Published : 31 Dec 2016 10:32 AM
Last Updated : 31 Dec 2016 10:32 AM

உலகம்: தருணங்கள் 2016

2016-ன் தருணங்கள் இவை. உலகெங்கும் இந்த ஆண்டில் எவ்வளவோ நடந்திருக்கின்றன என்றாலும், வழக்கம்போல இந்தியப் பார்வையில் நம்மை அதிகம் கவனிக்கவைத்த, கலங்கவைத்த, நெகிழவைத்த மிகச் சில தருணங்களை மட்டும் இங்கே தொகுத்திருக்கிறோம். 2015 தருணங்களில், ஏகாதிபத்தியமும் பயங்கரவாதமும் நடத்தும் பயங்கர மோதல்களின் இடையில், சாமானிய மக்களின் வாழ்க்கை எப்படி சிக்கிச் சின்னாபின்னமாகின்றன என்பதைக் குறிப்பிட்டிருந்தோம். 2016-ல் கூடவே, வலதுசாரி எழுச்சியும் அவற்றுடன் சேர்ந்திருக்கிறது. சாமானிய மக்கள் இந்தப் பூவுலகை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும் என்றால், 2017-ல் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நிறையவே இருக்கின்றன. பொறுப்புணர்வுடன் புத்தாண்டை வரவேற்போம்!

அமைதி... அமைதி!

கொலம்பியாவில் ஃபார்க் எனும் கெரில்லா கிளர்ச்சிப் படையினருக்கும் அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அரை நூற்றாண்டாக நடந்துவந்த மோதல்களில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இரு தரப்புக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக அக்டோபர் 2-ல் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பு தோல்வியடைந்தது.

எனினும், இந்த முயற்சியில் தளராது ஈடுபட்ட கொலம்பிய அதிபர் யுவான் மானுவெலுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அக்டோபர் 7-ல் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் நவம்பர் 24-ல் இரு தரப்புக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று.



மையத் தலைவர் ஜின்பிங்!

உலகின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான சீன அதிபர் பதவியில் தற்போது இருக்கும் ஜி ஜின்பிங், அவருக்கு முந்தைய தலைவரைக் காட்டிலும் கூடுதலான அதிகாரங்கள் கொண்டவராக உருவெடுத்தார். சீனப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய மாவோ, சீனத்தின் பொருளாதாரக் கொள்கைகளைத் தலைகீழாக மாற்றிய டெங்சியாவோ பிங் ஆகியோருக்கு நிகரான அதிகாரக் குவிப்பின் மூலமாக ‘நிகரில்லாத் தலைவர்’ ஆகியிருக்கிறார் ஜின்பிங்.



குலுங்கியது பிரேசில்!

பிரேசிலில் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 21 வரை நடந்தன 31-வது ஒலிம்பிக் போட்டிகள். 205 நாடுகளைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டிகளில் 46 தங்கம், 37 வெள்ளி, 38 வெண்கலம் என்று மொத்தம் 121 பதக்கங்களை வென்று முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டது அமெரிக்கா. பிரிட்டன், சீனா, ரஷ்யா, ஜெர்மனி ஆகியவை அடுத்தடுத்த இடங்களை வென்றன. முன்னதாக, உள்நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் நிலவும் சூழலில், இப்படி ஒரு பிரம்மாண்ட செலவில் போட்டிகளை பிரேசில் நடத்துவதைக் கண்டித்துப் பல்வேறு தரப்புகளின் போராட்டங்களையும் எதிர்கொண்டது அரசு.

போலீஸாருக்கும் தீயணைப்பு வீரர்களுக்கும் முறையாகச் சம்பளம் வழங்கப்படாதது பெரிய பிரச்சினை ஆனது. ‘எங்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை. உங்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை’ எனும் பதாகையுடன் விமான நிலையத்தில் போலீஸார் நின்ற படம் உலக அளவில் கவனிக்கப்பட்டது!



அமலுக்கு வந்த அணு ஒப்பந்தம்!

ஈரானின் அணு ஆயுத உற்பத்தியைத் தடைசெய்வதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஈரான் அணு ஒப்பந்தம் 2015-ல் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் கையெழுத்தாகியிருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி அணு ஆயுதங்களைத் தயாரிப்பதில்லை என்று ஈரானும், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொள்வது என்று ஆறு வல்லரசு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன. இவை 2016-ல் செயல்பாட்டுக்கு வந்தது, மத்தியக் கிழக்கில் ஒரு முக்கியமான திருப்பம்!



புனிதர் அன்னை தெரசா!

தொண்டின் உருவமாக இந்தியாவில் வாழ்ந்தவர் அன்னை தெரசா. ரோமன் கத்தோலிக்க மதத்தின் துறவியாக கல்கத்தா வந்த அவர், நோயாளிகள், பசியால் வாடுவோர்களின் துன்பத்தைப் போக்குவதை முதல் கடமையாகக் கொண்டார். 1997-ல் மறைந்த அன்னையின் அற்புதங்களை அங்கீகரித்து, செப்டம்பர் 4-ல் அன்னைக்குப் புனிதர் பட்டம் வழங்கியது வாடிகன்.



