

தமிழ் மொழியின், பண்பாட்டின் தொன்மைக்கான சான்றாக முன்மொழியப்படுபவை தமிழ்ச் செவ்வியல் நூல்கள். இவை வெறும் பெருமிதம் மட்டுமல்ல; வாசித்துச் சுவைக்க வேண்டிய அருந்தமிழ் முத்துகள். செய்யுள் வடிவில் இருக்கும் இந்நூல்களை யாவரும் வாசித்துணரும் வகையில் சந்தி பிரித்து எளிய உரையுடன் தமிழ் வளர்ச்சித் துறையும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகமும் இணைந்து பதிப்பித்துள்ளன.
இன்றைய காலகட்ட வாசகர்களின் வாசிப்பை நோக்கமாகக் கொண்டு இந்த நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ் முறையாகக் கற்காதோரும் நுழையும் வண்ணம் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் வகையில் நூல் அறிமுகக் குறிப்பைத் திட்டமிட்டு வடிவமைத்துள்ளனர். உதாரணமாக ப.சரவணன் உரை எழுதியுள்ள ‘பொருநர் ஆற்றுப்படை’ நூலில் நல்லறிமுகம் எழுதியுள்ளார்.
இந்நூல், பத்துப்பாட்டு நூல்களுள், ஆற்றுப்படை இலக்கணம் அமைந்த ஐந்து நூல்களுள் ஒன்று எனத் தொடங்குகிறார் சரவணன். பரிசு பெற்ற ஒருவன் பரிசு பெறாதவனை வள்ளல் ஒருவனிடம் ஆற்றுப்படுத்துவது ‘ஆற்றுப்படை’ எனச் சொல்கிறார். பொருநர் என்பவர் கிணை என்னும் இசைக் கருவியை இசைக்கும் கூத்தர். ஆற்றுப்படுத்தும் கூத்தரின் வறுமையையும், ஆற்றுப்படுத்தப்படும் கூத்தரின் வறுமையையும் இப்பாடல்கள் பதிவுசெய்வதாக விளக்கியிருக்கிறார். கூத்தரின் பெண்பாலான விறலியர் பற்றிய விவரிப்புகளும் உள்ளன.
இந்நூலின் ஆசிரியர் முடத்தாமக் கண்ணியர், நூலின் பாட்டுடைத் தலைவன் கரிகால் பெருவளத்தான் ஆகியோர் குறித்தும் தனிக் கட்டுரைகளைத் தந்துள்ளார் உரையாசிரியர். திருடர்களையும் மதி மயங்கச் செய்யும் இனிய இசையை இசைக்கும் கூத்தர்களின் வாழ்க்கையையும் அழகாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். கூத்தர் வாழ்க்கையின் ஒரு தெளிவான சித்திரத்தையும் இந்நூல் வாசகர்களுக்கு உருவாக்கிவிடுகிறது.
பிரிதலையும் பிரிதல் நிமித்தத்தையும் கொண்ட பாலைத் திணை நூலான பட்டினப்பாலை அழகான ஓவியங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது. நா.அருள்முருகன் இதற்கு உரை எழுதியுள்ளார்; இந்தப் பாடல்களைக் கவித்துவம் குன்றாமல் உரைத்துள்ளார். ‘உணாக் கவரும் கோழி எறிந்த கொடுங் கால் கனங்குழை’ என்ற பாடல் வரிகளின் தனிச் சொற்கள் பொருளாகவும் தனிச் சொற்றொடராகவும் அதை விளக்குகிறார் அருள்முருகன். உலரவைத்த நெல்லைக் கொத்த வரும் கோழியைத் தங்கக் கம்மலால் பெண்கள் விரட்டும் செழிப்புள்ள காவிரிப்பூம்பட்டினம் பற்றிய விவரிப்பு இது.
இவ்வகையில் பெரும்பாண் ஆற்றுப் படை (உரையாசிரியர்: சொ.மகாதேவன்), மலைபடுகடாம் (உரையாசிரியர்: ப.சரவணன்), முல்லைப் பாட்டு (உரையாசிரியர்: க.பலராமன்), சிறுபாண் ஆற்றுப்படை (உரையாசிரியர்: இரா.முருகன்), நெடுநெல்வாடை (உரையாசிரியர்: க.பலராமன்), குறிஞ்சிப்பாட்டு (உரையாசிரியர்:நா.ஹரிகுமார்), திருமுருகு ஆற்றுப்படை (உரையாசிரியர்:அ.செந்தில்குமரன்), மதுரைக்காஞ்சி (உரையாசிரியர்: ப.சரவணன்) ஆகிய செவ்வியல் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை போட்டித் தேர்வு மாணவர்களுக்குப் பயன்படக்கூடியவை. மேலும் தமிழ் வாசிக்கத் தெரிந்த ஒவ்வொரும் வாசித்து ரசிக்க வேண்டிய அரும் பொக்கிஷங்கள் இவை.- மண்குதிரை
செவ்வியல் நூல்கள் உரைவரிசை
பொதுப் பதிப்பாசிரியர்: ப.சரவணன்
தமிழ் வளர்ச்சித் துறை, பாடநூல் கழகம் வெளியீடு
புத்தகக் காட்சி அரங்கு எண்: F 28