

புத்தாண்டுக் கொண்டாட்டத்துடன் புத்தகக் காதலர்களைக் கூடுதல் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் சென்னை புத்தகக் காட்சி இன்று தொடங்குகிறது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் 46ஆவது புத்தகக் காட்சியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5.30 மணிக்குத் தொடங்கிவைக்கிறார்.
இதுவரை அதிகபட்சமாக 800 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு முதன்முறையாக 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படும் இந்தப் புத்தகக் காட்சியில், இந்த ஆண்டு முதல் முறையாகச் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியும் நடைபெறவிருக்கிறது.
கரோனா பெருந்தொற்றுச் சவால்களுக்கு மத்தியிலும், கடந்த இரண்டு ஆண்டுகள் சிறப்பாக நடைபெற்ற புத்தகக் காட்சி, இந்த முறை வாசிப்பை நேசிக்கும் அனைவரையும் வசீகரிக்கும் வகையில் வண்ணமயமாகத் தொடங்குகிறது.
எங்கு, எப்போது?: இம்முறையும் நந்தனத்திலுள்ள ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் மைதானத்தில் நடத்தப்படுகிறது. ஜனவரி 6 தொடங்கும் இத்திருவிழா, ஜனவரி 22 வரை 17 நாட்களுக்கு நடத்தப்படுகிறது. காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
நுழைவுக் கட்டணம்: ஒரே இடத்தில் விற்பனைக்கு வரும் புத்தகங்களை அனைத்துத் தரப்பினரும் வாங்கி மகிழ ஏதுவாக, ரூ.10 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த முறை இளம் தலைமுறையினருக்கு வாசிப்பின் மீதுஆர்வம் ஏற்படும் வகையில், சென்னையில் உள்ள பள்ளி,கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச நுழைவுச்சீட்டு வழங்கப்படுகிறது. புத்தகக் காட்சியில் அனைத்து புத்தகங்களும் 10% கழிவு விலையில் விற்கப்படும்.
நிகழ்ச்சிகள்: புத்தகக் காட்சியின் விழா அரங்கில் தினமும் மாலை இலக்கியம், திரைப்படம், கலை தொடர்பான கருத்தரங்குகள், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள், கலைத் துறை ஆளுமைகள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவிருக்கிறார்கள்.
போட்டிகள்: புத்தகக் காட்சியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளின் திறமைகளை ஊக்குவித்து அங்கீகரிக்கும் வகையில், பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கலந்துகொள்வோர் அனைவருக்கும் சான்றிதழ்களையும் பபாசி வழங்குகிறது.
சிறாருக்குச் சிறப்பு அரங்கு: புத்தக வாசிப்பில் குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்படுத்துவதில் புத்தகக் காட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பெற்றோருடன் புத்தகக் காட்சிக்கு வருகைதரும் குழந்தைகள், பெரும்பாலும் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களைத் தேடி அரங்கம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்துவார்கள்.
இந்த முறை குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்க ஒரே இடத்தில் அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கன்னிமரா நூலகத்தில் இடம்பெற்றிருக்கும் நிரந்தரப் புத்தகக் காட்சியின் பொறுப்பில் இந்த அரங்கு செயல்படும். புத்தக வாசிப்புக்காக மட்டுமல்ல, குதூகலமாக விளையாடிக் களிக்கவும் இந்த அரங்கில் விசாலமாக இடமுண்டு!
கோடிக்கணக்கில் புத்தகங்கள்: ஆயிரக்கணக்கான தலைப்புகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்குவைக்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு 30 லட்சம் பேர் வருகை தந்தனர். இந்த ஆண்டு 50 லட்சம் பேர்வருவார்கள் என பபாசி எதிர்பார்க்கிறது. சிறு பதிப்பாளர்கள்பயன்படுத்திக்கொள்ள மினி அலமாரிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதல் முறையாக இடம்பெறும் இந்த ஏற்பாட்டில், ஒரே அரங்கில் தனித்தனி அலமாரிகள் வழங்கப்படுகின்றன.
திருநங்கைகளுக்குப் பிரத்யேக அரங்கு: திருநங்கைகள், பால்புதுமையரின் படைப்புகளுக்கெனத் தனி அரங்கு தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் சரிசெய்யப்பட்டு, பிரத்யேகமான ஓர் அரங்கு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த முன்னெடுப்பு அடுத்தடுத்து இன்னும் விரிவடையும் என எதிர்பார்க்கலாம்!
