Last Updated : 29 Nov, 2016 09:55 AM

 

Published : 29 Nov 2016 09:55 AM
Last Updated : 29 Nov 2016 09:55 AM

காந்தியைப் பொறாமைப்பட வைத்த தொண்டர்!

"தாழ்த்தப்பட்ட, ஆதிவாசி மக்களுக்கு பாபா சேவை செய்ததுபோல என்னால்கூடச் செய்ய முடியவில்லை. பொறாமையாக இருக்கிறது" என்று நெகிழ்ந்தார் காந்தி. அத்தகைய பெருமைக்குச் சொந்தக்காரர் அம்ரித்லால் விட்டல்தாஸ் தக்கர் பாபா. ஹரிஜன சேவா சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றியவர். அவரது பிறந்த நாள் இன்று (29.11.1869).

குஜராத்தில் பிறந்த பாபா, ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர். 1890-லேயே கட்டிடப் பொறியியல் பட்டதாரி. தொடக்கத்தில் ரயில்வே. பின்பு, வாத்வான் மாவட்டத்தின் தலைமைப் பொறியாளர். அங்கே அவரது நேர்மைக்குச் சோதனை ஏற்பட்டது. பணி விலகி, போர்பந்தர் வந்தார். அங்கு மருத்துவர் ஹரிகிருஷ்ண தேவாவைச் சந்தித்தார். இருவருக்கும் நேர்மை, கடின உழைப்பு, எளிமையான பழக்க வழக்கங்கள், வறியோருக்கு உதவுதல் ஆகிய பொதுப்பண்புகள் இருந்தன. அவை அவர்களை நண்பர்கள் ஆக்கின.

மாறிய பாபாவின் வாழ்க்கை

டாக்டர் ஹரிகிருஷ்ணா தேவா, சாங்கிலி மாவட்டத்தின் தலைமை மருத்துவ அலுவலர். அவரது உதவியால் பாபா, சாங்கிலி மாவட்ட தலைமைப் பொறியாளரானார். இக்கால கட்டத்தில் கோகலே, டி.கே.கார்வே ஆகியோரைச் சந்தித்தார் பாபா. அது அவரது வாழ்வையே மாற்றியது. புணே நகரில் இந்தியப் பெண்கள் பல்கலைக்கழகத்தை நிறுவிய சமூக சீர்திருத்தவாதி டி.கே.கார்வே, பாபா மீது தாக்கம் செலுத்தினார். பாபாவின் தொண்டு வாழ்க்கையைத் தொடங்கி வைத்தார் கோகலே. அவர்களது தொடர்பின் விளைவால், தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த விதவைகளுக்கான விடுதியை 'ஹின்ஜின் பாதார்க்' நகரில் தொடங்கினார் பாபா.

இதற்கிடையே, ஆங்கில ஆட்சியாளர்களுடன் கருத்துமோதல் ஏற்பட்டது. தலைமைப் பொறியாளர் பணியைத் தூக்கி எறிந்தார். பம்பாய் நகராட்சியில் அலுவலர் ஆனார் பாபா. பம்பாய் நகரத்தில் இருந்து ரயில் பெட்டிகளில் கொண்டுவரப்படும் குப்பைகளை, செம்பூர் எனுமிடத்தில் குழிகளில் முறையாகக் கொட்டி, ரயில் பெட்டிகளைச் சுத்தப்படுத்துவதை மேற்பார்வையிடுவதே அவரது பணி. தூய்மைப் பணியாளர்களுடன் நெருங்கிப் பழகினார் அவர்.

