Last Updated : 29 Dec, 2016 09:15 AM

 

Published : 29 Dec 2016 09:15 AM
Last Updated : 29 Dec 2016 09:15 AM

ராம மோகன ராவ் விவகாரம் அதிகார துஷ்பிரயோகம்: எப்படி?

ராம மோகன ராவின் எல்லா வாதங்களையும் உள்நோக்கம் கொண்டதாகவோ, வெற்றுச் சமாளிப்பாகவோ ஒதுக்கிவிட முடியாது

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இந்தக் கட்டுரை தமிழ் நாடு அரசில் தலைமைச் செயலராக இருந்த ராம மோகன ராவிற்கு ஆதரவாக எழுதப்பட்டது அல்ல. அவரை நான் பார்த்ததுகூட இல்லை. அவர் எனக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து பணியில் சேர்ந்தவர். இக்கட்டுரை அவரைச் சார்ந்த நிகழ்வுகளை மனதில் கொண்டு எழுதப்பட்டது. எனது 35 ஆண்டு கால இந்திய ஆட்சிப் பணி மற்றும் 90 ஆண்டு கால நீண்ட வாழ்வில், சாதாரண நிலையிலிருந்து ஐநா வரை கிடைத்த பணி அனுபவங்களின் அடிப்படையில் அரசு அமைப்புகளின் போக்குகளைப் பற்றி விருப்பு, வெறுப்பின்றிப் பதிவு செய்யும் முயற்சி இது.

நான் மகாத்மா காந்தி யுகத்தில் பிறந்து, 21-வது வயது வரை அந்த யுகத்தில் வளர்ந்தவன்; 1946-ல் சென்னை தியாகராய நகர் வெங்கடநாராயணா சாலையில் காந்தி ஏழு நாட்கள் தங்கியிருந்தபோது, என்னுடைய மாணவப் பருவத்தில் இன்னும் சில மாணவர்களுடன் அவருக்கு மெய்க்காப்பாளனாக இருந்த பாக்கியம் பெற்றவன். (அப்போது கறுப்புப் பூனைகளின் சாம்ராஜ்யம் ஆரம்பிக்கவில்லை) ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், ராஜாஜி, அண்ணாதுரை, காமராஜர், சத்தியமூர்த்தி, பி.சி.ராய், ஜோதி பாசு போன்ற மாமனிதர்களுடன் நேரடியாகப் பழகியவன். பரிசுத்தமான எண்ணத்துடன் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

வெறுப்பின் பின்னணி

இத்தனை நீண்ட பீடிகைக்கு, இரண்டு காரணங்கள்: ஒன்று, சில ஆண்டுகளாகவே, ‘ப்யூரோக்ராட்’ (அதிகாரவர்க்கம்) என்ற சொல் ஓர் இழிவுச்சொல்லாக மாறிவிட்டது. அதைச் சொன்னாலே மக்கள் மனதில் கோபம் எழுகிறது. அதிலும், ஐ.ஏ.எஸ். என்றால் மக்களிடம் மட்டும் அல்லாமல் மத்திய, மாநில அரசுகளின் மற்ற அதிகாரிகளிடமும் அத்தகைய கோபம் எழுவதுண்டு.

இதற்கு ‘ப்யூரோக்ராட்’டுகளின் நடத்தையும், அவர்கள் மக்களை அணுகும் அகங்காரத் தோரணைகளும் பிரதான காரணமென்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், ‘ப்யூரோக்ராட்’டும் ஒரு மனிதர்தான். மற்ற அமைப்புகளால் அவருக்கு இழைக்கப்படும் அநியாயங்களை நியாயப்படுத்தினால், பஸ்மாசுரன் கதை போல சாதாரண தங்கள் மீதும் அத்தகைய அநியாயங்கள் நிகழக்கூடிய அபாயத்தை மக்கள் உணர வேண்டும்.

