Last Updated : 14 Dec, 2016 09:34 AM

 

Published : 14 Dec 2016 09:34 AM
Last Updated : 14 Dec 2016 09:34 AM

கிராமம் எனும் கொடுங்கனவு!

கிராமத்திலிருந்து தப்பி வந்த கதைகள் தொன்மத்தின் சாயலை அடைந்திருக்கின்றன

நாங்கள் தப்பிக்க விரும்புவது கிராமங்களிடமிருந்து அல்ல; எங்களின் நினைவுகளில் படிந்துள்ள வயற்காடுகளிலிருந்தே என்பதுதான் உண்மை. நினைவுகளை அழிப்பதுதான் எவ்வளவு கடினம்.. எத்தனை வலி!

தாழ்வாரத்தில் நடந்துவந்துகொண்டிருந்தேன். என் அலுவலகத்துக்குப் போகும் வழி அது. வழக்கமாக ஆள் நடமாட்டமே இருக்காது. எப்போதாவது, யாருடைய நிழல்களோ போல சோம்பலாக ஒன்றிரண்டு பேர் நடந்து செல்வதை மட்டுமே பார்க்கலாம்.

அன்றைக்கு, எதிரே யாரோ வருவதுபோல் இருந்தது. தலையைத் தூக்கிப் பார்க்கிறேன்.. ஊரிலிருந்து என் சித்தி! கைகளில் பைகள் ஏதும் இல்லை. தனியாக வந்துகொண்டிருக்கிறது.. என்னவாக இருக்கும்?

சித்தியின் ஞாபகம்

ஒரே ஒரு கணம்தான். ‘வணக்கம் சார்’ என்று முனங்கியபடி என்னைக் கடந்து போய்க்கொண்டிருந்தார் அவர். எனக்கு வெட்கமாகப் போனது. எங்கள் அலுவலகத்தின் கழிவறையைத் துப்புரவு செய்ய வந்த பெண்மணி, அவர். என்னவொரு ஒற்றுமை! ஜாடையில் அப்படியே சித்தி.

சிறிய தோற்றம். சுருண்ட முடி. எந்தத் திசையிலிருந்து எந்த ஆபத்தோ என்று எப்போதும் மருண்ட பார்வை. ‘வணக்கம் சார்’ மட்டும் சொல்லியிருக்காவிட்டால், என் சித்தியேதான். இன்னொரு முறை திரும்பிப் பார்க்கலாம் என்றுகூட நினைத்தேன். ஆனால், பார்க்கவில்லை.

இந்தத் துப்புரவுப் பணியாளர்கள் பெரும்பாலும் வடபழஞ்சியைச் சார்ந்தவர்கள். எங்கள் பல்கலைக் கழகத்துக்கு அருகிலிருக்கும் சிற்றூர். அந்தப் பெண்மணிக்கு அறுபது வயது மதிக்கலாமா? என் சித்திக்கும் அவ்வளவுதான் வயது. குடும்பத்தோடு திருப்பூரில் இருக்கிறார்கள். பின்னலாடைத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் ஏதோவொரு வேலை, ஏதோவொரு சம்பளம், ஏதோவொரு ஜீவனம். எதையுமே எங்களிடம் சொல்வதில்லை. சொல்லக்கூடிய வேலையாக இருந்தால், சொல்லியிருக்க மாட்டார்களா என்ன? எப்போதாவது சந்தித்துக்கொள்வதோடு சரி. அலுவலகத் துப்புரவுப் பணியாளர் சித்தி மாதிரியே இருந்ததால் இன்றைக்கு சித்தி ஞாபகம் வந்துவிட்டது.

தொடரும் எண்ணங்கள்

இந்த நேரம் திடீரென்று இப்படித் தோன்றியது. ‘சித்தியும் இதேபோல் எங்கே யாவது கழிவறைத் துப்புரவுப் பணியாளராக வேலை செய்துகொண்டிருக்குமோ?’

என்ன பைத்தியக்காரத்தனமான யோசனை இது என்பதுதான் அடுத்த வரி என்று நினைத்திருப்பீர்கள். ஆனால், அன்று எனக்கு அப்படி நடக்கவில்லை. சின்னதொரு பதற்றத்தை நான் எனக்குள் உணரத் தொடங்கினேன். என் சித்திபோல் இருந்த அந்தப் பெண்மணி, கழிப்பறையைச் சுத்தம் செய்ய ஆரம்பிக்கும் சத்தம் இப்போது எனக்குக் கேட்கத் தொடங்கியது. ‘சளப்’பென்று ஒரு குவளைத் தண்ணீர் விசிறல். அதைத் தொடர்ந்து வாரியலால் தரையைத் தேய்க்கும் ‘சரசர’ சத்தம். தரையிலும் சுவரிலும் ஒட்டிக்கொண்டிருக்கும் மலஜல மிச்சங்களை ஆக்ரோஷமாய் அடித்து விரட்டிக்கொண்டிருக்கிறார். அவரருகில் நின்றிருந்தால் என் மீது கூட அக்கழிவுகள் தெறித்திருக்க முடியும் என்று யோசித்த விநாடி அனிச்சையாய் என் உடல் ஒரு முறை உதறிக்கொண்டது.

