Published : 02 Nov 2016 08:57 AM
Last Updated : 02 Nov 2016 08:57 AM

இந்த முடிவுகள் எப்படி எடுக்கப்பட்டன என்று அரசு விளக்க வேண்டும்!

மூன்று முக்கியமான விவகாரங்களில் தமிழக அரசு எடுத்திருக்கும் சமீபத்திய முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் இணைந்துகொள்வது, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நவ. 1 முதல் தமிழகத்தில் அமல்படுத்துவது, மருத்துவப் பொது நுழைவுத்தேர்வுக்கு (நீட்) தமிழகத்தில் அரசு சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்தவிருப்பது - இவை மூன்றுமே தமிழக அரசு மத்திய அரசுடன் உடன்பட மறுத்து நின்ற விவகாரங்கள். தமிழகத்தின் தரப்பில் இது தொடர்பில் நியாயமான காரணங்கள் இருந்தன.

உதய் திட்டத்தில் சேர்ந்தால், மாநில மின்வாரியத்தின் கடனில் 75%-ஐ தமிழக அரசே ஏற்க நேரிடும்; மீதமுள்ள 25% கடனுக்குக் கடன் பத்திரங்களை வெளியிடலாம் என்றாலும், அதற்கான வட்டியைத் தமிழக அரசே ஏற்க வேண்டும் என்பதாலேயே தமிழக அரசு அதில் சேர எதிர்ப்புத் தெரிவித்தது. அதாவது, இத்திட்டத்தின்படி, தமிழக மின்வாரியத்தின் ரூ.81,782 கோடி கடனில், ரூ.65,320 கோடியை இரண்டு தவணைகளில் தமிழகம் ஏற்க வேண்டியிருக்கும். மீதமுள்ள ரூ.16,462 கோடிக்குக் கடன் பத்திரம் வெளியிட வேண்டும் என்பதால், தமிழக அரசு இதை ஏற்க மறுத்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலொழிய இத்திட்டத்தைத் தமிழகத்தில் அமல்படுத்தும் வாய்ப்பே இல்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறும் அளவுக்குத் தமிழக அரசு எதிர்த்துவந்த திட்டம் இது.

இப்போது தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி இத்திட்டத்தில் சேர்வதற்கான சம்மதத்தை டெல்லியில் மத்திய அமைச்சரைச் சந்தித்துத் தெரிவித்திருக்கிறார்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை 2013-ல் தொடங்கி தமிழக அரசு எதிர்த்துவந்திருக்கிறது. இதை அமல்படுத்துவதால் தமிழகத்துக்குக் கூடுதலாக ரூ.1,193.30 கோடி செலவாகும் என்ற பின்னணியும் ஒரு காரணம். இப்போது தமிழகத் தலைமைச் செயலரின் அறிவிப்பு மத்திய அரசின் முடிவோடு ஒன்றிப்போவதைச் சொல்கிறது.

பொது மருத்துவ நுழைவுத் தேர்வு (நீட்) முறையைத் தொடர்ந்து தமிழக அரசு எதிர்த்துவந்தது. இப்போது டெல்லி சென்று திரும்பியிருக்கும் கல்வி அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் ‘‘இந்த நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளைத் தமிழக அரசே நடத்தும்’’ என்று கூறுகிறார். அப்படியென்றால், பொது நுழைவுத் தேர்வு முறையைத் தமிழக அரசு ஏற்றுக்கொண்டுவிட்டதா?

இந்த விவகாரங்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இதுநாள் வரை காட்டிவந்த எதிர்ப்பு வெறுமனே தமிழக நலன் சார்ந்த முடிவாக மட்டும் இல்லை. மாறாக, மாநிலங்களின் உரிமைக்கான உறுதியான குரலாகவும் தமிழகத்தின் குரலை அவர் உயர்த்தி நின்றார். இப்போது அவர் மருத்துவமனையில் இருக்கும் நிலையில், அதிமுகவின் இந்தத் திடீர் திருப்ப முடிவுகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. ஜெயலலிதா உடல்நலம் குன்றியிருக்கும் நிலையில், மத்திய அரசு தன்னுடைய அழுத்தங்களை மாநில அரசு மீது சுமத்துகிறதா என்றும் மத்திய அரசின் அழுத்தங்களை எதிர்கொள்ளும் சூழலில் அதிமுகவின் அடுத்தநிலைத் தலைவர்கள் இல்லையோ என்றும் எழும் கேள்விகளின் பின்னுள்ள நியாயத்தைப் புறக்கணிக்க முடியவில்லை. ஒருவேளை, இவை ஜெயலலிதாவின் சம்மதத்துடனேயே எடுக்கப்பட்ட முடிவுகள் அல்லது அவரது சகாக்கள் கூடி எடுத்த முடிவுகள் என்றால், இவை போன்ற கொள்கை முடிவுகள் அமைச்சரவைக் கூட்டங்களின் தொடர்ச்சியாக அல்லவா வெளியிடப்பட வேண்டும்?

எப்படியிருந்தாலும் இப்படியான கொள்கை முடிவுகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்போது, அதை மாநில மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய தார்மிகக் கடமை அரசுக்கு உண்டு. இந்த முடிவுகள் எந்த அடிப்படையில், எந்தச் சூழலில் எடுக்கப்பட்டன என்பதைத் தமிழக அரசு விளக்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x