

இன்றைய கல்லூரி மாணவர்களில் பெரும்பாலானோர், நோட்டுப் புத்தகங்களைவிடவும் திறன்பேசிகளைத்தான் (Smartphones) அதிக அளவில் சார்ந்திருக்கின்றனர்.
வகுப்பில் குறிப்புகள் எடுப்பது, சக மாணவர்களுடன் அவற்றைப் பரிமாறிக்கொள்வது, மீண்டும் அவற்றைத் தனியாக அமர்ந்து படிப்பது என்பன உள்ளிட்ட அனைத்துக்கும் திறன்பேசியைப் பயன்படுத்துவது என்றாகிவிட்டது. கற்றல் சார்ந்த செயல்பாட்டின் நிலையே இப்படியென்றால், பாடப்புத்தகத்துக்கு வெளியில் வாசிப்புப் பழக்கம் இன்றைய மாணவர்களிடம் எப்படி இருக்கும் என்பது விவாதத்துக்குரிய விஷயம்.
இன்றைக்கு பிடிஎஃப் (PDF) வடிவில் ஏராளமான பத்திரிகைகள், நாளிதழ்கள், புத்தகங்கள் இணையதளத்திலும் திறன்பேசியிலும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. வாசிப்பின் மீது ஆர்வம் கொண்டவர்களில் பலர், அவற்றையெல்லாம் பிறகு வாசித்துவிடலாம் என எண்ணிப் பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக்கொள்கிறார்கள். ஆனால், அவற்றை முழுமையாக ஒருபோதும் வாசிக்க முடிவதில்லை.
அனைத்தையும் திறன்பேசியிலோ, கணினியிலோ சேமித்துவைப்பது எல்லா நேரங்களிலும் பலனளிக்கும் எனச் சொல்ல முடியாது. வைரஸ் தாக்குதலால் தரவுகள் (data) பறிபோகும் அபாயம் உள்ளது. அவற்றை மீட்டெடுக்க அதிநவீனத் தொழில்நுட்பம் கைகொடுக்கலாம். ஆனால், அது எல்லோருக்கும் சாத்தியமாகிவிடாது. இந்த இடத்தில்தான் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
காரணிகள்: மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய டோப்பமைன் (dopamine) என்ற ஹார்மோன்கள் நமது மூளையில் சுரக்கின்றன. நமக்குப் பிடித்தமான செயல்பாட்டைத் தொடர்ந்து செய்யும்போது இந்த ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கின்றன. இன்றைய இளைஞர்கள் திறன்பேசியைப் பயன்படுத்தும்போது இந்த வகை ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட சமூக வலைதளங்கள், செயலிகள் இளைஞர்களையும் குழந்தைகளையும் வசியம் செய்துவைத்திருக்கின்றன. பெருந்தொற்றுக் காலத்தில் திறன்பேசிகளின் பயன்பாடு மாணவர்களிடமும் அதிகரித்தது நாம் அறிந்ததுதான்.
அமெரிக்காவில் 2022 நிலவரப்படி, 95% இளைஞர்கள் யூடியூப் பார்த்து ரசிப்பதாக பியூ ஆய்வு மையம் (Pew Research Center) நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. டிக்டாக் (67%), இன்ஸ்டாகிராம் (52%), ஸ்னாப்சாட் (41%), ஃபேஸ்புக் (32%) போன்றவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருக்கின்றன.
இந்தியாவில் பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்பு, 20 முதல் 36 வயது வரையிலான பல்கலைக்கழக மாணவர்கள், நாளொன்றுக்குச் சராசரியாக 6 மணி நேரம் திறன்பேசிகளைப் பயன்படுத்திவந்தனர் என்றும், பெருந்தொற்றுக் காலத்தில் அது 8 மணி நேரமாக அதிகரித்தது என்றும் தெரியவந்திருக்கிறது. பொதுமுடக்கத் தளர்வுகள், தடுப்பூசிகள் ஆகியவற்றால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்ட பின்னரும் திறன்பேசியின் அதீதப் பயன்பாடு தொடரவே செய்கிறது.
தீர்வுகள்: இந்தச் சூழலில், புத்தகத்தைக் கையிலெடுத்து வாசிக்கின்ற அனுபவத்தை இந்த டிஜிட்டல் தலைமுறையிடம் வளர்த்தெடுப்பது அவசியம். அந்தப் பொறுப்பை ஆசிரியர்கள் எடுத்துக்கொள்ளலாம். இளம் தலைமுறையினரின் விருப்பங்களையும் கனவுகளையும் நனவாக்குகின்ற புத்தகங்களை அடையாளம் கண்டு, அவர்களிடத்தில் கொடுக்க வேண்டும்.
வரலாறு, சமூகவியல், அறிவியல், பண்பாடு, மானுடவியல், சட்டம், தமிழ் இலக்கியம், சர்வதேச இலக்கியம் என்று பல்வேறு துறைசார்ந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிப்பதால், சமூக அவலங்களைப் புரிந்துகொள்வதற்கும், சமூக மாற்றத்துக்கான கருவிகளாக இளைஞர்கள் உருவெடுக்கவும் வழிபிறக்கும். மாற்றம் தொடங்கட்டும்!
அ.இருதயராஜ்; தொடர்புக்கு: iruraj2020@gmail.com