Published : 20 Dec 2016 10:29 AM
Last Updated : 20 Dec 2016 10:29 AM

என்ன நினைக்கிறது உலகம்? - அலெப்போ அவலம்!

சிரியாவின் அலெப்போ நகரில் போரின் பிடியில் சிக்கியிருக்கும் மக்களுக்கு ஆதரவாக, ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. சிரியா மக்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, பாரிஸ், லண்டன், ஆம்ஸ்டெர்டாம், ஆஸ்லோ என்று பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ரஷ்யா, ஈரான் தூதரகங்கள் முன்னர் துருக்கி மக்கள் போராட்டம் நடத்தினர்.

இராக் மீது அமெரிக்கா குண்டு வீசியபோது நடந்த போராட்டங்களுக்கு இணையாக நடத்தப்பட்டிருக்கும் இந்தப் போராட்டங்கள், பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடவில்லை என்பதுதான் சோகம். கடந்த ஆறு ஆண்டுகளாக இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டிருந்தால், உண்மையாகவே குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்!

அதேசமயம், சிறிய அளவிலான மாற்றமும் நடந்தி ருக்கிறது. பாதிக்கப்பட்ட சிரியர்கள் மீதான மக்களின் அனுதாபம், அலெப்போவிலிருந்து மக்கள் தப்பிச் செல்வதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அனுமதிக்க வழிவகுத்திருக்கிறது. எனினும், பயங்கரவாதிகளின் எண் ணத்தைப் பொறுத்தே இந்த ஏற்பாட்டின் தலைவிதியும் இருக்கும். அலெப்போவில் பரிதவித்துக்கொண்டிருக்கும் லட்சக் கணக்கிலான மக்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டால், சர்வதேச அளவில் பேச்சுவார்த்தை மூலம் மிக அதிக எண்ணிக் கையிலான மக்கள் வெளியேற்றப்படும் நிகழ்வைக் காணலாம்.

சிரியாவில் நடந்துகொண்டிருப்பது போர்க்குற்றம்; மனிதத்தன்மைக்கு எதிரான குற்றம். இப்பிரச்சினையின் தீவிரத்தை ஒப்பிடும்போது, இதற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் என்பதுதான் உண்மை.

அலெப்போ நகரின் இந்த நிலை, அரபு, முஸ்லிம் உலகம், மேற்கத்திய நாடுகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதாபிமானத்தின் தோல்வியை எடுத்துக்காட்டுகிறது.

உலக அளவில் இடதுசாரிகளின் ஆதரவு தங்களுக்குக் கிடைக்கும் என்று சிரியா மக்கள் பலர் எதிர்பார்த்திருந்த நிலையில், இடதுசாரிப் பார்வை யாளர்களும், பதிப்பகங்களும் வேறு மாதிரியாகப் பேசத் தொடங்கிவிட்டனர். சிரியா அதிபர் பஷார் அல் அஸாதின் அடக்குமுறைகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கிறார்கள்.

ஒபாமா அரசு சிரியா மக்களுக்குப் பேச்சளவில் ஆதரவு தெரிவித்ததுடன், அஸாத் அரசுக்கு எதிராகப் போராடிவரும் 'ஃப்ரீ ஆர்மி' படையினருக்கு ஆயுதங்கள் அனுப்பத் தனது நட்பு நாடுகளுக்கு அவ்வப்போது அனுமதி வழங்கிவருகிறது.

2013-ல் விஷவாயுத் தாக்குதலில் 1,500 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ரசாயனக் கட்டுப்பாடெல்லாம் காணாமல் போய்விட்டது. சிரியாவின் தலைவிதியைக் கிட்டத்தட்ட வெளிப்படையாகவே ரஷ்யா, ஈரானின் வசம் அமெரிக்கா ஒப்படைத்துவிட்டது.

சிறையிலிருந்து சலாபிய - ஜிகாதிகளை விடுதலை செய்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பல்வேறு படுகொலை நிகழ்வுகளுக்குக் காரணமாக இருந்தார் அஸாத். பாலஸ்தீனர்களைப் பாதுகாப்பதில் தோல்வி யடைந்த அரபு நாடுகள், சிரியா விஷயத்திலும் தோல்வி அடைந்திருக்கின்றன.

இந்நிலையில், பல்வேறு முனைகளிலிருந்து நடத்தப்படும் இந்தச் சண்டையில் அஸாத் வெற்றி பெறுவது என்பது ஐஎஸ் பயங்கரவாதிகளின் வெற்றியாகவும் பார்க்கப்படும் என்பதுதான் உண்மை!

- அல்ஜஸீரா (கத்தார் ஊடகம்) | தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x