Last Updated : 18 Dec, 2016 09:25 AM

 

Published : 18 Dec 2016 09:25 AM
Last Updated : 18 Dec 2016 09:25 AM

தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்று எல்லாத் தரப்பினருமே நினைக்கிறார்கள்! - ரணில் விக்ரமசிங்க பேட்டி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் இலங்கையில் நான்காவது முறையாகப் பிரதமர் பதவியை ஏற்றிருப்பவருமான ரணில் விக்ரமசிங்க (67) இலங்கை அரசின் அமைப்பு முறையையே மாற்றும் முக்கியமான அரசியல் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.

அரசியல் சட்டத்தையே மாற்றும் இந்தப் பணி நாடாளுமன்றம், மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு போன்றவற்றின் மூலம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. சட்டமியற்றும் அதிகாரம் உள்ளிட்ட அதிபர் பதவி ஆட்சி முறையிலிருந்து பிரதமர் தலைமையிலான அமைச்சரவை முக்கியத்துவம் பெறும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறைக்கு மாறவிருக்கிறது. முக்கியமாக, தமிழர்களின் பகுதிகளுக்கு அதிகாரப்பகிர்வு வழங்குவது தொடர்பான முடிவை எடுக்கவிருக்கிறது.

ஆளும் கட்சி, பிரதான எதிர்க்கட்சி இரண்டும் கூட்டு சேர்ந்து நடத்தும், வழக்கத்துக்கு மாறான தேசிய அரசுக்கு ரணில் தலைமை வகிக்கிறார். அதிக உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியும் சிறுபான்மை எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை சுதந்திரக் கட்சியும் இதில் அங்கம் வகிக்கின்றன. அதிபர் மைத்ரிபால சிறிசேனா அக்கட்சியைச் சேர்ந்தவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அரசியல் சட்ட மாற்றத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

தீவிர தேசியவாதக் கொள்கை கொண்ட சிங்கள அரசியல் சக்திகள், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் தேசிய அரசின் தலைவர்கள் இறங்கியிருக்கிறார்கள். இந்தச் சூழலில், கொழும்பில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தேன்.

2015 தேர்தலுக்குப் பின்னர், இலங்கையின் அரசியல் சூழல் ஸ்திரத்தன்மை அடைந்திருக்கிறது. உங்கள் வெற்றிக்குப் பிறகு மைத்ரிபால சிறிசேனா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னேற்றமும் சிக்கலும் நிறைந்த இச்சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தேசிய அளவில் கடுமையான கடன் சுமையை எதிர்கொள்ள நேர்ந்ததுடன், இலங்கை மீதான மனித உரிமை மீறல் பிரச்சாரங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. இவை அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டுவிட்டது. ஓரளவுக்கு ஸ்திரத் தன்மையை உருவாக்கியதுடன், பாதையையும் சீர்திருத்தியிருக்கிறோம். எங்கள் முன் இருப்பது அசாதாரணப் பணி. உலகின் எந்த நாட்டிலுமே இப்படி இரண்டு பெரிய எதிர்க் கட்சிகள் இணைந்து செயல்படவில்லை. ஆனால், இலங்கையில் அது நடந்தேறியிருக்கிறது.

பல்வேறு பணிகளை முன்னெடுத்துச் செல்கிறோம். சமரச முயற்சிகளைக் கவனித்துவருகிறோம். வடக்குப் பகுதியில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், பொருளாதாரப் பிரச்சினைகளையும், வளர்ச்சியையும் கவனித்துவருகிறோம். கிராமப்புற ஏழைகளின் நலனில் அதிபர் சிறிசேனா அக்கறை செலுத்திவருகிறார். புதிய அரசியல் சட்டம் தொடர்பாக விவாதித்துவருகிறோம். இதுவரை சாதித்தவற்றை வலுப்படுத்துவதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் முக்கியமானவை.

இலங்கையின் பொருளாதாரம் எப்படி இருக்கிறது?

