முகங்கள் 2022: தேர்தல் வெற்றி நாயகர்

முகங்கள் 2022: தேர்தல் வெற்றி நாயகர்
Updated on
4 min read

2022இல் இந்தியாவில் நடைபெற்ற ஏழு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், ஐந்தில் பாஜக வென்றது. பாஜக ஆளும் மாநிலங்களில், மாநில அரசின் மீதான அதிருப்தியையும் கடந்து அக்கட்சி தொடர்ந்து வெற்றிபெறுவதற்குப் பிரதமர் மோடிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. தேர்தல் பிரச்சாரங்களில் மோடி முழுமுனைப்புடன் பங்கேற்றார். மக்களிடம் அவருக்குள்ள செல்வாக்கு குறையவில்லை என்பதைப் பல்வேறு கருத்துக்கணிப்புகளும் உறுதிப்படுத்தின. அதேநேரம், மோடியின் ஆட்சியில் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட அன்றாடப் பிரச்சினைகள் மட்டுமல்லாமல், மக்களின் ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்படுவது, மதச் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பது ஆகியவை தொடர்பான விமர்சனங்களும் அதிகரித்தன.

ஆதரவை இழக்காத தலைவர்

அரசு மீதான அதிருப்திகளுக்கும், ஆளும்கட்சியின் மீதான விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை என்றாலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிப்பட்ட செல்வாக்கு வலுவிழக்கவில்லை. பள்ளிகளில் காலை உணவு போன்ற மக்கள் நலத் திட்டங்கள், தமிழ்நாட்டில் முதல் முறையாகச் சர்வதேசப் புத்தகக் காட்சி உள்ளிட்ட மாநிலத்தின் அறிவுத்தளத்துக்கு வலுவூட்டும் நடவடிக்கைகள், பொருளாதாரரீதியான இடஒதுக்கீட்டை உறுதியுடன் எதிர்ப்பது போன்ற சமூகநீதிச் செயல்பாடுகள், மாநில அரசில் ஆளுநரின் தலையீடுகளையும், மத்திய அரசையும் சமரசமின்றி விமர்சிப்பது ஆகியவற்றின் மூலம் ஆதரவாளர்களைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அமைச்சர்கள் உள்படக் கட்சிப் பிரமுகர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகள், செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாக வருத்தப்படும் நிலையும் ஸ்டாலினுக்கு ஏற்பட்டது.

தோல்வியே காணாத தலைவர்

50 ஆண்டுகளுக்கும் மேல் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிக்கும் மல்லிகார்ஜுன கார்கே, அக்டோபர் 17இல் நடந்த உள்கட்சித் தேர்தலில் வெற்றிபெற்று அக்கட்சியின் தலைவரானார். பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த கார்கே, பெளத்த மதத்தைப் பின்பற்றுபவர். சர்ச்சைகளில் அதிகம் சிக்காதவர். சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஒன்பது முறையும், மக்களவைத் தேர்தல்களில் இரண்டு முறையும் வெற்றிபெற்றவர். ‘சொல் இல்லதா சர்தாரா’ (தோல்வியே காணாத தலைவர்) எனும் அடைமொழிக்குச் சொந்தக்காரர். சோனியா குடும்பத்தின் ரப்பர் ஸ்டாம்பாக இருப்பார் என பாஜக செய்யும் பகடியையும் தாண்டி மோடியையும் பாஜகவையும் வார்த்தைகளால் வறுத்தெடுக்கிறார்.

பிரிட்டனின் ‘இந்திய’ப் பிரதமர்
பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ் என அடுத்தடுத்து இரண்டு பிரதமர்கள் பதவி விலகினர். அதைத் தொடர்ந்து, கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த தலைவர் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் (42) பிரிட்டன் பிரதமரானார். பிரிட்டனின் பழைய பிரச்சினைகள் புத்தாண்டிலும் தொடரும் என வெளிப்படையாகப் பேசுகிறார். சிறப்பாகச் செயலாற்றுவார் என பிரிட்டிஷ் மக்கள் நம்புகிறார்கள்.

நனவான கால்பந்துக் கனவு
அர்ஜென்டினாவைச் சேர்ந்த நட்சத்திரக் கால்பந்து வீரரான லயனல் மெஸ்ஸிக்குத் தனிப்பட்ட சாதனைகளைவிடவும் தாய்நாட்டுக்குக் கால்பந்து உலகக் கோப்பையை வென்றுகொடுப்பதுதான் கனவாக இருந்தது. கத்தாரில் அந்தக் கனவை நனவாக்கினார். உலகக்கோப்பை வரலாற்றில் அனைத்துச் சுற்றுகளிலும் கோல் போட்டவர் எனும் பெருமையையும் பெற்றார். தனது குரு மாரடோனாவுக்குப் பின்னர் அர்ஜென்டினாவுக்காக உலகக் கோப்பையை வென்றெடுத்தார்.


