Published : 16 Dec 2016 10:31 AM
Last Updated : 16 Dec 2016 10:31 AM

இலங்கை எப்படி மலேரியாவை ஜெயித்தது?

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான உலக சுகாதார அமைப்பின் கூட்டம் இலங்கையில் கடந்த செப்டம்பர் 5-ல் நடைபெற்றது. 'மலேரியா இல்லாத நாடு' என்று அது இலங்கையை அறிவித்தது. பொது சுகாதாரம் தொடர்பான இலங்கையின் பெரும் சாதனைகளில் இது ஒரு மைல்கல். வாழ்நாள் அதிகரிப்பு, சிசு மரண விகிதம், சராசரிக் குடும்பத்தின் அளவு என்ற நல்வாழ்வு தொடர்பான மற்ற குறியீடுகளிலும் இது எதிரொலிக்கிறது.

தென் கிழக்கு ஆசியாவில் 11 நாடுகள் உள்ளன. இலங்கையைத் தவிர்த்து மாலத்தீவுகளும் மலேரியாவை ஒழித்துள்ளது. இது ஒன்றும் தற்செயலாக நடந்தது அல்ல. இரு நாடுகளுக்கும் மக்களின் நல்வாழ்வு பற்றிய விவகாரங்களில் தொடர்ந்து தலையிட்ட வரலாறு உண்டு. சிறந்த மருத்துவக் கட்டமைப்புகளையும் அவை உருவாக்கியுள்ளன. இந்த இரண்டு நாடுகளின் மலேரியா ஒழிப்புச் சாதனை, ஒட்டுமொத்தத் தென் கிழக்கு ஆசியாவுக்கானதுதான். ஆனாலும், இந்த நாடுகளில் நீண்ட காலமாக, மலேரியா இல்லை என்ற நிலை, படிப்படியாக நடைபெற்ற பல்வேறு தொடர் முயற்சிகள் மலேரியாவை ஒழித்துக்கட்டும் நிலைவரை தொடர்ந்தன என்பது முக்கியமாகக் கவனிக்க வேண்டியது. ஏனென்றால், மலேரியா அதிகமாகப் பரவியுள்ள நாடுகளிலிருந்து மலேரியா ஒழிக்கப்பட்ட நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருபவர்கள் மூலம் எளிதாக மறுபடியும் மலேரியா பரவும் அபாயம் இருக்கிறது.

இலங்கையின் போர்க்களம்

மலேரியாவுக்கு எதிரான இலங்கையின் களம் நீண்டது... கடினமானது. 1940 - களில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்திலேயே டிடிடி எனும் நோய்த் தடுப்பு முறை பயன்படுத்தப்பட்டது. மேற்கத்திய மருத்துவ முறைகள் 1930-களிலேயே தொடங்கிவிட்டன. 'இலங்கையின் மலேரியா கட்டுப்பாட்டுக்கான 100 ஆண்டு முயற்சிகள் (1911- 2011)' எனும் ஆவணத்தைப் பெர்னாண்டோ மற்றும் வருஷவிதானா இருவரும் உருவாக்கினார்கள். அதில் மலேரியா கட்டுப்பாட்டுக்காக இலங்கை செய்த முயற்சிகள், சிறப்பாகப் பயனளித்தவை என்றும் பின்னடைவுகள் என்றும் ரகம் பிரிக்கப்பட்டுள்ளன. பொதுவாக, மலேரியா இல்லாத பிரதேசங்களான, அடர்த்தியான மக்கள் வசிக்கும் மேற்குப் பகுதியில் கடும் வறட்சி, உணவுப் பற்றாக்குறை, மலேரியா தாக்குதல் எனும் மூன்று பேரழிவுகளை 1934- 35 காலகட்டத்தில் இலங்கை அனுபவித்தது. நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட காலகட்டமாக அது இருந்தது.

அனைவருக்கும் வாக்குரிமை தரப்பட்ட 1931-ம் வருடத்துக்குப் பிறகு பெருமளவில் நோய் பரவிய இந்தக் காலகட்டத்துக்கான எதிர் வினையாகத்தான் 1940 முதலாக அனைத்துக் குடிமக்களுக்கும் மானிய விலையில் உணவு வழங்குதல், இலவச மருத்துவச் சேவை, இலவசக் கல்வி ஆகியவற்றைத் தரும் மக்கள் நல அரசாக இலங்கை வளர்ச்சியடைந்தது.

ஜனநாயகம் நன்கு செயல்படுகிற சமூகங்களில் பஞ்சங்கள் எப்போதாவதுதான் ஏற்படுகின்றன என்கிறார் பொருளாதார அறிஞர் அமர்த்திய சென். அதை உறுதிப்படுத்தும் விதமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மலேரியாவுக்குப் பலியான வர்களின துன்பங்களை எடுத்துக்காட்டினார்கள். நல்வாழ்வுக்கான சீர்திருத்தங்களையும் மருத்துவச் சேவைக்காகவும் அவர்கள் அழுத் தம் தந்தார்கள். சுதந்திர இலங்கையின் முதல் தலைமுறை அரசியல் தலைவர்கள் 1934 - 35 காலகட்டத்தில் மலேரியாவால் ஏற்பட்ட அழிவுகளை நேரில் பார்த்தார்கள். பாதிக்கப் பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட நிவாரணப் பணிகளில் நேரடியாகப் பங்கேற்றார்கள். அதனால், அவர்கள் அரசின் செலவில் மக்களுக்கு மருத்துவச் சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

