Published : 01 Dec 2016 10:47 AM
Last Updated : 01 Dec 2016 10:47 AM

தமிழகத்தின் மகாரத்தினம் விற்பனைக்கு!

கடைசியில், பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தபோது "மகாரத்னா அந்தஸ்து பெற்றது சேலம் உருக்காலை. அதைத் தனியாருக்கு விற்கும் திட்டம் எதுவுமில்லை" என்று சொன்னார் மத்திய கனரகத்துறை அமைச்சர் அனந்த் கீதே. ஆனால், "சேலம் உருக்காலையின் பங்குகளைத் தனியாருக்கு விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்று நவம்பர் 28-ல் மக்களவையில் எழுத்துபூர்வமாகத் தெரிவித்திருக்கிறார் மத்திய உருக்குத்துறை இணை அமைச்சர் விஜய் தேவ் சாய். ஆண்டுக்கு ரூ.100 கோடி லாபம் ஈட்டும் சேலம் உருக்காலை, தமிழகம் போராடி வளர்த்தெடுத்த சொத்து. இப்போது அதைத் தனியாருக்குத் தாரை வார்க்கப்போகிறார்கள்.

சர்வதேச சந்தையில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ள சேலம் 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' 43 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கும், பாபா அணுமின் நிலையத்துக்கும், கல்பாக்கம் அணுமின் நிலையத் துக்கும், ரயில்வே துறைக்கும், இந்திய அரசின் நாணயங்கள் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுவது சேலம் உருக்குதான். சிறப்பாகச் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களை 'ரத்தினங்கள்' என்று வர்ணித்து இந்தியா பட்டியல் போட்டுள்ளது. அதில் உள்ள ஏழு 'மகா' ரத்தினங்களில் சேலம் உருக்காலையும் ஒன்று.

உருக்காலை பிறந்த கதை

அவ்வளவு சாதாரணமாக இங்கு உருவாகி வந்துவிடவில்லை சேலம் உருக்காலை. அதற்கு தனி அரசியல் வரலாறே உண்டு. சேலம் உருக் காலைக்கும், சேது கால்வாய்க்கும், தூத்துக்குடித் துறைமுகத்துக்கும் திமுக சார்பில் 'எழுச்சி நாள் போராட்டம்' அறிவித்தார் அண்ணா. தமிழகம் முழுவதும் கூட்டங்கள் நடத்தப்பட்டு, தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. சேலம் ஆலையை இங்கு கொண்டுவர பல முயற்சிகளை முன்னின்று எடுத்தவர் காமராஜர். அவர் அப்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார். அன்றைய பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியின் அமைச்சரவையில், மத்திய உருக்குத் துறை அமைச்சராக இருந்தவர் நீலம் சஞ்சீவ ரெட்டி. தன்னுடைய மாநிலமான ஆந்திரத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் இந்த உருக்காலையை அமைக்க விடாப்பிடியாக முயன்றார் அவர். காமராஜர் இங்கே கொண்டுவர முயன்றார்.

காமராஜர் தமிழகத்திலுள்ள எல்லாக் கட்சி களோடும் இணைந்து, தமிழகத்தை நோக்கி இந்த ஆலையை இழுக்கும் முயற்சியில் கை கோத்துக்கொண்டார். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக்கொண்டு பிரதமர் சாஸ்திரியைச் சந்தித்து, "சேலத்துக்கு உருக் காலை வேண்டும்" என்று வலியுறுத்துமாறு கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தியைக் கேட்டுக் கொண்டார் காமராஜர். அதன்படி தமிழக எம்.பி.க்கள் சாஸ்திரியைச் சந்தித்து முறையிட்டனர். காமராஜரும், "அவசியம் சேலத்துக்கு உருக்காலை வேண்டும்"என்று வலியுறுத்தினார். காய்கள் தொடர்ந்து நகர்த்தப்பட்டன. இதற்குள் சாஸ்திரி காலமானார். இந்திரா பிரதமரானார். தமிழகத்தின் அப்போதைய முதல்வர் கருணாநிதி. இந்திரா கூட்டிய திட்டக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற கருணாநிதி அக்கூட்டத்தில் சேலம் உருக்காலைக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வில்லை என்று தெரிந்தபோது கோபத்தோடு கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினார். தொடர்ந்து திமுக இதை ஒரு அரசியல் பிரச்சினை யாக்கியது. விளைவாக, சேலம் உருக்காலைக்கு அனுமதி வழங்கினார் இந்திரா காந்தி. 1970 செப்டம்பர் 16-ல் முதல்வர் கருணாநிதி முன்னிலையில், பிரதமர் இந்திரா காந்தி சேலம் உருக்காலைக்கு அடிக்கல் நாட்டினார்.

