Published : 23 Dec 2016 09:24 AM
Last Updated : 23 Dec 2016 09:24 AM

கச்சத்தீவில் பறிபோகும் உரிமைகளை தமிழக அரசு வேடிக்கை பார்க்கலாகாது!

ஒப்பந்த ஷரத்துகள், கச்சத்தீவில் உள்ள நம்முடைய பாரம்பரிய உரிமைகளை உறுதிசெய்பவை

கச்சத்தீவு அந்தோணியார், தங்களின் கடல் பாதுகாவலர்களில் ஒருவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுவதும் மீன்பிடித் தொழில் வளமாக இருக்க வேண்டியும் உயிர்ப் பாதுகாப்புக்கு நன்றி பாராட்டியும் பங்கேற்கும் நிகழ்வாக அந்தோணியார் ஆலயத் திருவிழாவை நம்மவர்கள் பாவிக்கிறார்கள்!

கச்சத்தீவில் புதிய அந்தோணியார் கோயில் திறப்பு விழா (டிசம்பர் 23) இன்று நடக்கிறது. ரூ.1 கோடியில் புதிய ஆலயத்தைக் கட்டியிருக்கிறது இலங்கைக் கடற்படை. முன்னதாக, டிச. 7, 8 நாட்களில் திட்டமிட்டிருந்த விழா இது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, விழா தள்ளிவைக்கப்பட்டது. ரொம்பவும் விமரிசையாக, கொண்டாட்டமாக தமிழகக் கடலோடிகள் பங்கேற்கச் செல்ல வேண்டிய நிகழ்வு இது. ஆனால், மனச்சுமையுடனே செல்கிறார்கள். இலங்கையிலிருந்து வந்திருக்கும் சமிக்ஞைகள் அப்படி!

வெறும் மூன்று படகுகளில், சுமார் 200 கடலோடிகளை விழாவில் அனுமதிக்க வேண்டும் என்ற அளவில்தான் நாம் கோரிக்கையையே முன்வைக்கும் சூழல் இருந்தது. தமிழக அரசு கடிதம் எழுதியது. ராமேஸ்வரம், சிவகங்கை பங்குத்தந்தைகளும் சேர்ந்து கோரிக்கை விடுத்தனர். ஆனால், “ராமேஸ்வரம் பங்குத்தந்தையோடு மூன்று பேரை அழைத்து வரலாம்” என்று அங்கிருந்து பதில் வந்தது. பின்னர், அப்படி இப்படி என்று ஒரு நூறு பேர் சென்றுவிடலாம் என்று தமிழகக் கடலோடிகள் திட்டமிட்டார்கள். எனினும், இன்று வரை நிச்சயமாக எதையும் சொல்வதற்கில்லை.

கச்சத்தீவு நமக்குச் சொந்தம்

முன்னதாக, தமிழகக் கடலோடிகளி டமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள 115 படகுகளை விடுவிக்க மறுத்துவிட்டதோடு, இனி இப்படி இலங்கைக் கடல் பகுதிக்குள் நுழைந்துவிடும் தமிழகக் கடலோடிகளின் படகுகளுக்குப் பல லட்ச ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில், அந்நாட்டின் பன்னாட்டு மீன்பிடிச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் சமீபத்தில் தெரிவித்தது. டெல்லியில் இருக்கும் மோடி அரசு, தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் செல்லவில்லை; தமிழக அரசோ இன்றைய சூழலில் எதைப் பற்றியுமே அலட்டிக்கொள்ளும் நிலையில் இல்லை.நமக்குச் சொந்தமானது கச்சத்தீவு. இரு நாட்டுக் கடலோடிகளும் தொன்றுதொட்டு உறவாடிவந்தது. ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவில், பாம்பன் தீவு அருகே அமைந்திருக்கும் கச்சத்தீவு 285.2 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.

8.7.1974-ல் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது மத்திய அரசு. என்றாலும், நம்மவர்களின் பாரம்பரிய மீன்பிடி முறை பாதுகாக்கப்படும் என்ற உறுதி அந்நாளில் இருந்தது. ஒப்பந்தத்துக்குப் பிறகும் கச்சத் தீவுக்குச் செல்ல, அங்கு ஓய்வெடுக்க, தங்களுடைய மீன்பிடி வலைகளை உலர்த்த தமிழ்க் கடலோடிகளுக்கு உரிமை உண்டு என்று ஒப்பந்தத்திலேயே ஷரத்துகள் உண்டு. வெறுமனே ஓய்வு எடுப்பது அல்லது ஆலயம் சென்று வழிபாடு நடத்துவது சம்பந்தமான உரிமைகளை உறுதிசெய்யும் ஷரத்துகள் அல்ல இவை. மறைமுகமாகக் கச்சத்தீவில் உள்ள நம்முடைய பாரம் பரிய உரிமைகளையும் பண்பாட்டுத் தொடர்புகளையும் உறுதிசெய்பவை.

அந்தோணியாருக்கு நன்றி

கச்சத்தீவு அந்தோணியார் தங்களின் கடல் பாதுகாவலர்களில் ஒருவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுவதும் மீன்பிடித் தொழில் வளமாக இருக்க வேண்டியும் உயிர்ப் பாதுகாப்புக்கு நன்றி பாராட்டியும் பங்கேற்கும் நிகழ்வாக அந்தோணியார் ஆலயத் திருவிழாவை நம்மவர்கள் பாவிக்கிறார்கள்.

