Published : 23 Dec 2016 10:26 AM
Last Updated : 23 Dec 2016 10:26 AM

தலைமைச் செயலாளருடன் ஒரு சந்திப்பு!

>உள்ளாட்சிகள் தொடருக்காகக் கிராமங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அதற்கு முன்பாக தலைமைச் செயலாளரைச் சந்தித்துவிடுங்கள் என்றார் பேராசிரியர் பழனிதுரை. அலைபேசி எண்ணையும் அளித்தார். 'பேசக்கூடத் தேவையில்லை. நேராக தலைமைச் செயலகத்துக்குச் சென்றுவிடுங்கள்' என்றார்.

அலைபேசியில் அழைத்தேன். முதல் மணியோசையிலேயே எடுத்தார். 'தாரளமாக வாருங்கள்' என்றார். எப்போது என்றதற்கு, 'எப்போது வேண்டுமானாலும்' என்றார்.

மறுநாள் காலை தலைமைச் செயலகத்தில் காவலர்களை எதிர்கொண்டோம்.

'தி இந்து' என்று தொடங்கியபோதே இடைமறித்து, எனது பெயர் உள்ளிட்ட விவரங்களைச் சொன்னவர்கள், தலைமைச் செயலாளர் அறைக்கு அனுப்பி வைத்தார்கள். 9 மணிக்கு ஒருவர் வந்தார். காவலாளிகள் சல்யூட் அடித்த பின்பே அவர் தலைமைச் செயலாளர் என்று புரிந்தது. அழைப்பு வந்தது.

பேட்டி என்றதும், 'என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்' என்றார். பேட்டியாகத் தொடங்கியது, உரையாடலாக நீண்டது. ஒருகட்டத்தில் அது விவாதமானது. கேள்விகளை கவனத்துடன் எதிர்கொண்டார். தீர்க்கமாகப் பதிலளித்தார். மாநிலத்தின் உச்ச பொறுப்பிலிருக்கும் ஓர் உயர் அதிகாரியுடனான சம்பிரதாய சந்திப்பாக அமையவில்லை அது. நிபந்தனைகளற்ற நட்புடனான சந்திப்பைப் போல அமைந்தது அது. ஊழல் தொடர்பான பேச்சு வந்தபோது, ஊழலைக் கடுமையாக விமர்சித்தார். 'யார் செய்தாலும் தவறுதான். அது ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி' என்றவர் சில விஷயங்களைக் குறிப்பிட்டார். லேசான அதிர்ச்சியுடன் 'இதையும் பிரசுரிக்கலாமா?' என்று கேட்டபோது, 'உண்மையை பிரசுரிப்பதில் என்ன சங்கடம்?' என்றார்.

சுமார் இரண்டு மணி நேரம். அறைக்கதவு திறந்தே கிடந்தது. இடையிடையே அலுவலர்கள் வந்து சென்றார்கள். என்னிடம் பொறுத்துக்கொள்ளும்படி சைகையில் தெரிவித்துவிட்டு, கோப்புகளில் கையெழுத்திட்டார். பலவற்றை திருத்தமிட்டுத் திருப்பி அனுப்பினார். ஆசிரியர்கள் வந்தார்கள். விவசாயிகள் வந்தார்கள். அழுக்கு வேட்டி, தோளில் துண்டுடன் சிலர் பேசிவிட்டுச் சென்றார்கள்.

வந்தவர்கள் எவரிடமும் பயமில்லை, பவ்யமில்லை, குனியவில்லை. குழையவில்லை, கைகட்டி வாய் பொத்திப் பேசவில்லை. உயரதிகாரியின் பேச்சை மறுத்துப் பேசும் ஜனநாயகம் அங்கே இருந்தது. நியாயமான மறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் பொறுப்புணர்வும் அங்கே இருந்தது. வந்தவர்கள் எல்லோருக்கும் சலிக்காமல் பதில் அளித்தார். சந்திக்க வந்தவர்கள் எவரும் எங்கேயும் காத்திருக்கவில்லை. உதவியாளர்களிடம் நேரம் கேட்டு முன்பதிவு செய்யவில்லை. சிலர் அந்த அறைக்குள் இருக்கும் இருக்கையில் நன்றாக சாய்ந்து, கால்நீட்டி அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறிச் சென்றார்கள்.

அரசு உயர் அதிகாரிகளுக்காக பங்களாக்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அதில் தலைமைச் செயலாளருக்கான பங்களா பெரியது; நவீனமானது. ஆனால், இவர் நகரின் நெரிசலான பகுதியிலிருக்கும் தனது சிறிய ஓட்டு வீட்டிலிருந்தே தினசரி அலுவலகம் வந்து செல்கிறார். அந்த வீடும் அவர் வாங்கியதில்லை. அவரது பெற்றோர் வாங்கியது. மரியாதை நிமித்தம், சம்பிரதாய நிமித்தம் என்பதற்கெல்லாம் அங்கே இடமில்லை. தார்மிகம் தர்மம் மட்டுமே கோலோச்சுகிறது. ஏனெனில் அது கேரளம். ஆனால், நான் சந்தித்த அதிகாரி விஜயானந்த் ஒரு தமிழர். குமரி மாவட்டம், தேங்காய்பட்டணத்தைச் சேர்ந்தவர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x