மேம்பட்டிருக்கிறது. பெரும்நிலை பொருளாதாரத்தை உறுதிப்படுத்திவருகிறோம். இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 10-11% ஆக இருக்கும் வரி வருவாயை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம். ஆட்சிக்காலம் நிறைவடையும் சமயத்தில் அது 15% ஆக இருக்கும் என்று நம்புகிறோம். கருப்புப் பணத்தை மீட்பதிலும் ஈடுபட்டிருக்கிறோம். 2020-க்குள் பட்ஜெட் பற்றாக்குறையை 4% என்ற அளவுக்குக் குறைக்க விரும்புகிறோம். வரி வசூலைக் கவனிப்பதும், பொது நிதியைச் சிறப்பாக நிர்வகிப்பதும் தற்போது முக்கியமானவை. துறைசார் மேற்பார்வைக் குழுக்களை அனுமதித்ததன் மூலம் நாடாளுமன்றத்தைப் பலப்படுத்தியிருக்கிறோம். கொழும்பில் உள்ள ஜே.ஆர்.ஜெயவர்த்தனே மையத்தை நாடாளுமன்ற நிர்வாக மேம்படுத்தலுக்குப் பயன்படுத்துவோம்.

பொருளாதார அடிப்படையிலான சவால்கள் என்னென்ன?

ஆண்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியை 7% அளவுக்கு உயர்த்த வேண்டும். அதிக முதலீடுகளை ஈர்க்க வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். எல்லாத் தரப்பு மக்களுக்கும் வருவாய் அதிகம் கிடைக்க வழிசெய்துவிட்டு கிராமப்புறப் பொருளாதாரத்துக்குப் புத்துயிர் ஊட்ட வேண்டும். நாங்கள் தொடங்கிய விதத்திலேயே இவற்றைச் செய்துமுடித்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வடக்குப் பகுதியில் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது?

வடக்குப் பகுதி வளர நீண்ட காலம் தேவைப்படும். அதைப் போர் சிதைத்துவிட்டது. வடக்குப் பகுதியில் முதலீட்டை ஊக்குவிக்க சிறப்புச் சலுகைகளை அளித்திருக்கிறோம். இலங்கையின் பிற பகுதிகளைவிட இங்கு சலுகைகள் இரட்டிப்பாக்கப்பட்டிருக்கின்றன.

தேசிய அரசில் உள்ள இலங்கை சுதந்திரக் கட்சிக்குள் பிளவு காணப்படுகிறது. அதிபர் சிறிசேனாவுக்கு ஆதரவாகஇருக்கும் இலங்கை சுதந்திரக் கட்சியின் பிரிவுக்கும், உங்கள் கட்சிக்கும் இடையிலான உறவை எப்படி உணர்கிறீர்கள்?

இரு கட்சிகளைக் கொண்ட தேசிய அரசு என்பதையும் தாண்டிய விஷயம் இது. பொதுவாக, ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன் நாங்கள் செயல்பட்டுவருகிறோம். எங்களிடம் மேற்பார்வைக் குழுக்கள் இருப்பதன் காரணமாக, மொத்த நாடாளுமன்றத்தையும் ஒரு அரசாக மாற்றியிருக்கிறோம். நிர்வாகக் கொள்கைகள் அமைச்சரவையால் கவனிக்கப்படும் என்றாலும், அவற்றை அமல்படுத்துவதை, மேற்பார்வைக் குழுக்கள் கவனித்துக்கொள்ளும். உண்மையில் இது இரண்டு அடுக்கு அரசாக மாறிக்கொண்டிருக்கிறது.

மேற்பார்வைக் குழுக்கள் முதன்முறையாக, அமெரிக்க அதிபர் ஆட்சி முறையில் அமைக்கப்பட்டன. பின்னர், ஐரோப்பாவில், ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய நாடாளுமன்றம் ஆகியவை கொண்டுவரப்பட்டன. இலங்கையைப் பொறுத்தவரை, சிறிய அளவிலான திட்டங்களுக்கு அமைச்சரவை, அரசுடன் மேற்பார்வைக் குழுக்களும் உண்டு. ஏனெனில், பிரதமரும், அமைச்சரவை உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள். ஆனால், மேற்பார்வைக் குழுக்களில் அமைச்சர்கள் இடம்பெற முடியாது. அது அரசையும், எதிர்க்கட்சியையும் சேர்ந்த பிற உறுப்பினர்களால் நிர்வகிப்படுவது. கட்சிகளின் விகிதாச்சார அடிப்படையில் அது பிரிக்கப்பட்டிருக்கிறது.