பிரெக்ஸிட் பிரளயம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் நலிவடைந்த நாடுகளுக்கான சுமையையும் பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்க வேண்டிய நிலை இருப்பதால், அந்த அமைப்பிலிருந்தே பிரிட்டன் விலக வேண்டும் என்ற கருத்து உருவாகத் தொடங்கியது. நைஜல் ஃபராஜ், போரிஸ் ஜான்சன் போன்ற தலைவர்கள் இதை வலியுறுத்த, விலகக் கூடாது என்றனர் பிரிட்டனின் அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன், எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் உள்ளிட்ட மற்றொரு தரப்பினர். ஜூன் 23-ல் நடந்த பிரெக்ஸிட் கருத்து வாக்கெடுப்பில் 52% பேர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகலாம் என்று வாக்களித்தது உலகெங்கும் அதிர்வலைகளை உண்டாக்கியது.



ட்ரம்ப்பெட் முழக்கம்!

உலகமே அதிர்ச்சியுடன் பார்த்த ஒரு சம்பவம், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றியடைந்ததுதான். குடியேறிகள் - சிறுபான்மையினருக்கு எதிரானவர், பெண்களை அவமதிப்பவர், பிற்போக்குத்தனமானவர் என்று எக்கச்சக்கக் குற்றச்சாட்டுகள் இருந்தன. ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் மீதும் அமெரிக்கர்களிடம் பெரிய நம்பிக்கை இல்லை. எனினும், தேர்தல் விவாதங்களில் ஹிலாரியின் குரல்தான் எடுபட்டது.

‘தோற்றால் தேர்தல் முடிவை ஏற்க மாட்டேன்’ என்று சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார் ட்ரம்ப். ஆனால், நவம்பர் 8-ல் அமெரிக்காவுக்கு மட்டும் அல்லாது ஒட்டுமொத்த உலகுக்கும் அதிர்ச்சி கொடுத்தார் ட்ரம்ப். அவரது வெற்றியை ஏற்க மறுத்து அமெரிக்காவின் பல இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தினர். மூன்று மாகாணங்களில் மறுவாக்கு எண்ணிக்கைகூட நடத்தப்பட்டது. டிசம்பர் 20-ல் இறுதியாக வெளியான மக்கள் நேரடி வாக்குகளின் எண்ணிக்கையில், ஹிலாரிக்குத்தான் அதிக வாக்குகள் பதிவாகியிருந்தன. எனினும், எலெக்டோரல் காலேஜின் முடிவின்படி ட்ரம்ப்தான் வெற்றியாளர். தன்னுடைய வெற்றியோடு உலகெங்கும் வலதுசாரிகளின் எழுச்சிக்கும் ஒருவகையில் அடிகோலியிருக்கிறார் ட்ரம்ப்!



மறக்க முடியுமா அலெப்போ!



ஐஎஸ் பயங்கரவாதிகள் வசம் இருந்த பகுதிகளை மீட்கும் நடவடிக்கைகள் இந்த ஆண்டு அதிகரித்தன. இராக்கின் மொசூல் நகரை மீட்பதற்கான நடவடிக்கையின்போது ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். அதேபோல், சிரியாவின் அலெப்போ நகரைக் கைப்பற்ற சிரியா ராணுவம் எடுத்த நடவடிக்கையின்போதும் கடுமையான உயிரிழப்புகள் ஏற்பட்டன. சமூக வலைதளங்களில் தங்களது பரிதாப நிலையை அலெப்போவாசிகள் வெளிப்படுத்தியபோது, உலகம் கலங்கி நின்றது. இதற்கிடையே துருக்கி தலைநகர் அங்காராவில் நடந்த புகைப்படக் கண்காட்சியின்போது ரஷ்யத் தூதர் ஆண்ட்ரே கார்லோவை, போலீஸ்காரர் ஒருவர் சுட்டுக்கொன்றார் (சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா இந்தப் போரில் ஈடுபட்டிருக்கிறது). ‘அலெப்போவை மறக்காதீர்கள், சிரியாவை மறக்காதீர்கள்’ என்று அந்த போலீஸ்காரர் முழங்கிய கோஷம் உலகை அதிர வைத்தது.



விதைக்கப்பட்ட புரட்சி!

முதலாளித்துவத் தலைமையின் மூக்கிலிருந்து 150 கி.மீ. தூரத்தில் வாழ்ந்தவர் கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ. ரஷ்யாவிலும் சீனாவிலும் பறந்த சிவப்பை கியூபாவிலும் தவழவிட்டவர். அமெரிக்க உளவுத் துறையின் 634 கொலை முயற்சிகளிலிருந்து தப்பித்தவர் எனும் ஒரு வரித் தகவல், ஃபிடலின் போராட்ட வாழ்க்கையைச் சட்டெனச் சொல்லிவிடும். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் கியூபாவைக் கல்வியிலும், மருத்துவத்திலும் உலகுக்கே முன்னுதாரணமாக மாற்றிக்காட்டியவர் ஃபிடல். 2008-ல் தனது தம்பியிடம் ஆட்சியை ஒப்படைத்து ஓய்வுபெற்ற ஃபிடல், தன்னுடைய 90-வது வயதில் நவம்பர் 25-ல் காலமானார். அவரது புரட்சிப் படை தொடங்கிய மலைத் தொடர்களில் அவரது சாம்பல் காற்றில் தூவப்பட்டது. அவரது பெயரை எந்தத் தெருவுக்கும் வைக்கக் கூடாது என்று சட்டம் போட்டுவிட்டது அரசு. அது அவரது இறுதி ஆசை!



