Published : 26 Dec 2016 10:19 AM
Last Updated : 26 Dec 2016 10:19 AM

தனிமையிலே இனிமை காண முடியுமா?

உங்கள் வீட்டில் யாராவது அடிக்கடி தனியாகப் போய் உட்கார்ந்துகொள்கிறார்களா, வெளியே போகும்போதும் தனியாகப் போய்வருகிறார்களா? அவர்களைக் கொஞ்சம் கண்காணிக்க வேண்டும் என்கிறது ஆஸ்திரேலிய ஆய்வர் குழு. கொஞ்சம் நெருங்கினாலே, "என்னைத் தனியாக இருக்க விடேன்!" என்று எரிந்து விழுவார்கள் சிலர். அவர்களை இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனமாகக் கண்காணிக்க வேண்டுமாம்.

அதற்காக அவர்களுக்குப் பக்கத்தில் அடமாகப் போய் உட்கார்ந்துகொள்ளக் கூடாது. தனிமையை அனுமதித்துவிட்டு, தொலைவிலிருந்து கண்காணிக்க வேண்டும். இல்லாவிட்டால், நாளாவட்டத்தில் அத்தகைய நடத்தை மனக்கோளாறாக முற்றிவிடக்கூடும் என்கிறது குழு. அடிக்கடி வீட்டிலுள்ள மற்ற உறுப்பினர்கள் அவரை உரக்க அழைப்பது அல்லது ஏதாவது வேலை சொல்வது போன்றவற்றால், அந்தத் தனிமை விரும்பிகள் உண்மையில் ஒரு கூட்டத்தின் நடுவில்தான் இருக்கிறோம் என்று உணர்ந்துகொண்டே இருக்கச் செய்ய வேண்டும். குடும்பத்தின் சந்தடிகளை அவர்கள் அனுபவித்துக்கொண்டே இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவருடைய மன நல ஆரோக்கியத்துக்கு உதவும்.

அச்சம் தவிர்

மற்றவர்களைப் பற்றிய அச்சமே ஒருவரைத் தனிமையை நாடும்படி செய்கிறது. அவருக்குத் தன்னிடம் அத்தகைய அச்ச உணர்வு இருப்பதே தெரியாமல் இருக்கக்கூடும். ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களைத் தீவிரமான விசாரணைக்கு உட்படுத்தினார்கள். அதன் மூலம் பெரும்பாலானவர்கள் தம்மை அறியாமலேயே மற்றவர்களைக் கண்டு அஞ்சுகிறார்கள் என்பது தெரியவந்தது. யாரும் வேறு யாரிடமும் நூறு சதவீதம் நம்பிக்கை வைத்து, தமது உள்ளத்திலுள்ள விஷயங்களைத் தெரிவித்துவிடுவதில்லை. மனைவி கணவனிடமும், கணவன் மனைவி யிடமும்கூட எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருப்பதில்லை.

கணவனும் மனைவியும் ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு திரும்புகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். கணவன் தனது உறவினர்களிடமும் நண்பர்களிடமும் எவ்வளவோ விஷயங்களைப் பற்றிப் பேசி யிருக்கலாம், பல செய்திகளைப் பரிமாறிக் கொண்டிருக்கலாம். ஆனால், அதைப் பற்றி மனைவி கேட்டால், "ஒன்றும் பெரிதாக இல்லை; சும்மா அரட்டையடித்துக்கொண்டிருந்தோம்" என்பார். கணவன் கேட்டிருந்தால் மனைவியும் அப்படியேதான் சொல்லியிருப்பார். உண்மையில், இருவருமே அந்தத் திருமணக் கூடத்தில் யாருடன், எதைப் பற்றிப் பேசி னோம் என்பதையே நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. பெரும்பாலானவர்கள் மறு நாள் காலையில் வீட்டில் உட்கார்ந்து காபி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது துண்டு துண்டாக, "அவர் வேற கார் வாங்கியிருக்காராம்… இவருக்கு வேறு ஊருக்கு மாற்றலாகிவிட்டதாம்" என்றெல்லாம் செய்திப் பரிமாற்றம் செய்துகொள்வார்கள். இதில் பாராட்ட வேண்டிய அம்சம் என்னவெனில், இருவருமே பல்வேறு உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கலந்துரையாடியிருப்பார்கள்.

ஆனால், பலர் அவ்வாறு செய்வதில்லை. யாருடனும் வலியப்போய் பேசுவதில்லை. திருமணத்துக்குக் கூப்பிட்டதாலே போனேன், மொய் எழுதினேன், சாப்பிட்டேன், வந்துவிட்டேன் என்பார்கள். இத்தகைய மனப்பாங்கை உடையவர்கள், சில ஆண்டுகளுக்குப் பிறகு கடுமையான மன நோயாளிகளாக மாற வாய்ப்பிருப்பதாக ஆஸ்திரேலிய ஆய்வுகள் காட்டுகின்றன. இதற்கு அதுதான் காரணம், இதுதான் காரணம் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது என்றாலும், இரண்டுக்கும் இடையில் ஒரு மெலிதான நூல் போன்ற இணைப்பு இருக்கவே செய்கிறது.

மனச் சோர்வும் தனிமை நாடலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான் என்று சுலபமாகச் சொல்லிவிட முடியாது. அவை உளவியல் நோக்கில் வெவ்வேறானவை. தனிமை நாட்டம் என்பது குறிப்பாக, உறவையும் நட்பையும் விட்டு ஒதுங்குவது. மனச்சோர்வு மேலும் பல பொதுவான மனநலச் சிக்கல்களால் ஏற்படுவது. தாம் பெற விரும்பிய உறவுகளுக்கும் தமக்கு வந்து வாய்த்துவிட்டதாக எண்ணுகிற உறவுகளுக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளதாக ஒருவர் எண்ணுகிறபோது, ஏற்படுகிற எதிர்மறையான உணர்ச்சி நிலையே தனிமை நாட்டமாக வரையறுக்கப்படுகிறது.