அப்படியென்றால், விரிவான வழிகளில் வெவ்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து பணிபுரிவதற்கான வழிமுறைகள்அரசியல் அமைப்பில் உண்டு என்றும், அவை நன்றாகவே செயல்படுகின்றன என்றும் எடுத்துக்கொள்ளலாமா?

ஆமாம். இந்த வழிமுறைகள் நன்றாகவே செயல்படுகின்றன. மேலும் மேம்படுத்தலாம்.

ராஜபக்சவின் ஆதரவாளர்களுக்கும், சிறிசேனாவின் ஆதரவாளர்களுக்கும் இடையிலான பிளவு அரசின் ஒற்றுமையைப் பாதிக்கிறதா? ராஜபக்ச மீண்டும் தலையெடுப்பார் என்று நினைக்கிறீர்களா?

என்னைப் பொறுத்தவரை, காலப்போக்கில் தனக்கு இருக்கும் சொச்ச ஆதரவையும் ராஜபக்ச இழந்துவிடுவார் என்றே நினைக்கிறேன். ஏனெனில், காலம் மாறிவருகிறது; இளம் வாக்காளர்கள் அவருக்கு ஆதரவாக இல்லை. அவர் மீண்டு வருவார் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில், மக்கள் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்த பின்னர் மீண்டும் அதே விஷயத்தை நாடமாட் டார்கள். வேறொரு மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைத்தாலும், அவர்கள் புதிய விஷயங் களைத்தான் தேடுவார்கள்.

ஆனால், அப்படி நடக்கும் என்று நான் நினைக்க வில்லை. நாட்டின் இரண்டு பிரதானக் கட்சிகள் ஒன்றிணைந்து பணிபுரியும் இன்றைய சூழல் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. பணிகள் நடக்கின்றனவா என்பதைப் பார்க்கவே அவர்கள் விரும்புகிறார்கள். அதில்தான் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.

குறிப்பிட்ட கால வரையறைக்குள் உங்கள் இலக்குகளை எட்டிவிட முடியும் என்று நினைக்கிறீர்களா?

ஆறு துணைக் குழுக்களின் அறிக்கைகள் வெளியாகியிருக்கின்றன. தற்போது நாட்டின் அரசு அமைப்பின் தன்மை, மதம் ஆகியவற்றுடன் நிர்வாகம், நாடாளுமன்றம், நீதி அதிகாரம் செயல்படும் விதம் ஆகிய முக்கியமான விஷயங்களை, வழிகாட்டும் குழு கவனிக்க வேண்டியிருக்கிறது. அதிபரின் நிறைவேற்று அதிகாரத்தை இடம் மாற்றும் விஷயம்… இவையெல்லாம் வழிகாட்டும் குழுக்கள் கையாளும் முக்கிய விஷயங்கள்.

ஆறு துணைக் குழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதம் 2017 ஜனவரி முதல் வாரத்தில் முடிவுற்ற பின்னர், வழிகாட்டும் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்திடம் தாக்கல் செய்வோம். அதன் பின்னர், அரசியல் சட்டத்தின் தன்மை தொடர்பான உண்மையான விவாதம் தொடங்கும். அது நாடாளுமன்றத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட வேண்டும். இறுதியாக வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இந்தக் காரியங்கள் விரைந்து நடக்குமா? இதற்கு, நாடாளுமன்றத்தில் போதுமான ஆதரவு உங்களுக்கு இருக்கிறதா?

சீக்கிரமே நடக்கும். எங்களுக்குப் போதுமான அதரவு இருக்கிறது.

இந்த மாற்றங்களில் சிலவற்றை எதிர்க்கின்றவர்கள் அல்லது மாற்றுக்கருத்து கொண்டவர்கள் இருப்பது பற்றி…

அவர்களில் சிலர் ஆதரவு தருவார்கள் என்று நினைக்கிறேன். இலங்கையில் இதுபோன்ற விஷயங்களுக்கு ஆதரவு எப்போதும் அதிகம்.