கச்சத்தீவில் அந்தோணியாருக்கு ஆலயத்தை 1930-ல் எழுப்பியவர் தொண்டி அருகேயுள்ள நம்புதாலையில் பிறந்த சீனிகுப்பன். அதற்கு 1951-ல் ஓடுகள் வேய்ந்து ஆலயத்தை மேம்படுத்தியவர்கள் ராமேஸ்வரம் ஓலைக்குடா கடலோடிகள். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கத்தோலிக்கப் பாதிரிமார்களே முன்பு திருப்பலிகளை நடத்திவந்தார்கள்.

கச்சத்தீவில் பண்ட மாற்றம்

அக்காலத்தில், ராமேஸ்வரம், தங்கச்சி மடம் கடலோடிகள் மட்டுமல்லாமல் குமரி, வேம்பாறு, தருவைக்குளம், தூத்துக்குடி, மணப்பாடு, உவரி என்று தென் தமிழகக் கடலோடிகள் - ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள் - பலரும் திரளாகப் பங்கேற்றனர். சமையல் பொருட்கள், ஆடுகள் என்று படகில் உற்சாகமான விருந்துக்கான எல்லாமும் உடன் செல்லும். கொடியேற்றும் நாளுக்கு முன்னமே செல்பவர்கள் தார்பாய்களைக் கொண்டு குடில்கள் அமைத்து, திருவிழா நடைபெறும் பத்து நாட்களும் தங்குவார்கள். இதேபோல இலங்கையிலிருந்தும் கடலோடி கள் வருவார்கள்.

இந்த மகிழ்ச்சியான சந்திப்பின் போது, இலங்கையிலிருந்து வந்திருந்தவர் களுக்கும், இந்தியாவிலிருந்து போனவர் க ளுக்கும் இடையில் பண்ட மாற்றங்கள் நடக்கும். ‘சங்கு மார்க்’ லுங்கிகள், பிளாஸ்டிக் வாளிகள், பட்டுச் சேலைகள், ‘சொக்கலால்’ பீடி, பாய்கள், கைக் கடிகாரங்கள், டிரான்சிஸ்டர், பெண்களுக்கான அணிகலன் கள், அலங்காரப் பொருட்கள், மாசி உள்ளிட்ட சில விசேஷமான கருவாடு வகைகள் இங்கிருந்து போகும். ‘ராணி’ சோப், தேங்காய் எண்ணெய், சீட்டித் துணி, பிஸ்கட், துப்புக்கட்டை, ரப்பர் செருப்பு, கிராம்பு, ஏலக்காய், பாக்கு, தேயிலைத் தூள் குறிப்பாக ‘ஈஸ்டன்’ டீ, ஜப்பான் தயாரிப்பு பேனாக்கள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், டெர்லின் சட்டைகள் மற்றும் இலங்கைப் பெண்கள் உடுத்தும் துணிகள் அங்கிருந்து இங்கு வரும். இரு நாட்டுக் கடலோடிகள் - முக்கியமாகத் தமிழர்கள் - ஒன்றாகச் சமைத்து, உண்டு, உறங்கி இரு தரப்பு உறவை மேம்படுத்திய நாட்கள் அவை.

உரிமைகளை மீட்போம்

அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக இருவரையும் பிரித்தது. நம்மவர்களைக் கச்சத்தீவுக்கு அந்நியமாக்கியது. ஒரு கட்டத்தில் உலகில் எங்கும் இல்லாத கொடுமை யாகத் தமிழகக் கடலோடிகள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவது வழக்கமானது. இலங்கைத் தமிழர் பிரச்சினை யின் காரணமாக 1983 தொடங்கி 2010 வரை இந்தத் திருவிழாவுக்குத் தமிழகக் கடலோடிகள் செல்வது தடைபட்டது. போருக்குப் பின் மீண்டும் தமிழ்க் கடலோடிகள் அங்கு அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், பழைய நாட்களோ, பழைய நடைமுறைகளோ, கொண்டாட்டமோ திரும்பவில்லை. நாளாக நாளாக நிலைமை மேலும் மோசமானது. விளைவாக, போருக்குப் பின்னரான திருவிழாவில் சுமார் 3,000 பேர் அனுமதிக்கப்பட்ட நிலை மாறி, இந்த ஆண்டு வெறும் 100 பேர் அங்கு சென்று திரும்புவதே சவாலாக மாறி யிருக்கிறது. இன்று டெல்லியிலிருந்தும் கொழும்பிலிருந்தும் கூடிப் பேசும் ராஜதந்திரிகள், தமிழகக் கடலோடிகளுக்கு எதிராக யாரை முன்னிறுத்தி அவர்கள் சர்வதேச அரசியல் நியாயத்தைப் பேசுகிறார் கள் தெரியுமா? இலங்கையின் கடலோடி களை, நம்முடைய சக தமிழர்களை!

இருதரப்பு உறவுகளையும் அணுகும் இடத்தில் தமிழர்கள் நலன்சார் பார்வை இருந்தால், இது நடக்காது. தமிழக அரசு இனியும் வாளாவிருக்கலாகாது. இருதரப்புத் தமிழ்க் கடலோடிகளின் குறைகள், நியாயங்களையும் கேட்க வேண்டும். மீண்டும் இரு தரப்புத் தமிழர்கள் நல்லுறவுக்கேற்ற, நம்முடைய பாரம்பரிய உரிமைகளை மீட்டெடுக்கும் தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும்!

- கே.எஸ். இராதாகிருஷ்ணன், வழக்கறிஞர், அரசியல் விமர்சகர்,

தொடர்புக்கு: rkkurunji@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x