ஹவ் ஆர் யூ ஜாக்குலின்

வேதனை தரும் தனிமை உணர்வுகள் கால, தேச, வர்த்தமானங்களையும் சார்ந்தவை. இடம், பொருள், ஏவல்களையும் பொருத்தவை. தனிமை நாட்டம் என்பது, ஒருவர் பிறருடன் கழிக்கிற நேரத்தைக் குறிப்பதில்லை. அதே போல அவர் ஒரு தாளிட்ட அறைக்குள் தனித்திருக்கிற நேரத்தையும் குறிப்பதில்லை. உறவினர்களுடனும் நண்பர்களுடனும் அவர் கழிக்கிற நேரத்தைவிட, அவர் அதை எப்படிக் கழிக்கிறார் என்பதைப் பொறுத்தே அது வரையறுக்கப்படுகிறது.

பெரும்பாலானவர்களின் தனிமை நாட்டத்துக்கான காரணம், மற்றவர்கள் தம்மைப் புரிந்துகொள்வதில்லை என அவர்கள் எண்ணுவதுதான். மற்றவர்கள் தம்முடன் உறவாடுவதற்கு விரும்புவதில்லை என்ற எண்ணமும் அதற்கு உரமூட்டுகிறது. தானாகவே போய் ஒருவருடன் பேசினால், அவர் அதை ஏற்றுக்கொள்வாரா என்கிற சந்தேகமும் பலருக்கு உண்டு. அந்த விஷயத்தில் வெளிநாட்டினர் மேலானவர்கள். தஞ்சாவூர் பெரிய கோயிலின் வாசலில் நின்றுகொண்டு வருகிற வெளிநாட்டினரைப் பார்த்து "ஹாய், ஹவ் ஆர் யூ?" என்று வரவேற்பதுதான் எனது நண்பர் ஒருவருக்குப் பொழுதுபோக்கு. அவர்களில் சிலர், "வெல், தேங்க்யூ!" என்று பதிலளித்தவாறே கடந்துவிடுவார்கள். சிலர் நின்று, சில நிமிடங்கள் பேசுவார்கள். தாம் கோயிலைச் சுற்றிக்காட்டுகிற வழிகாட்டி இல்லை என்பதையும் பிச்சை எதையும் அவர்களிடம் எதிர்பார்க்கவில்லை என்பதையும் எடுத்த எடுப்பிலேயே வெளிநாட்டவர்களிடம் தெளிவுபடுத்திவிடுவார். அவருக்கு தஞ்சாவூரின் கடந்தகால வரலாறு அத்துப்படி. ஒருமுறை ஜாக்குலின் கென்னடி ரகசியமாகப் பெரிய கோயிலுக்கு வந்தபோது, தன்னைப் பார்த்துப் புன்னகை செய்து கையாட்டியதைப் பெருமையுடன் சொல்லிக்கொண்டிருப்பார். அதில் பரிதாபம் என்னவெனில், அடுத்த நாள் செய்தித்தாள்களைப் படித்த பிறகுதான் அது ஜாக்குலின் என்பது அவருக்கே தெரியவந்தது.

தனிமை நோய்களின் வரவேற்பறை

தனிமை நாட்டம் மன நலக் கோளாறுகளை உண்டாக்கும். ஆனால், மனநிலைக் கோளாறுகள் தனிமை நாட்டத்தை உண்டாக்குவதில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர், ஏதாவது ஓரிடத்தில் நாலு பேர் கூடி நின்று பேசிக்கொண்டிருந்தால் தானும் போய் நின்றுவிடுவார். அது டீக்கடையாக இருந்தால், அவர்கள் அவருக்கு டீ, பன், வடையெல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள். அவர் நன்றாக உடையுடுத்தி, தலையை நன்றாக அழுந்தி வாரியிருப்பார். ஒரு நாள் அவருடைய தந்தை வந்து இழுத்துக்கொண்டு போனபோதுதான் அவர் மன நோயாளி என்று மற்றவர்களுக்குத் தெரிந்தது.

தனிமை நாட்டம் உடல் நலக் கோளாறுகள், அல்ஸீமர் நோய், இதய நாள நோய்கள், நோயெதிர்ப்புத் திறன் குறைவு போன்றவற்றுக்கு அடிகோலும். நம் வீட்டில் யாராவது அளவுக்கு மீறித் தனிமையை நாடுவதாகத் தோன்றினால், மற்றவர்கள் அவரைப் பிடித்து இழுத்துவந்து, கூடத்தில் அமர்த்தி, சூழ்ந்து உட்கார்ந்து, வீட்டு வேலையைச் சேர்ந்து செய்ய வைக்கவோ அரட்டை அடிக்கவோ வேண்டும். அவருடைய நண்பர்களையும் வீட்டுக்கு அழைத்து உபசரிக்க வேண்டும். விழாக்களுக்கும் வீட்டு விசேஷங்களுக்கும் அவரை வற்புறுத்தி அழைத்துச் செல்ல வேண்டும்.

மனிதர்கள் சமூகக் கூட்டமாக வாழத்தான் படைக்கப்பட்டவர்கள். தனிமை நாட்டம் மனிதப் பண்புகளுக்கு விரோதமானது. அதை வளரவிடக் கூடாது.

- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x