

உள்நாட்டில் புலம்பெயர்ந்தோர், தேர்தல்களில் தவறாமல் வாக்களிக்கும் வகையில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்தத் தயார் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. புலம்பெயர்ந்தோர் வாக்களிப்பதற்காகச் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதைத் தவிர்ப்பதும், வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிப்பதும் இதன் முதன்மையான நோக்கங்கள். எனினும், இதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்த சில கேள்விகளும் எழுந்திருக்கின்றன.
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, அந்தந்த மாநிலத்துக்குள்ளும், பிற மாநிலங்களுக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 45.36 கோடி. அந்த எண்ணிக்கை இப்போது கணிசமாக அதிகரித்திருக்கும். இவர்கள் தங்கள் சொந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தல்கள் போன்றவற்றில் வாக்களிப்பதற்காகச் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டியிருக்கும். விடுப்பு, பயண ஏற்பாடுகள் போன்றவை சரியாக அமையவில்லை எனில், வாக்களிப்பதையே தவிர்க்க வேண்டிவரும். இதனால், வாக்கு சதவீதம் குறைவதாகப் பேசப்படுகிறது.
2019 நிலவரப்படி, மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை எனத் தெரியவந்திருக்கிறது. ஒரு வாக்காளர்கூட வாக்களிக்கத் தவறிவிடக் கூடாது எனும் நோக்கம் கொண்ட தேர்தல் ஆணையம், இதைத் தவிர்க்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. முன்னதாக, உள்நாட்டுப் புலம்பெயந்தோர் தொடர்பான அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. இணையவழி வாக்குப்பதிவு, வாக்காளரின் பிரதிநிதி வாக்களிப்பது போன்ற யோசனைகளை அக்குழு சமர்ப்பித்தது.
ஆனால், நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அவை நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பரிந்துரைக்கப்பட்டது. இதன் மூலம், வெவ்வேறு மாநிலங்களில் இருக்கும் வாக்காளர்கள், தங்கள் சொந்த மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் வாக்களிக்கும் வகையில் பிரத்தியேகமாகத் தொலைதூர வாக்குப்பதிவு மையம் உருவாக்கப்படும்.
தற்போது புழக்கத்தில் இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் போலவே, தொலைதூர வாக்குப்பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பானவையாக இருக்கும் எனத் தேர்தல் ஆணையம் உறுதியளிக்கிறது. ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களே இன்னமும் அகலவில்லை. பல நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தவிர்த்துவிட்டு, வாக்குச்சீட்டு முறையையே பின்பற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இந்தச் சூழலில், புதிய இயந்திரங்கள் நம்பகமானவை என எப்படிச் சொல்ல முடியும் எனும் வாதம் முன்வைக்கப்படுகிறது. தவிர, புலம்பெயர்ந்தோரை வகைப்படுத்துவது தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் குறித்த கேள்விகளும்; வெவ்வேறு மாநிலங்களுக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றால், புலம்பெயர்ந்தோர் வாக்களிக்கத் தெளிவான திட்டமிடல்கள் செய்யப்படுமா, வெளிமாநிலத் தேர்தல்களுக்காகப் பிற மாநிலங்களில் பிரச்சாரங்கள் நடத்தப்படுமா என்பன போன்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன.
இந்த இயந்திரங்கள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளுக்கு ஜனவரி 16இல் செயல்முறை விளக்கம் வழங்கப்படவிருக்கிறது. அதன் பின்னரே, இது எந்த அளவுக்குச் சாத்தியமானது, நம்பகமானது எனத் தெரியவரும். தேர்தல் நடத்தப்படும் முறையில் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இவ்விஷயம் தொடர்பான நியாயமான சந்தேகங்களுக்குத் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்கும் என நம்புவோம்.