அதிபருக்கு அதிகபட்ச ஆதிக்கத்தை வழங்கும் நிர்வாக அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதை அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா?

ஆமாம். அவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். பிரதமர் தலைமையிலான அரசு அமைப்பு இயங்குவது எப்படி என்பதற்கு நாங்கள் மூன்று தெரிவுகளை வழங்குகிறோம். (முதல் தெரிவு, முழுமையான ‘வெஸ்ட்மினிஸ்டர்’ முறை. இரண்டாவது தெரிவு, பிரதமர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவது. தேர்தலுக்கு முன்னால் அனைத்துக் கட்சிகளும் தங்கள் பிரதமர் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என்பது மூன்றாவது தெரிவு. மூன்று தெரிவுகளிலும், அதிபர் என்பவர் நிர்வாக அதிகாரம் இல்லாத, நாட்டின் தலைவர்.)

தமிழ்க் கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயல்பாடுகள் மிகவும் ஆக்கபூர்வமாக இருக்கின்றன அல்லவா?

ஆமாம், அவர்கள் செயல்பாடுகள் மிகவும் ஆக்கபூர்வமாக இருக்கின்றன என்று சொல்வேன். அவர்கள் பங்கெடுத்துக்கொள்கிறார்கள். மிக மிக ஆக்கபூர்வமாக இருக்கிறார்கள். 1987 வரை செயல்பட்ட குழுவில் நான் இருந்தேன். ஆனால், எந்தக் கட்சியும் ஒட்டுமொத்தப் பெரும்பான்மை கொண்டிராத சூழலில் புதிய அரசியல் சட்டத்தைக் கொண்டுவர முயல்வது இதுதான் முதல் முறை.

அதிகாரப் பரவல் தொடர்பாக என்ன முடிவெடுப்பீர்கள்? ஏற்கெனவே, 13-வது சட்டத்திருத்தம் இருக்கிறது…

ஒப்பந்தம் தொடர்பாக கட்சிகளிடம் கருத்தொற்றுமை ஏற்படும். ஏனெனில், இதுதொடர்பாக மாகாண முதல்வர்களிடம் கலந்து ஆலோசித்திருக்கிறோம். ஆளுநர்களுடன் தனியாகவும் பேசியிருக்கிறோம். மத்திய மற்றும் மாகாண ஆணையங்களுக்கான இடையிலான உறவு பற்றி தற்காலிக அறிக்கையைத் தயார் செய்ய மூன்று நபர் கொண்ட துணைக் குழுவை அமைத்திருக்கிறோம்.

தமிழர்களின் கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இந்த முறை என்ன வித்தியாசம்?

தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதிகளை விடுவிப்பது, மக்களுக்கு உதவுவது என்று நிறைய பணிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. இவ்விஷயத்தில் அரசின் தன்மையில் பெரிய அளவிலான பிரச்சினை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பல பிரச்சினைகளிலிருந்து மீண்டிருக்கிறோம். இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது.

தீர்வு காண்பதில் ஒரு திசையில் திடீரென்று பயணித்துவிடாமல் நிதானிப்பதிலும் இலங்கையின் ஐக்கியத்தைக் காப்பதிலும் நல்ல முடிவெடுப்பது நிச்சயம் ஒரு சவாலாக இருக்கும்...

ஆமாம். அதற்குத் தீர்வு காண்பதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.

அதாவது, வெறும் வார்த்தைகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல்?

இல்லை. 13-வது சட்டத்திருத்தத்தைப் பின்பற்ற வேண்டும் என்று இந்திய அரசும் தெரிவித்திருக்கிறது. இப்போது, தமிழர்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்ற வேண்டும். அது வெறும் சட்டம் தொடர்பான விஷயம் அல்ல.