கொடுமையின் வடிவம் தஸ்தூரி

கிழிந்துபோன தகரங்கள், முரட்டுச்சணல் துணிகள், மூங்கில் தடிகளைக் கொண்டு வேயப்பட்ட குடிசைகளில் தங்கியிருந்தார்கள் அவர்கள். ஒவ்வொரு குடிசையிலும் நான்கைந்து பேர். பாபாவும் அந்தப் பகுதியில் குடியேறினார். அவர்களின் வாழ்க்கையை மாற்ற முயன்றார். அவர்கள் கிராமங்களில் சுகாதாரமான வாழ்க்கை வாழ்ந்தவர்கள், 1900-ல் ஏற்பட்ட வறட்சியால் மும்பைக்குப் புலம்பெயர்ந்தவர்கள். பிழைப்புக்கு இந்தப் பணி செய்கிறார்கள் என்பதை அறிந்தார். கிராமத்தில் சுத்தமாக இருந்தவர்கள், ஏன் இங்கே அதைக் கைவிட்டார்கள் என்று ஆராய்ந்தார் அவர். மும்பையில் தாழ்த்தப்பட்ட மக்கள் தஸ்தூரி எனும் முன்பணம் செலுத்தினால்தான் இந்தத் துப்புரவு பணி கிடைக்கும் என்பதை அவர் அறிந்தார். தீண்டாமைக் கொடுமையின் வடிவம்தான் இது. இதனால் அவர்கள் வட்டிக்குப் பணம் வாங்கினார்கள். இறுதிநாள் வரையில் கடனாளியாகவே வாழ்ந்தனர். அதனால், அவர்களால் சுகாதாரமாக வாழ முடியவில்லை என்பதை அவர் புரிந்துகொண்டார்.

இதற்கு எதிராகத் தன்னுடைய இரண்டாவது குருவான ஷிண்டேயுடன் சேர்ந்து போராடினார் பாபா. தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பள்ளிகளையும், விடுதிகளையும் நிறுவியவர் ஷிண்டே. 'தாழ்த்தப்பட்ட மக்கள் சங்கத்தை' ஜஸ்டிஸ் சர்.நாராயண் கணேஷ் சந்த்ரவார்கர் தலைமையில் ஏற்படுத்தியவர் அவர்.

மொட்டையடித்து அவமானம்

பாபாவிடம், 250 தொழிலாளர்கள் வேலை பார்த்தனர். அவர்களுக்காக ஒரு பள்ளி தொடங்கி னார் ஷிண்டே. "ஷிண்டே, என்னைவிடச் சின்னவர். அவரைப் பார்த்தே தொண்டு செய்யக் கற்றுக் கொண்டேன். என் முதல் குரு கோகலே. இரண்டாவது குரு ஷிண்டே" என்றார் பாபா. புணேவில் சேவா சதன் என்ற அமைப்பை உருவாக்கிய தியோடர் தாதாவை மூன்றாவது குருவாகக் கருதினார் பாபா.

1912-ல் 'ஆர்ய சகோதரத்துவம்'எனும் அமைப்பு சமபந்தி போஜனத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. அக்காலத்தில் கிராமப் பஞ்சாயத்துகள் சாதிகளை ஒழுங்குபடுத்தின. அடுத்த சாதியினருடன், குறிப்பாக தாழ்த்தப்பட்டோருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடு வது மன்னிக்க முடியாத குற்றமாக இருந்த காலம் அது. துணிச்சலாகச் சமபந்தியில் பங்கேற்றார் பாபா. பஞ்சாயத்து அவருக்கு ரூ.500 அபராதம் விதித்தது. மொட்டையடித்து அவமானப்படுத்தியது. இதனால் மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டது அவருக்கு. ஆனாலும், அந்த விருந்தில் கலந்துகொண்டதற்காகத் துளியும் வருந்தவில்லை அவர்.

1914-ல் நகராட்சிப் பணியைத் தலை முழு கினார். முழு நேர சமூகப் பணியில் இறங்கினார். கோகலேயின் 'இந்திய ஊழியர்கள் சங்க'த்தில் தன்னை இணைத்துக்கொண்டார். சங்க அலுவலகமே அவரது இருப்பிடம். குடும்ப உறவுகள் அறுந்துவிட்டன. 34 ஆண்டுகள். இறுதிமூச்சு வரை அப்படியேதான் இருந்தார். மக்கள் சேவைக்குத் தன்னை அர்ப்பணித்தார்.