அபாயம் ஜிகா!

கர்ப்பிணிப் பெண்களைத் தாக்கும் ‘ஜிகா’ வைரஸ், கருவில் இருக்கும் சிசுவின் மூளையைப் பாதிக்கக்கூடியது. டெங்கு, சிக்குன் குனியாவைப் போலவே, ஜிகா கிருமியும், ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் மூலம் பரவக் கூடியது. 1947-ல் உகாண்டாவின் குரங்குகளில் காணப்பட்ட ‘ஜிகா’ வைரஸ், 10 ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்க நாடுகளில் தலைகாட்டியது. 20-க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரேசில் நாட்டில் சிறிய தலையுடனும், மூளை பாதிப்புடனும் பிறந்த 4,000-க்கும் மேலான குழந்தைகள் ‘ஜிகா’ வைரஸ் பாதிப்பின் விளைவாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். அமெரிக்காவில் 40 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டது. இது உலகம் முழுவதும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்தது. அதனால் பிப்ரவரி 2-ல் உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச நெருக்கடிநிலை’யை அறிவித்தது. நவம்பர் மாதத்துக்குப் பிறகு அதை ரத்து செய்தது



சூரியனோடு ஒரு விமானப் பயணம்!

பெட்ரோலே இல்லாமல் உலகத்தைச் சுற்றியது ஒரு விமானம். ‘சோலார் இம்பல்ஸ் 2’ என்ற பெயர் கொண்ட அந்த விமானத்தின் இறக்கைகள் முழுவதும் 17,000 பேட்டரிகள். சூரிய சக்தியால் இயங்கும் பேட்டரிகளை நம்பி மார்ச் 9 அன்று அபுதாபியிலிருந்து வானில் ஏறியது விமானம். சுவிட்சர்லாந்து விமானப் படையின் முன்னாள் விமானி ஆண்ட்ரி போர்ஸ்பெர்க்கும் அவர் நண்பர் பெர்ட்னட் பிகார்ட்டும் இந்த விமானத்தில் பயணித்தார்கள். மத்தியக் கிழக்கு நாடுகள் தொடங்கி, ஆசியா, அமெரிக்கா, பசிபிக் நாடுகள் என 17 இடங்களில் மட்டுமே நின்றது விமானம். இரவில் தாழ்வாகவும் பகலில் உயரமாகவும் பறந்து சிக்கனத்தைக் கடைப்பிடித்த விமானி, நீண்ட கடல்களைக் கடந்தபோது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டோம் என்றார். 23 நாட்களில் 43,041 கிலோ மீட்டர்கள் பறந்தார்கள். சூரிய சக்தியின் பயன்பாட்டை அதிகரிப்பதே பயணத்தின் நோக்கம். மனித இனத்தின் வரலாற்றில் இது ஒரு சாதனை என்று பாராட்டியது ஐநா!



பிரபஞ்சத்தின் ஒலி!

130 கோடி வருடங்களுக்கு முன்பாக, சூரியனைப் போல 29 மற்றும் 36 மடங்கு நிறை கொண்ட இரண்டு ராட்சதக் கருந்துளைகள் ஒன்றை ஒன்று சுற்றிக்கொண்டே மோதிப் பிணைந்தன. அப்போது ஏற்பட்ட ஈர்ப்பு அலைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது, இந்த ஆண்டின் மிக முக்கியமான அறிவியல் சாதனை. 15 நாடுகளைச் சேர்ந்த 83 நிறுவனங்களில் பணியாற்றும் 1,006 விஞ்ஞானிகளால் 1997 முதல் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தமிழகத்தின் ‘சென்னை கணிதவியல் நிறுவனம்’அதில் ஒன்று. நூறு வருடங்களுக்கு முன்பே விஞ்ஞானி ஐன்ஸ்டைன் ஈர்ப்பு அலைகள் உண்டு என்று கணித்தார். அவரது கணிப்பை உறுதிசெய்தது இந்தக் கண்டுபிடிப்பு. பிரபஞ்சத்தை ஆராய விஞ்ஞானிகள் பயன்படுத்தும் கருவிகளில் மூத்தது ஒளி. அதன்பிறகு, ரேடியோ அலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஈர்ப்பு அலைகளுக்குள்ளும் நிறைய பிரபஞ்சத் தகவல்கள் பொதிந்துள்ளன. அவற்றையும் ஆய்வுக் கருவிகளாகப் பயன்படுத்தலாம். அவை மேலும் புதுப் புது ரகசியங்களை வெளிப்படுத்தும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x