Published : 06 Dec 2016 09:42 AM
Last Updated : 06 Dec 2016 09:42 AM

என்ன நினைக்கிறது உலகம்?- பாகிஸ்தானைப் புறக்கணிக்கும் இந்தியா, ஆப்கன்!

பாகிஸ்தான் நாளிதழ்

அமிர்தசரஸில் நடந்த ‘ஆசியாவின் இதயம்’மாநாட்டின் மூலம், இருதரப்பு அல்லது பல தரப்பு உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கவில்லை. கடந்த சில மாதங்களில் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும், ராஜியரீதியாகவும், வார்த்தைகளாலும் பாகிஸ்தானைக் கடுமையாகத் தாக்கிவந்தன. இந்தப் போக்கு, இந்த மாநாட்டின்போதும் தொடர்ந்தது. பொதுவான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் ஒத்துழைப்பு என்பது ஒருபுறம் இருக்க, பிராந்தியத்தின் முக்கியமான நாடுகள் பேச்சுவார்த்தையைத் தொடங்காத வரையில், பிராந்திய ஸ்திரத்தன்மை என்பது தெளிவில்லாத ஒன்றாகவே இருக்கும். அமிர்தசரஸில் நடந்த இந்த மாநாட்டுக்கு வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸை அனுப்ப, பிரதமர் நவாஸ் ஷெரீப் எடுத்த முடிவு சரியானது. பிராந்திய அளவிலான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் விரும்புகிறது என்பதற்கான தெளிவான சமிக்ஞை அது. சர்தாஜ் அஜீஸும் சரி, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பசித்தும் சரி, பிராந்தியத்தில் அமைதியும் பேச்சுவார்த்தையும் தேவை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திவந்தனர்.

ஆனால், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனிக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் வேறு வகையான கருத்து இருந்தது. இருவரும் பாகிஸ்தானை வெளிப்படையாகவே தாக்கிப் பேசினர். மாநாட்டின் முக்கியப் புள்ளியாக இருந்த அஷ்ரப் கனி பாகிஸ்தான் தொடர்பான தனது விரக்தியை வெளிப்படுத்துவதில் கவனமாக இருந்தார். அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிரான நாடுகளை ஒன்றுதிரட்டுவதிலும் ஈடுபட்டார்.

தற்போது பாகிஸ்தான் அரசுக்கு இருக்கும் சவால், கடுமையான இந்தச் சூழலை எதிர்கொள்வது எப்படி என்பதுதான். பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(என்) கட்சி தலைமையிலான அரசு ஆப்கானிஸ்தானிடமும் இந்தியாவிடமும் சொல்வதற்கு உறுதியான செய்தி இருந்தும், அதை வியூகரீதியக வெளிப்படுத்த அதிக முயற்சி எடுக்கவில்லை. ஆப்கானிஸ்தான், இந்தியாவுடனான உறவுப் பாலத்தைக் கட்டமைக்கவும் அரசால் முடியவில்லை. இன்னும் அறிவார்த்தமான அணுகுமுறையுடன் இதை எடுத்துச் செல்வதில் ராணுவம் போன்ற அமைப்புகளைச் சம்மதிக்கச் செய்யவும் முடியவில்லை. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்பதையே ஆப்கனும், இந்தியாவும் வெளிப்படையாக நிராகரிக்கும் நிலையில், பேச்சுவார்த்தை தொடர்பான அணுகுமுறையை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்ற புரிதல் அவசியம். பதிலுக்கு பாகிஸ்தான் முன்வைக்கும் விஷயங்கள் என்ன? அல்லது இந்தச் சூழலை நியாயமான முறையில் அணுக முன்வரப் போகும் பிராந்திய அல்லது சர்வதேச நாடுகள் எவை? பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(என்) கட்சி ஆழமாகச் சிந்திக்க வேண்டிய நேரம் இது!

தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x