மலேரியா பரவக்கூடிய இடங்களில் டிடிடி மருந்து தெளிப்பது 1945-ல் தொடங்கியது. 1946-ல் 27 லட்சம் பேர் மலேரியாவால் பாதிக்கப் பட்டிருந்தனர். அது 1963-ல் 17 ஆக மாறியது. இது ஒரு மிகச் சிறப்பான வெற்றி. அந்த நேரத்தில் அதிகாரிகள் இன்னும் கொஞ்ச காலத்தில் நாம் ஒட்டுமொத்தமாக மலேரியாவை ஒழித்து விடுவோம் என்றும் நம்பினார்கள். அந்த எதிர் பார்ப்பு பலிக்கவில்லை. 1968-ல் மீண்டும் மலேரியா பெரிய அளவில் தாக்கியது. மருந்துகள் மற்றும் தடுப்பு முறைகளின் சக்தி களையும் முறியடித்து மலேரியா கிருமிகள் தாக்குப்பிடித்து மீண்டன என்று 1970-களில் கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கையின் முன்னேற்றத்துக்கு இது பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. தொடர்ந்து, நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு, மலேரியாவால் சாகிறவர்கள் குறைக்கப்பட்டாலும், புதிய வகையான மலேரியா கிருமிகளின் தாக்குதல் நடந்தது.

மலேரியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்தப் புதிய சவாலுக்கு ஏற்ப மாறின. டிடிடி மருந்து தெளிப்பு மாலதியான் வகை மருந்துக்கு மாறியது. மலேரியாவைக் கட்டுப்படுத்துவது என்பது ஒழிப்பதாக மாறியது. மற்ற மருத்துவச் சேவைகளோடு மலேரியா ஒழிப்பும் இணைக்கப்பட்டது. மருந்துகள் முதல் கொசுவலைகள் வரையாக, பன்முனைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை பயனளிக்கின்றன எனும் அறிகுறிகள் 1990-களில் காணப்பட்டன. நோய் குறிப்பிட்ட இடங்களில் முடங்கியது. அங்கே கூடுதல் கவனிப்பு தேவைப்பட்டது. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே வெடித்த உள்நாட்டுப் போர் மலேரியாவுக்கு எதிரான போரைப் பாதித்தது. வன்னி தான் அதிகமாகப் போர் நடந்த இடம். அது மலேரியாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாகவும் இருந்தது. வடக்கு மாகாண மக்கள் வன்னிக்குள் இடம்பெயரவும் செய்தனர்.

புலிகளும் ராணுவமும் சேர்ந்து பங்கேற்ற போர்

1998 முதல் 2002 வரையான காலகட்டத்தில் மலேரியா தாக்கியது. பொதுமக்கள், படையினர், விடுதலைப் புலிகள் என அனைவரையும் அது பாதித்தது. 1983 முதலாகப் புலிகளுக்கும் படைகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தாலும், ராணுவக் காரணங்களுக்காக அரசோ, புலிகளோ மலேரியாவை ஒரு கருவியாகப் பயன்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக, மலேரியாவுக்கு எதிரான பணிகள் நடக்கும்போது இரண்டு தரப்பினரும் சண்டைநிறுத்தம் செய்து உதவியுள்ளனர். மலேரியா என்பது பொது எதிரி என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் நார்வே நாட்டின் துணையோடு ஏற்பட்ட அமைதி உடன்பாடும் போர் நடைபெற்ற இடங்களில் மலேரியா ஒழிப்புப் பணிகள் நடைபெற உதவியது.

போரின் கடைசிக் கட்டத்தில் ஏறக் குறைய மலேரியாவும் வெற்றிகரமாகக் கட்டுப் படுத்தப்பட்டிருந்தாலும் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் இடங்களுக்குப் பெருமளவு திரும்பிய பிறகு இலங்கை இந்தச் சிறப்பான வெற்றியை அடைந்துள்ளது.

எதிர்காலம்

பொதுவாக, தெற்காசியாவில் மலேரியா கட்டுப்படுத்தப்பட்டுதான் இருக்கிறது. ஆப்கன், வடகிழக்கு இந்தியா, மியான்மர் ஆகிய பகுதிகளில் ஆயுத மோதல் நடைபெறும் இடங்கள் மலேரியாவால் பாதிக்கப்பட்ட இடங்களாகவும் பரப்பும் இடங்களாகவும் உள்ளன. உள்ளூர் கண்காணிப்பு, மலேரியாவைப் பரப்புகிற கொசுக்கள், மனிதர்களின் நடத்தைகள் ஆகியவற்றின் மேல் நீண்ட காலத்துக்கு அதிகமான கவனம் தேவைப்படுகிறது. மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் மக்களின் பங்கேற்பை அதிகப்படுத்த வேண்டும். வாழ்வாதார மேம்பாடு, வறுமை ஒழிப்பு, இருதரப்பு ஆயுதமோதல் நடைபெறும் இடங்களில் அவற்றைத் தடுப்பதற்கான பணிகள் என்று பன்முகச் செயல்பாடுகள் தேவை!

- கலிங்க டுடோர் சில்வா, இலங்கையின் சமூக அறிவியலாளர்.

©'தி இந்து' ஆங்கிலம் | தமிழில்: த.நீதிராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x