எதிர்க்கட்சிகள் தேசியவாத நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன. இந்தியாவில் இந்த அரசியல் போக்கைப் பார்த்திருக்கிறோம். இலங்கையிலும் இப்படி நடக்கிறது. தேசம் ஆபத்தில் இருக்கிறது என்றோ, பிரிவினைவாத ஆபத்து இருக்கிறது என்றோ கூக்குரல்கள் அதிகரிக்கலாம். அப்படியான சூழல் நிகழ வாய்ப்பில்லையா?

நாங்கள் அனைவரும் தேசபக்தர்கள். அனைவரும் தேசியவாதிகள். எனவே, இந்தக் குரலை எழுப்புகிறவர்களை எதிர்கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மக்கள் அதை ஏற்கவில்லை என்பதை அவர்கள் உணர்வார்கள். அரசு செயல்படும் தன்மை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக நாங்கள் எடுக்கும் முடிவுகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நாடுகள் விடுக்கும் கோரிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றனவா அல்லது மெளனமாக்கப்பட்டுவிட்டனவா?

ஐநா மனித உரிமை ஆணையம் தீர்மானத்துக்கு நாங்கள் அனுசரணையாக இருந்திருக்கிறோம். அதில் பெரிய அளவிலான பிரச்சினை இருப்பதாக நான் நினைக்கவில்லை.

அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதில் அதிகபட்ச ஆதரவு அல்லது ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்பது வரவேற்கத்தக்க விஷயம். இது சாத்தியமாகுமா?

ஒருமித்த கருத்து எட்டப்படுவதற்கு முயற்சிக்கிறோம். வழிகாட்டும் குழுவின் அறிக்கை வெளியான பின்னர் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

ராஜபக்சவுடனும் மற்றவர்களுடனும் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறீர்களா?

ராஜபக்‌ச, சந்திரிகா குமாரதுங்க எல்லோரிடமும் நாம் பேசுகிறோம்.

சர்வதேச விவகாரங்களைப் பற்றிப் பேசலாம். முதலில் இந்தியா பற்றி…

இந்தியாவுடனான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். இரு தரப்பிலும் பொதுவான நல்லெண்ணம் உண்டு. மீனவர்கள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.

கடலோடிகள் விவகாரம்தான் தீர்க்கப்படாத விஷயம், இல்லையா?

ஆமாம். அதற்கு நாம் தீர்வு காண வேண்டும். இந்தப் பிரச்சினை தொடர அனுமதிக்கக் கூடாது. ‘எங்கள் சொந்த கடற்பகுதியில் இனி எங்களை மீன் பிடிக்க விடுங்கள்’ என்று வடக்குப் பகுதி மீனவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் மீது எனக்கு அனுதாபம் உண்டு.

இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாகப் பேசலாம். 2016 இறுதிக்குள் அந்த ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள். இலங்கை தொடர்பான உங்கள் பொருளாதாரப் பார்வையுடன் இது எப்படிப் பொருந்திப்போகிறது? 2017 மத்தியில் வரை இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக முடியாது என்று இந்தியா உணர்த்தியிருப்பதாகத் தோன்றுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் இந்தியாவுடன் ஏதேனும் கருத்து வேறுபாடு உண்டா?

இல்லை. அவர்கள் படிப்படியாக இதை விவாதித்துவருகிறார்கள் என்று நினைக்கிறேன். 2016-லேயே இது நிறைவேறும் என்று விரும்பலாம். அதேசமயம், 2017-ல் நடப்பதற்கும் இடம் தரலாம். ஆனால், 2016-17-லேயே நடக்க வேண்டும் என விரும்புவதில் தவறில்லை. ஏனெனில், சீனா, சிங்கப்பூருடன் 2017 தொடக்கத்திலேயே சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவிருக்கின்றன. ஜி.எஸ்.பி. ப்ளஸ் வசதியின் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விருப்பப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வசதியை மீண்டும் பெறலாம். இந்திய அரசும் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

ஏனெனில், 2017-ல் இந்தியாவுடனான ஒப்பந்தம், இலங்கை, இந்தியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஏற்பாடுகளுக்கு வழிவகுக்கும். இந்தியா - இலங்கை இடையிலான இந்த ஒப்பந்தங்கள், வங்காள விரிகுடாவில் முக்கியமான நுழைவுப் பகுதிகளில் நாம் இருக்கிறோம் என்பதையும், வங்காள விரிகுடா பிராந்தியத்துக்குள், இன்னும் நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பில் இயங்கலாம் என்பதையும் உணர்த்துகின்றன. அது நிறைவேறுவதற்கும், இந்தியாவுடனான ஒப்பந்தம் தேவை.