காந்தி - இர்வின் ஒப்பந்தத்துக்குப் பிறகு 1931-ல் வட்ட மேஜை மாநாடு லண்டனில் நடந்தது. காங்கிரஸின் தனி நபர் பிரதிநிதியாக காந்தி சென்றார். பாபாவை வற்புறுத்தி வரவழைத்தார் காந்தி. அவரிடம் ஹரிஜன சேவா சங்கப் பொறுப்புகளை ஒப்படைத்தார். "ஹரிஜனங்களுக்குச் செய்யும் சேவைதான் நாட்டைப் பரிசுத்தமாக்கும், உயிர்ப்பிக்கும் ஆழமான ஆன்மிகத் தொண்டு. இதுவரை தீண்டாமை பாராட்டிய ஒவ்வொரு இந்துவும் இவர்களுக்குத் தொண்டு செய்து பிராயச்சித்தம் தேட வேண்டும். பாபா, உங்களால்தான் இந்த வேலையைத் தொடங்கி வைக்க முடியும்" என்றார் காந்தி. அவரது சொல்லை சிரமேற்கொண்டார் பாபா.

காந்திஜியின் ஹரிஜன சேவா சங்கத்தின் செயலாளராக பாபா 1932-ல் பொறுப்பேற்றார். நாட்டின் பல பாகங்களுக்கும் பயணித்தார். அங்குள்ள தீண்டாமைக் கொடுமையின் தன்மையைப் பொறுத்து, தீண்டாமைக்கு எதிரான முகாம்களை நடத்தினார். அது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. சில மாதங்களுக்குள்ளாகவே எல்லா மாகாணங்களிலும் ஹரிஜன சேவக் சங்கத்தின் கிளைகளைத் தோற்றுவித்தார். அர்ப்பணிப்பான தொண்டர்கள் அதிகமாய்க் கிடைத்தார்கள்.

பொறாமைப்பட்ட காந்தி

இக்கால கட்டத்தில்தான், 1933 மே 8-ல் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வை எழுப்புவதற் காக உண்ணாவிரதம் இருந்தார் காந்தி. "ஹரிஜனங் களுக்காகத் தொண்டு செய்ய முன்வந்திருப்போரின் ஆத்மசக்திக்காகவும் உண்மையான மனத்தோடு இப்பிரச்சினையை அணுகுவதற்கு ஆற்றல் பெறவுமே இந்த உண்ணாவிரதம்" என்றார் காந்தி. தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக உண்ணாவிரதம் மட்டும் போதாது. நாடு தழுவிய சுற்றுப்பயணத்தை காந்தி மேற்கொள்ள வேண்டும் என்றார் பாபா. பயணத்திட்டமும் வகுத்தார்.

காந்தியின் இந்த 9 மாத காலப் பயணம் வார்தாவில் தொடங்கி காசியில் முடிந்தது. அப்போதுதான் பாபாவைப் பார்த்து பொறாமையாக இருக்கிறது' என்று நெகிழ்ந்தார் காந்தி. தாழ்த்தப்பட்ட மாணவர் களுக்காகத் தொழிற்பயிற்சி நிலையத்துக்காக காந்தி 1946-ல் சென்னை தி.நகரில் அடிக்கல் நாட்டினார். அதற்கு 'தக்கர் பாபா வித்யாலயா' என்று பெயர் சூட்டி பாபாவைக் கெளரவப்படுத்தினார்.

தீண்டாமை ஒழிப்புக்கும் எளிய மக்களுக்குச் சேவை புரியவும் வாழ்நாளை அர்ப்பணித்த, தக்கர் பாபா 1951 ஜனவரி 19-ல் 82 வயதில் இயற்கையோடு கலந்தார்.

- தி.சுபாஷினி, தொடர்புக்கு : subashinitirumalai@gmail.com

» இன்று தக்கர் பாபா பிறந்த தினம் «

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x