Published : 06 Dec 2016 09:33 AM
Last Updated : 06 Dec 2016 09:33 AM

உண்மைக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லையா?

நம்மைச் சுற்றி நடக்கும் அரசியல் காட்சிகளைப் பார்க்கும்போது, எல்லோருமே சுயநலத்துடன்தான் செயல்படுகிறார்கள், பேசுகிறார்கள் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. நடப்பு அரசியலில் பொய்யே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. இது, ஏராளமான பொய்களால் பெருக்கெடுத்த அமெரிக்கத் தேர்தலுடன் நின்றுவிடவில்லை; உலகம் முழுவதிலுமே இன்றைய அரசியல் சூழல் அப்பட்டமான பொய்களின் பருவத்தால் நிறைந்திருக்கிறது.

அமெரிக்கத் தேர்தல் என்பது அப்பட்டமான பொய்களையும், வெளிப்படையான பொய்களை லட்சியம் செய்யாத அமெரிக்க வாக்காளர்களையும் பற்றியது. இந்திய அரசியலில் பொய்களுக்கு நாம் பழக்கப்பட்டவர்கள்தான் என்றாலும், அதன் வீச்சும் வெளிப்படைப்போக்கும் அதிகமாகிக்கொண்டேவருகிறது.

பொதுவெளியில் பொய்கள்

பெங்களூரு மாநகரின் மையப் பகுதியில், “6.7 கி.மீ. இரும்புப் பாலம் திட்டம் வேண்டவே வேண்டாம்” என்று மக்கள் தாங்களாகவே திரண்டு கிளர்ச்சி செய்தபோது, அரசும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் மக்கள் நம்ப மாட்டார்கள் என்று தெரிந்துகொண்டே குழப்பும் வகையிலும், சுற்றி வளைத்தும் விளக்கம் அளித்தனர். இரும்புப் பாலத்தின் அவசியம் குறித்து அமைச்சர் தெரிவித்த ‘உண்மைகள்’, அரசியல் என்றால் உண்மை பேசுவார்கள் என்று எதிர்பார்க்கவே கூடாது என்று நமக்கு அறிவுறுத்துவதைப் போலவே இருந்தது.

பொதுவெளியில் பொய் சொல்வதைத் தடுப்பதற்கு என்று ஏதேனும் உத்திகள் இருந்தன என்றால், அவையெல்லாம் சமீபத்தில் தோற்றுவிட்டன என்றே கருதத் தோன்றுகிறது. ஒரு ஊழல் அல்லது குற்றச்செயல் தொடர்பாக ஒலி - ஒளிக் காட்சிகளை ஆதாரமாகக் காட்டினால்கூட, அவையெல்லாம் ‘திரிக்கப்பட்டவை’ என்று ஒற்றை வார்த்தையில் நிராகரித்துவிடுகிறார்கள் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள்!

உண்மையை விரட்டும் பொய்

பொய்யும் மாயத் தோற்றமும் கொண்ட இவ்வுலகை, ஓர் உண்மை அல்லது அதற்கு மாற்றான இன்னோர் உண்மைதான் தாங்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் ஏதாவதொரு பொய்யை அடிப்படையாகப் பேசி, தாங்கள் பேசுவதுதான் உண்மை, மாற்றுக் கட்சி கூறுவது பொய் என்று சொல்லிவிடுகிறது. இப்படித்தான் பொய்யைப் பயன்படுத்தி உண்மையை விரட்டுகின்றனர். பொது வாழ்வில் நேர்மை குறைந்துவிட்டதால் பொய்யைப் பரப்ப ஊடகமும் தொழில்நுட்பமும் இயல்பாகப் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது.

அரசியலுக்கும் பொய்க்கும் எப்போதும் நெருங்கிய உறவு உண்டு; அரசியலும் உண்மையும் கைகோத்துச் செல்ல முடியாது. “அரசியல் அதிகாரம் அவர்களிடம் தொடர வேண்டும் என்றால், மக்கள் தொடர்ந்து அறியாமையில் மூழ்கியிருக்க வேண்டும், உண்மை எதுவென்று தெரியாத அறியாமையாக அது இருக்க வேண்டும், தங்களுடைய வாழ்க்கையைப் பற்றிய உண்மைகளைக்கூடத் தெரிந்துகொள்ள முடியாத அறியாமையாக அது இருப்பது அவசியம். எனவே, நம்மைச் சுற்றியிருப்பவை அடுக்கடுக்கான பொய்கள், அவற்றைக் கொண்டுதான் நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம்” என்கிறார் 2005-ல் இலக்கியத்துக்கான நோபல் விருது வாங்கிய ஹரால்டு பின்டர்.

யாருக்கு எந்த இடம்?

அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா ஆகிய மூன்று நாடுகளில் 2012-ல் சில கேள்விகளைக் கேட்டு, பதில்களைப் பெற்ற ஒரு விளம்பர நிறுவனத்திடம், அரசியலில் இந்நாளில் உண்மையைக் கண்டுபிடிப்பதே கடினம் என்று 72% பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர். ‘பல்வேறு தொழில்களில் ஈடுபடுவோரில் உண்மை பேசுகிற வர்களை வரிசைப்படுத்துக?’ என்று அந்நிறு வனம் கேட்ட கேள்விக்கு விடையாக, கடைசி இடத்தில் அரசியல்வாதிகள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மேலே அடுத்த இடத்தில் கார் விற்பனையாளர்களும், அவர்களுக்கும் மேலே விளம்பர நிறுவனத்தாரும் இடம்பிடித்திருந்தனர்!

ஹன்னா ஆரண்ட் என்ற தத்துவ அறிஞர் ‘தி நியூயார்க்கர்’ இதழில் ‘உண்மையும் அரசியலும்’ என்ற கட்டுரையை 1967-ல் எழுதினார். “அரசியலும் உண்மையும் ஒன்றோடொன்று இணங்கிச் செல்லாது என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை; அரசியலுக்குத் தேவையான நல்லொழுக்கம் ‘உண்மை’ என்று எப்போதுமே கருதப்பட்டதில்லை. பொய் பேசுவது சாதாரண அரசியல்வாதி, அரசியல் தலைவர், ராஜதந்திரி என்று அனைவருக்குமே அவசியமானது - நியாயமானது என்பதே நியதியாகிவிட்டது. அரசியலில் வெற்றிகளைக் குவிக்க மலட்டுத் தன்மையுள்ள உண்மை பலன் தராது, மக்களை ஏமாற்றினாலும் பொய்தான் பலன் தரக்கூடியது என்றாகிவிட்டதோ?” என்று வினவுகிறார் ஆரண்ட். எல்லா விதங்களிலும் உண்மைக்கு எதிராகப் போரிடுவதே அரசியலின் இயற்கை என்றே அவர் சந்தேகப்படுகிறார். அவர் கூறுவது ஜெர்மனியில் நாஜிகளின் ஆட்சிக்கு மிகவும் பொருந்திவருகிறது. ஆனால், அரசியலில் பரவலாக இதுதான் வழக்கமாகவும் இருக்கிறது.

விதிவிலக்கானவர் காந்தி

இதற்கெல்லாம் பெரிய முரணாக, விதிவிலக்காக இருந்தவர் காந்தி. அவருக்கு அரசியல் என்பதே உண்மை - சத்தியத்தின் விளக்கமாகவே இருந்தது. உண்மையை எதிர்கொள்வதன் மூலம் வலுவான அரசியல் நடவடிக்கையை எப்படிக் கட்டமைக்கலாம் என்று காட்டியவர் காந்தி. உண்மையும் அரசியலும்தான் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அங்கமாகவும், சுதந்திர இந்தியாவின் தொடக்ககால நிகழ்வுகளின் அங்கமாகவும் திகழ்ந்தன.

விவாதத்துக்கான இடம் ஏன் சுருங்குகிறது?

இன்றைக்கு ஜனநாயக அரசியல் என்பது, எதையாவது சொல்லி மற்றவர்களை நம்பவைப்பது என்று மட்டுமே ஆகிவிட்டது. அரசியல்வாதிகள் மக்களை நம்ப வைக்க வேண்டும்; மக்களுமே அரசியல்வாதிகள் சொல்வதை நம்புவதற்குத் தயார்படுத்தப்பட வேண்டும் அல்லது தயாராகிக்கொள்ள வேண்டும். அப்படி நம்புவதற்குத் தடையாக இருப்பது உண்மையல்ல. ஆனால், ஒவ்வொருவருக்கும் இருக்கும் சில அடிப்படையான நம்பிக்கைகள்.

கருத்து வேற்றுமைகளும், எதிரெதிர் நிலைகளும் அரசியலின் கூறுதான். வியப்பு என்னவென்றால், இருதரப்புமே தாங்கள் பேசுவதுதான் உண்மை என்பதாக வாதத்தைக் கட்டும் திறமைதான். நாம் இத்தனை காலமாக நம்பிவந்ததைக் கைவிடத் தயாரில்லை என்பதால், கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. சித்தாந்தம் காரணமாக வேறுபடுகிறோம் என்று கூறாமல், நான் கூறுவதுதான் உண்மை என்பதால் வேறுபடுகிறோம் என்கிறோம். இரு எதிரெதிரான கருத்துகளின் மோதலாகக் காட்டாமல், இரு எதிரெதிர் உண்மைகளின் மோதல் என்று சித்தரிப்பதால் நம்முடைய சண்டை கட்டுப்படாமல் போய்விடுகிறது.

உள்ளபடி, அரசியலில் உண்மை என்பதில் என்ன பிரச்சினை என்றால், உண்மைக்கு வாய்ப்பு இல்லை என்பதல்ல; நம்முடைய அரசியலைத் தொடர்வதற்கு எந்த உண்மை சரியென்ற உடன்பாட்டுக்கு நாம் வந்தாக வேண்டும் என்பதே!

(கட்டுரையாளர் பெங்களூரு உயர் கல்விக்கான தேசியக் கழக தத்துவவியல் பேராசிரியர்.)

© ‘தி இந்து’ ஆங்கிலம்,

சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x