இரண்டாவது காரணம், பிரிட்டன், அமெரிக்கா போன்ற பிற ஜனநாயக நாடுகளில் போற்றிப் பாதுகாக்கப்படுகின்ற, ஏன், இந்தியாவிலேயே பழங்காலத்தில் புழங்கிவந்த, தத்துவங்கள் தற்போது புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்த கண்காணிப்பும், கட்டுப்பாடுமின்றி எந்தவொரு ஆயுதத்தையும் தானாகச் செயல்பட விடுதல் அபாயத்தையே விளைவிக்கும். அம்பானாலும், கத்தி - கபடாவானாலும், துப்பாக்கியானாலும், காவல் துறை, ராணுவமானாலும், ஒரு கண்காணிப்பு வரைவிற்குள்தான் அவை இயங்க வேண்டும். அந்த வரைவின் கட்டுப்பாட்டுக்குள் அவற்றை இயக்கும் பொறுப்பு அவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டதாக, மேற்பட்டதாக இருக்க வேண்டும்.

அதாவது, ஒரு கத்திக்கே, அல்லது துப்பாக்கிக்கே அது தன்னை எப்படி உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற அதிகாரத்தைக் கொடுத்து விட்டால், அது மனம் போன போக்கெல்லாம் போய், கண்டவர்களை அறுத்து, கிழித்து, சுட்டுக் கொன்று விடும் எனலாம். இன்னொரு விளைவையும் கவனிக்க வேண்டும். எந்த ஆயுதமும் தனக்கெதிராகவே செயல்படாது. ஒரு கத்தி தன்னைத்தானே அறுக்காது; ஒரு துப்பாக்கி தன்னைத்தானே சுட்டுகொள்ளாது. காவல் துறை, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்களிடம், அந்தந்தத் துறையினரே ரெய்டுகளோ மற்ற குற்றத் தடுப்பு நடவடிக்கைகளோ மேற்கொண்டதாகக் கேள்விப்பட்டதுண்டா?

ஏதோ காவல், புலனாய்வு, அமலாக்க அமைப்புகளைச் சுதந்திரமாக இயங்க விட்டுவிட்டால், சட்ட மீறல், ஊழல், வரி ஏய்ப்பு, கறுப்புப் பணம் போன்ற சமூக அவலங்களைக் கட்டுப்படுத்திவிடலாம் என்று அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள், நீதிபதிகள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் நம்புகிறார்கள்.

ராம மனோகர ராவின் ஊடகப் பேட்டிக்கு வருவோம். அவர் ஒரு ‘ப்யூரோக்ராட்’ அல்லது ஐ.ஏ.எஸ். என்பதாலேயே அவர் சொல்வதெல்லாம் அபத்தம் என்று எடுத்துக்கொள்வது சரியல்ல. அதே சமயம் தான் இன்னும் தலைமைச் செயலர்தான், ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டதாலேயே, தான் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தக் கூடாதவர் என்றெல்லாம் அவர் அரசுக்குச் சவால் விடுவது ஏற்கத்தக்கதல்ல. அவரது இடத்தில் இன்னொருவரை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துவிட்ட நிலையில், அதை மதித்து நடப்பதுதான் நாகரிகம். தலைமைச் செயலராக இருந்தவர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும். விதிகளுக்கோ, நியாயத்திற்கோ அந்த ஆணை புறம்பானதென்று அவருக்குப் பட்டால், அதை நிர்வாக ஆணையத்திலோ, நீதிமன்றத்திலோ முறையிட தனக்கு இருக்கும் உரிமையை அவர் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டதாலேயே தனக்குக் கொம்பு முளைத்துவிட்டது என்று நினைத்துக்கொள்வதும் சரியல்ல. ஜெயலலிதா, சில விஷயங்களில் தன்னைச் சார்ந்தவர்களைச் சரியாக எடை போடத் தெரியாதவராக இருந்தார் என்பது எனது கருத்து.

