுபடுத்துதலை ஏற்படுத்திவரும் உண்மையை அறிவியல்பூர்வமாக ‘பொதுச் சமூக’ மக்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும். மீண்டும் மீண்டும் தந்தை பெரியாரைத் தேட வேண்டியநிலையில்தான் நாம் இருக்கிறோம்.

- ச.தமிழ்ச்செல்வன் எழுத்தாளர், பண்பாட்டுச் செயல்பாட்டாளர்; தொடர்புக்கு: tamizh53@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in