ஏனெனில், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம் ஆகிய ஐந்து மாநிலங்களுடன், இலங்கையையும் சேர்த்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 500 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக இருக்கும். சில பத்தாண்டுகளில் அது ட்ரில்லியன் டாலர்களாக அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

சர்வதேச உறவில் முக்கியமான மேம்பாடுகள் குறித்து…

பிரிட்டனில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு, அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆகியவற்றுக்குப் பின்னர், சர்வதேச உறவுகள் தொடர்பான பிரச்சினைகளை முழுமையாகப் பார்க்க வேண்டும். மக்கள் ஒரு செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எந்த ஒரு நாடும் தான் கொண்டிருக்கும் ஆதிகாரத்தை விட்டுத்தர விரும்பும் என்று நான் நினைக்கவில்லை.

ஆனால், முன்னுரிமைகளை வரிசைப்படுத்திக்கொள்வது அவசியம் என்று நினைக்கிறேன். ஆசிய நாடுகள் தங்களுக்குள் ஒத்துழைப்பை அதிகரித்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, மேற்கத்திய நாடுகளுக்குப் பிறகு வளர்ச்சியின் மையம் நாம்தான்.

ப்ரெக்ஸிட் இலங்கையைப் பாதித்ததா அல்லது பலன் தந்ததா?

ப்ரெக்ஸிட் எங்களுக்குப் பலனளிக்கவில்லை. இதன் மூலம் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அது எங்கள் ஏற்றுமதியைப் பாதிக்கும். தங்களுக்கு என்ன வேண்டும் எனும் விஷயத்தில் பிரிட்டன் தெளிவாக இருக்க வேண்டும். அந்த வெளியேற்றம் இலகுவானதா, கடினமானதா என்பதில் அவர்கள் இன்னமும் தெளிவாக இல்லை.

காமன்வெல்த் அமைப்புடன் பொருளாதார உறவுகளை மறுநிர்மாணம் செய்ய பிரிட்டன் விரும்பினால், அதற்கான திட்டங்கள் அந்நாட்டுக்கு வேண்டும். ஏனெனில், பிரிட்டனைத் தாண்டி வேறு பல நாடுகள் பங்களித்துவருகின்றன. காமன்வெல்த் நாடுகள் பல இந்தியப் பெருங்கடலைச் சுற்றி அமைந்திருக்கின்றன.

ட்ரம்ப் பதவிக்கு வந்தால் நமது பிராந்தியத்துக்கு என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

அவர் புதிய அணுகுமுறையைக் கொண்டு வருவார். முன்னுரிமைகளை வரிசைப்படுத்திக் கொள்வது நடக்கும். ஆனால், இதுவரை அவர் தேர்ந்தெடுத்திருக்கும் நிர்வாகிகள் நல்ல தெரிவுகள்தான்.

சீனாவுடனான இலங்கையின் உறவு நல்லவிதமாகத் தொடர்கிறதா?

ஆம். தொடர்கிறது.

ஏதேனும் மாற்றங்கள்?

மாற்றங்கள் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே தீர்க்கப்படாத விஷயங்கள் இருந்தன. சட்ட விதிகள் பொருந்த வேண்டும் என்பதை உறுதிசெய்வதற்காக, துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்திவிட்டோம். எங்களுக்கான நகரத்தை உருவாக்க நிலம்தான் சிறந்தது என்று முடிவுசெய்திருக்கிறோம்.

2015 தேர்தலுக்கு முன்னர் இருந்த நிலை குறிப்பிடத் தக்க வகையில் மாற்றமடைந்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாக வித்தியாசம் இருக்கிறது. நம்பிக்கை தரும் வகையில்!

‘தி இந்து’ (ஆங்கிலம்)
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x