சில நியாயங்கள்

ராம மோகன ராவுடைய மூன்று வாதங்கள் நியாயமானவை என்று எனக்குப் படுகிறது. முதலாவது, சோதனை அனுமதிக் கடிதத்தில் தன் பெயரில்லை; தன்னுடைய மகனின் பெயர்தான் இருந்தது; எனவே, வருமான வரிச் சோதனைக்கு வந்தவர்கள் துணை ராணுவப் படையினருடன் தன் வீட்டிற்குள் நுழைந்து சோதனையிட்டது பலாத்காரமான செயல் என்று அவர் கூறியிருக்கிறார். இதை மறுத்திருக்கும் ரகோத்தமன் என்ற முன்னாள் புலனாய்வுத் துறை அதிகாரி, “பெயர் யாருடையதாக இருந்தாலும் பரவாயில்லை, முகவரி சரியாக இருந்தால் போதும்” என்று தொலைக்காட்சி சேனல் ஒன்றில் கூறியதைப் பார்க்க முடிந்தது. அவரது வாதம் சரியல்ல.

நான் பத்தாண்டு காலம் உள்விவகார அமைச்சகத்தில் நேரு, லால்பகதூர், இந்திரா காந்தி காலத்தில் இயக்குநர் பதவியில் புலனாய்வு மற்றும் உளவுத் துறையின் பணிகளை மேற்பார்வையில் வைத்திருந்தவன். நெருக்கடி நிலையின்போது, புலனாய்வுத் துறையும், உளவுத் துறையும், அமலாக்கப் பிரிவும் புரிந்த அட்டூழியங்களைப் பட்டியலிட்டு வெளியிட்ட ஷா கமிஷன் அறிக்கையை ஆராய்ந்து, அத்துறைகளைச் சீர்திருத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குமாறு நியமிக்கப்பட்ட எல்.பி.சிங் குழுவின் உறுப்பினர் - செயலராக இருந்திருக்கிறேன்; பின்னர் ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலராகவும் இருந்து அத்தகைய போக்குகளைக் கணித்தவன் நான். அந்தத் தகுதியில் சொல்கின்றேன்: விலை மதிப்பில்லா தனிமனித உரிமைகளைப் பறிக்கும் எந்த நடவடிக்கையில் ஈடுபடும் அமைப்பும் சொல் சுத்தமாகவும், மொழி சுத்தமாகவும் நடந்து கொள்ள வேண்டும். அதில் தவறினால் அது சட்ட விரோதச் செயலாகும் என்று உச்ச நீதி மன்றத் தீர்ப்பு ஒன்று இருப்பதாக ஞாபகம்.

இரண்டாவது, தனது வீட்டிலிருந்து ரூ.1,12,320 ரொக்கமும், மனைவி மகளின் 40-50 சவரன்களும், விநாயகர், மகாலட்சுமி, வெங்கடேஸ்வரர் உட்பட 20-25 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்களும் மட்டுமே எடுக்கப்பட்டன; வேறெந்த ஆவணமும் எடுக்கப்படவில்லை என்று ராவ் கூறுகிறார். வருமான வரி அதிகாரிகளோ அவருடைய வீட்டிலிருந்து ரூ.30 லட்சம் புது நோட்டுகளையும், 100-க்கும் அதிகமான கிலோ எடையிலான தங்க, வெள்ளிப் பொருட்களையும் கைப்பற்றியது போன்ற தோற்றமுள்ள தகவல்களை வெளியிட்டிருக்கின்றனர். அத்துறையின் சோதனை அதிகாரிகள் தயாரித்த மகஜரின் நகலைப் பிரசுரித்து இந்த வேறுபாட்டைத் தெளிவுபடுத்துவது அவர்களுடைய கடமை. ஏனென்றால், ராவ் சொல்வதுதான் சரியென்றால், தொகை - நகைகளின் பரிமாணம் அப்படி அதிரடியாக உள்ளே நுழைந்து கைப்பற்றக்கூடிய மகத்துவமுள்ளதாகத் தெரியவில்லை. எனவே, சோதனையின் அடிப்படையே சந்தேகத்துக்கு உரியதாகிவிடுகிறது.