தனியார் மயம்

சேலம் உருக்காலை மிக விரைவில் தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கிக் கொண்டது. எனினும் அந்த வளர்ச்சி எளிதானதல்ல. அரசால் ஊட்டி வளர்க்கப்பட்ட நிறுவனம் அல்ல இது. ஆலையின் விரிவாக்கத்துக்கான வெப்ப உருட்டாலை, குளிர் உருட்டாலை இரண்டையும் பெறுவதற்கு மத்திய அரசுடன் எவ்வளவு போராட வேண்டியிருந்தது இந்த ஆலை என்பதை ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.

இன்று உயர்தர எவர்சில்வர் தகடுகள் உற்பத்தியில் சர்வதேச அளவிலான 12 பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றாக உயர்ந்து நிற்கும் சேலம் உருக்காலை தயாரிக்கும் தகடுகளை உலகின் 37 நாடுகள் வாங்குகின்றன. ரூ.800 கோடி அன்னியச் செலாவணியும், உற்பத்தி வரி, இறக்குமதி வரி என்ற வகையில் ரூ.1,200 கோடியும் அரசுக்கு அது ஈட்டித் தருகிறது.

ஆலையின் இப்போதைய மதிப்பு ஏறத்தாழ ரூ.4,000 கோடி. ஆலையை மேலும் மேலும் வளர்த்தெடுக்க வழியில்லாமல் முட்டுக்கட்டை போட்ட அரசியல்வாதிகள் கடந்த 20 ஆண்டுகளாகவே இதைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது தொடர்பாகப் பேசிவருகிறார்கள். முந்தைய பாஜக ஆட்சியின்போதும் இந்த விவகாரம் பேசப்பட்டது. தொடர்ந்து, இப்படியான முயற்சிகள் நடப்பதும் பொதுமக்கள், தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பின்வாங்குவதுமாக இருந்தது. 'டாடா யூசினர்' நிறுவனம்கூட இதை வாங்க முயற்சித்தது.

பறிபோகும் உரிமை

சேலம் ஆலையின் உற்பத்தி வீழ்ச்சி, வருவாயில் இழப்பு என்றெல்லாம் கதைகள் பரப்பப்பட்டால் அதற்கான தோற்றுவாய் அரசின் நிர்வாகக் கோளாறுகளில் இருக்கிறதே தவிர ஆலையின் இயல்பில் அல்ல. சேலம் ஆலையின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் எண்ணம் இதுவரை ஈடேறாமல் இருக்கக் காரணம் பொதுமக்கள், தொழிற் சங்கங்கள் எதிர்ப்புகளோடு மாநிலத்தின் பெரும்பான்மை அரசியல் கட்சிகளும் தமிழக அரசும் மத்திய அரசுக்கு இந்த விஷயத்தில் அடிபணியாமல் நின்றதுதான். இப்போதைய அதிமுக அரசு இந்த விஷயத்தில் மாநிலத்தின் உரிமையைப் பறிகொடுத்துவிட்டது என்றே சொல்லத் தோன்றுகிறது.

மேலும், இரும்புச் செறிவுமிக்க கஞ்சமலை வடக்குப் படுகையில் 638 ஏக்கர் பரப்புக்கு ஒரு மில்லியன் டன் இரும்புத் தாதுவை வெட்டியெடுக்க 'ஜிண்டால் சௌத் வெஸ்ட்' நிறுவனத்துக்கு அனுமதி அளித்துவிட்டது தமிழக அரசு (இதேபோன்று திருவண்ணாமலையிலும் 35 மில்லியன் டன் இரும்புத் தாது எடுக்க அதே ஜிண்டால் நிறுவனத்துக்கு உரிமம் கொடுக்கப் பட்டுள்ளது). முன்னதாக, செப்டம்பர் 5-ல் சேலம் உருக்காலை விரிவாக்க நிகழ்ச்சியில் பேசியபோதுகூட,

"கஞ்சமலை வடக்குப் படுகை சேலம் உருக்காலைக்கு வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார் மத்திய உருக்குத் துறைஅமைச்சர் பாஸ்வான். ஆனால், இப்போது நிகழ்வுகள் கடகடவென்று மாறுகின்றன. இந்த மாறும் காட்சிகளில் தமிழக அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று நம்ப முடியவில்லை.

சேலம் உருக்காலை வெறும் பொதுத் துறை நிறுவனம் மட்டும் அல்ல; அது தமிழகத்தின் சொத்து. அண்ணா, காமராஜர், பி.ராமமூர்த்தி, கருணாநிதி என்று பலருடைய கனவும் பங்களிப்பும் அதில் இருக்கிறது. அதன் வளர்ச்சிக்காக ஏராள மான இழப்புகளைச் சந்தித்திருக்கின்றனர் தமிழக மக்கள், குறிப்பாக சேலம் மக்கள். அவை வீண் போகலாகாது. சேலம் ஆலையைக் காத்திடத் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் கை கோத்துக் களம் இறங்க வேண்டும்!

- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,வழக்கறிஞர், 'உரிமைக்கு குரல் கொடுப்போம்' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: rkkurunji@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x