களம் மாறிய வீராங்கனை

வெள்ளையர் ஆதிக்கம் மிகுந்த டென்னிஸ் உலகில் அபார சாதனைகளின் மூலம் சிகரத்தைத் தொட்ட செரீனா வில்லியம்ஸ் ஓய்வுபெறுவதாக அறிவித்தார்; ‘நான் டென்னிஸிலிருந்து ஓய்வுபெறவில்லை.. அடுத்த கட்டத்துக்குப் பரிணாமம் அடைந்திருக்கிறேன்’ என்றார். ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் சகோதரி வீனஸ் வில்லியம்ஸுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளார் செரீனா. இனி குடும்ப வாழ்விலும் தனது புதிய நிறுவன வளர்ச்சியிலும் முழுக் கவனம் செலுத்தப்போவதாகக் கூறியுள்ளார். அவரது நிறுவனத்தில் நிதி முதலீடு வழங்கியுள்ளவர்களில் 78%, வெள்ளையர் அல்லாதோரும் பெண்களும்தான்!

ஊடகத்தைக் கைப்பற்றிய பெரும்பணக்காரர்

அதானி வணிகக் குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் ஆனார். உலகளவில் மூன்றாவது பெரிய செல்வந்தர் என்று ‘ஃபார்ச்சூன்’ இதழ் அதானியை அடையாளப்படுத்தியது. குஜராத்தில் பிறந்து வளர்ந்தவரான அதானியின் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சலுகைகளை வாரி வழங்குவதாக எதிர்க்கட்சிகள் வறுத்தெடுக்கின்றன. பல வணிகத் துறைகளில் கோலோச்சும் அதானி, மத்திய அரசைத் துணிச்சலுடன் விமர்சிக்கும் ஊடகம் என்று கருதப்படும் என்டிடிவியை தன் முதலீட்டின் மூலம் கைப்பற்றினார்.

நின்று விளையாடிய நீரஜ்

2021 டோக்கியோ ஒலிம்பிக்கில், ஈட்டி எறிதலில் தங்கம் வென்று அசத்திய நீரஜ் சோப்ராவுக்கு, 2022 மிக முக்கியமான ஆண்டாக அமைந்தது. பாவோ நுர்மி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். தேசிய அளவில் தன் சொந்த சாதனையை முறியடித்தார். ஸ்டாக்ஹோம் டயமண்ட் லீகில் 89.94 மீட்டர் எறிந்தார். அதிலும் சொந்த சாதனையை விஞ்சினார். ஓரெகன் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது இடம். 2003க்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைத்த தனிநபர் சாதனை அது. லுஸான் டயமண்ட் லீகில் 89.04 மீட்டர் வீசி தங்கம் வென்றார். 2023 உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தேர்வானார். ஜூரிச் டயமண்ட் லீக் போட்டியில் வென்றார். அப்போட்டியில் முதல் பரிசு வென்ற முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்றார்.

எல்லையை விரிவுபடுத்தியவர்

டெல்லியைத் தாண்டி ஆம் ஆத்மி கட்சியை விரிவுபடுத்தும் அர்விந்த் கேஜ்ரிவாலின் கனவு, ஒருவழியாகப் பஞ்சாபில் பலித்தது. மொத்தம் உள்ள 117 தொகுதிகளில், 92 தொகுதிகளை வென்ற நிலையில், பிற மாநிலங்களிலும் கட்சியை வலுப்படுத்த வியூகம் வகுத்தார். குஜராத்தில் பல நாட்கள் முகாமிட்டும் வெற்றி கிட்டவில்லை. ஆனால், டெல்லி மாநகராட்சித் தேர்தலில் கிடைத்த வெற்றி, கேஜ்ரிவாலின் செல்வாக்கைப் பறைசாற்றியது. பல்வேறு விவகாரங்களில் பாஜகவுடனான அவரது பகை அதிகரித்தாலும், ஒருகட்டத்தில் பாஜகவினரையே விஞ்சும் வகையில், ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் ஆகிய கடவுளர்களின் படங்களை அச்சிட வேண்டும் எனப் பேசி இந்துத்துவ முகம் காட்டினார்.

மீண்டு(ம்) வந்த லூலா
தனது மோசமான அணுகுமுறையால் பல்வேறு விஷயங்களில் பிரேசிலைப் பின்னடையச் செய்தவர், அந்நாட்டின் அதிபராக இருந்த ஜெயீர் போல்சனாரோ. தீவிர வலதுசாரியான போல்சனாரோவை 2022 தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார், இடதுசாரியான லூலா டி சில்வா. ஏழ்மையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்த லூலா, லத்தீன் அமெரிக்காவின் மிகப் பெரிய பொருளாதார நாடான பிரேசிலின் அதிபராக 2003இல் பதவியேற்றவர். ஊழல் குற்றச்சாட்டுகளால் செல்வாக்கை இழந்தாலும், அதிலிருந்து மீண்டு போராடித் தனது 77ஆவது வயதில் மீண்டும் அதிபராகியிருக்கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in