விருதுகள்: தொடக்க நாளான இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், கலைஞர் மு.கருணாநிதி பெயரில் ‘பொற்கிழி’ விருதும், தலா ரூ.1 லட்சமும் ஆறு பேருக்கு வழங்கப்படவிருக்கின்றன. தேவிபாரதி (நாவல்), சந்திரா தங்கராஜ் (சிறுகதைகள்), தேவதேவன் (கவிதை), சி.மோகன் (மொழிபெயர்ப்பு), பிரளயன் (நாடகம்), பா.ரா.சுப்பிரமணியன் (உரை நடை/ஆய்வு) ஆகியோர் இந்த விருதைப் பெறுகின்றனர். பபாசி வழங்கும் விருதுகளின் பட்டியலில், ‘பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது’ முனைவர் மோ.பாட்டழகனுக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த நூலகருக்கான விருது முனைவர் க.இரத்தின சபாபதிக்கும், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான ‘பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது’ தீபக் மதியழகனுக்கும், ‘குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா விருது’ தேவி நாச்சியப்பனுக்கும், சிறந்த தமிழறிஞருக்கான ‘பாரி செல்லப்பனார் விருது’ முனைவர் ச.திருஞானசம்பந்தத்துக்கும், ‘அம்சவேணி பெரியண்ணன் விருது’ எழுத்தாளர் இந்துமதிக்கும், ‘நெல்லை சு.முத்து விருது’ ஆயிஷா இரா.நடராசனுக்கும், முனைவர் ‘ஆலந்தூர் கோ.மோகனரங்கன் கவிதை இலக்கிய விருது’ பாடலாசிரியர் விவேக்குக்கும், ‘சிந்தனைக் கவிஞர் கவிதாசன் விருது’ எழுத்தாளர் மெர்வினுக்கும் வழங்கப்படுகின்றன.
சர்வதேசப் புத்தகக் கண்காட்சி: தமிழகப் பள்ளிக் கல்வித் துறையும் பபாசியும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 40 நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் இந்தக் கண்காட்சியில், தமிழ் எழுத்தாளர்களும் பதிப்பகங்களும் கலந்துகொள்கின்றனர். வெளிநாட்டுநூல்களுக்கான உரிமத்தை வாங்குவது, தமிழ் நூல்களுக்கான உரிமத்தை வழங்குவது என நடக்கவிருக்கும் பரஸ்பரப் பரிமாற்றம் இந்தப் புத்தகக் காட்சியின் சிறப்பம்சம்!
வசதிகள் அதிகம்: இளைப்பாறுவதற்கான இடம், கழிப்பறை, வாகன நிறுத்தம் என எல்லா ஏற்பாடுகளும் முந்தைய புத்தகக் காட்சிகளைவிடவும் இந்த முறை விரிவாகவும், புதிய வசதிகளுடனும் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறார் பபாசி தலைவர் வைரவன். ஏடிஎம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.
சிக்னல் சிக்கல் ஏற்படாத வகையில் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் என மூன்றுநெட்வொர்க்குகள் செயல்படும். மொத்தத்தில், மாவட்டம்தோறும் நடைபெறும் புத்தகக் காட்சிகளுக்குப் புத்துணர்வூட்டும் வகையில் சென்னை புத்தகக் காட்சி அமர்க்களமாக ஆரம்பமாகிறது. அதன் தாக்கம் தமிழகத்தின் எல்லையைத் தாண்டி, வெளிநாடுகளிலும் உறுதியாக எதிரொலிக்கும்!
| ‘இந்து தமிழ் திசை’ அரங்கு 505 – 506 இந்தப் புத்தகக் காட்சியில் ‘இந்து தமிழ் திசை’யின் வெளியீடுகள், எண் 505 – 506 என்ற அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் அரசியல் களத்திலும் அறிவுலகிலும் மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திய ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல் ஆங்கிலத்தில் ‘A Grand Tamil Dream’ எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தனது திரையுலக அனுபவங்கள் குறித்து நடிகர் சிவகுமார் எழுதிய ‘திரைப்படச் சோலை’, சூ.ம.ஜெயசீலன் எழுதிய ‘சிறகை விரி.. |
| உலகை அறி’ எனும் பயண நூல், எழுத்தாளர் மருதன் எழுதிய ‘நான் ஒரு கனவு காண்கிறேன்’, பேராசிரியர் அ.முகமது அப்துல்காதரின் ‘வெல்லப்போவது நீதான்’ உள்ளிட்ட புதிய நூல்கள் ‘இந்து தமிழ் திசை’ அரங்கை அலங்கரிக்கின்றன. போட்டித் தேர்வு எழுதுபவர்கள் முதல் வரலாற்று ஆய்வாளர்கள் வரை பல தரப்பினருக்கும் பயன்தரும் ‘இயர்புக் 2023’ தயாராகியிருக்கிறது. பல்சுவை விருந்து படைக்கும் பொங்கல் மலரும் வாசகர்களுக்காகக் காத்திருக்கிறது! |