‘சித்தியும் இப்படி எங்கேயாவது..’ என்ற யோசனை மீண்டும் மின்னல்போல மனதில் வெட்டுகிறது. ஓட்டமும் நடையுமாக வந்து, குளிரூட்டப்பட்ட என் அறைக்குள் ஒளிந்துகொண்டேன். என் கைகள் நடுங்கின. ‘பதற்றப்படாதே! நிதானமாக யோசி’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டிருந்தேன்.

அப்படி இல்லாமலிருக்க எந்த முகாந்திரமும் இல்லை. சித்தி என்று இல்லை, என் உறவினர்களில் பலரும்கூட இப்படி ஏதாவதொரு மூலையில் துப்புரவுப் பணியைச் செய்துகொண்டிருக்கலாம்.. செய்துகொண்டிருக்கிறார்கள்.

விவசாயம் பொய்த்த வாழ்க்கை

என் உறவுக்கார ஆண்களில் பலரும் கட்டுமானத் தொழிலில் கூலியாட்களாக இருக்கிறார்கள். பெண்கள், வீடுகளி லும் அலுவலகங்களிலும் துப்புரவுப் பணிகளைச் செய்கிறார்கள். இவர் களெல்லாம் பூர்வத்தில் வேளாண்மை செய்துகொண்டிருந்தவர்கள். இன்றைக்கு உலகம் முழுவதும் எடுபிடி வேலை யாட்களாக இருக்கிறார்கள். விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த மக்களுக்குக் கடந்த சில நூற்றாண்டுகளாகவே இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது.

சுதந்திரத்துக்கு முன்பு வரை இலங்கைக்கும், மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் தோட்டக் கூலிகளாய்ப் போய்க்கொண்டிருந்தார்கள். அதன் பின்பு, மத்தியக் கிழக்கு நாடுகளுக்குக் கல் சுமக்கவும், ஒட்டகம் மேய்க்கவும் போனார்கள். இடையில், திருப்பூர் வந்தது. அதன் பின், மும்பைக்கும் சென்னைக்கும்கூடப் போனார்கள். எல்லா இடத்திலும் அவர்களுக்கு ஒரே மாதிரியான அடையாளம்தான் கூலிகள். ஆனால், நினைவில் வயற்காடுள்ள கூலிகள்!

தேயிலைக் காடுகளிலும், பாலைவனங் களிலும், தொழிற்சாலைகளிலும், பெருநகரச் சேரிகளிலும் வாழ்ந்து கொண் டிருக்கும் அவர்கள் அனைவருக்கும் ஒரே நினைவுதான் - சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும்.. திரும்பிப் பயிர் வைக்க வேண்டும். உறவினர் வீட்டு விசேஷங்களில் எல்லோரும் சேர்ந்திருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் இந்த ஆசையைத்தான் பகிர்ந்துகொள்வார்கள். ‘ஊருக்கு வந்திரப்போறேன்’!

கனவு காணும் கூலிகள்

ஆனால், யாராலும் வந்துவிட முடிவது இல்லை. அப்படியே வந்தவர்களும் நன்றாக வாழ்ந்தது இல்லை. இருந்தாலும், கிராமத்துக்குத் திரும்பும் கனவை மட்டும் விடாமல் காத்துவருகிறார்கள்.

எங்களைப் போல் சிலர், கிராமங் களிலிருந்து வெற்றிகரமாய்த் தப்பித்து வந்திருக்கிறோம். இந்தக் குடும்பங் களில் கிராமத்துக்குத் திரும்புவதைக் கொடுங்கனவென்றே சொல்லியிருக் கிறார்கள். கிராமம் ஒரு கொடிய நிலம். எங்களை விழுங்க அது எப்போதும் தயாராக இருக்கிறது. ஏதாவது விசேஷம் என்று கிராமத்துக்குப் போய்விட்டுத் திரும்பும்போதெல்லாம் நாங்கள் இப்படித்தான் சொல்லிக்கொள்கிறோம் - ‘இங்கு மட்டும் திரும்ப வந்துவிடக் கூடாது!’

கிராமத்திலிருந்து தப்பித்து வந்த கதைகளைத்தான் ஒரு நூற்றாண்டாக எங்களுக்குச் சொல்லிவந்திருக்கிறார்கள். திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு ஏறக்குறைய ஒரு தொன்மத்தின் சாயலை அவை அடைந்திருக்கின்றன.

யோசித்துப் பார்த்தால், நாங்கள் தப்பிக்க விரும்புவது கிராமங்களிடமிருந்து அல்ல; எங்களின் நினைவுகளில் படிந்துள்ள வயற்காடுகளிலிருந்தே என்பதுதான் உண்மை. நினைவுகளை அழிப்பதுதான் எவ்வளவு கடினம்.. எத்தனை வலி!

- டி.தர்மராஜ், பேராசிரியர்,

காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை.

தொடர்புக்கு: dharmarajant@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x