மூன்றாவது தலைமைச் செயலகத்தில் அதிரடியாக நுழைந்து. தலைமைச் செயலர் அறையில் புகுந்து சோதனையிட்டது எல்லை மீறல் என்பது ராவின் வாதம். அப்போது அரசின் எந்த உயரதிகாரியும் அறையில் இருந்ததாகத் தெரியவில்லை. ராவ் சொல்வதுபோல், ஒரு தலைமைச் செயலர் அறையில் பலவிதமான, பல நபர்களைப் பற்றிய, பல நிலை ஆலோசனைகள் தொடர்பான குறிப்புகள், அறிக்கைகள், கடிதப் போக்குவரத்துகள் போன்ற பரம ரகசியமான விவரங்கள் அடங்கிய கோப்புகள் இருக்கும். அவற்றை மூன்றாம் நபர் பார்ப்பது என்பது அரசியல் ரகசியங்கள் சட்டப்படி ஏழாண்டுக் கடுங்காவல் சிறைத் தண்டனைக்கேற்ற குற்றம்.

வருமான வரிச் சோதனையாளர்கள் தலைமைச் செயலரின் அறைக்குள் நுழைவதற்கு முன்னால், அவருக்கடுத்த மேலதிகாரிக்குத் தகவல் தெரிவித்து, அவர் முன்னிலையிலோ அல்லது அவருடைய தரப்பிலான மற்றொரு அதிகாரியின் முன்னிலை யிலோதான் சோதனையை நடத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லையென்றால் அது பண்பையும், மரபையும், எல்லையையும் விதியையும் மீறிய செயல்.

தலைமைச் செயலருக்கே இப்படி நடக்கும் என்றால், மற்ற சாதாரண அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும், குடிமக்களுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கும் என்ற கேள்வி நியாயமானமானதுதான். ஒரு டி.ஜி.பி.யையோ, வருமானவரி கமிஷனரையோ, அமலாக்கப் பிரிவுத் தலைவரையோ, புலனாய்வுத் துறை இயக்குநரையோ இப்படிப்பட்ட அதிகாரப் பிரயோகத்திற்கு அத்துறையின் சோதனையாளர்கள் - ஆதாரத்தின் பேரிலோ, சந்தேகத்தின் பேரிலோ, இலக்காக்கியிருப்பார்களா, இலக்காக்கியிருக்கிறார்களா?

எனவே, ராம மோகன ராவின் எல்லா வாதங்களையும் உள்நோக்கம் கொண்டதாகவோ, வெற்றுச் சமாளிப்பாகவோ ஒதுக்கிவிட முடியாது; அப்படி ஒதுக்கவும் கூடாது. அவற்றிற்கான விளக்கங்களை வருமான வரித் துறை அளித்தாக வேண்டும். அண்மையில் அளிக்கப்பட்ட மேலெழுந்தவாரியான விளக்கம் திருப்தியாக இல்லை. ராம மோகன ராவ் இப்படியெல்லாம் சொன்னதற்காக, அவரை எப்படியாவது பழி வாங்கிவிட வேண்டும் என்று அத்துறையும், மற்ற அமைப்புகளும் வரிந்து கட்டிக்கொள்ளக் கூடாது என்பதே என் நிலைப்பாடு!

- பி.எஸ்.ராகவன், முன்னாள் தலைமைச் செயலர்,
புலனாய்வுத் துறை, உளவுத் துறை, அமலாக்கத் துறைகளைச் சீர்படுத்த ஜனதா அரசால் அமைக்கப்பட்ட எல்.பி.சிங் குழுவின் உறுப்பினர் மற்றும் செயலர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x