Last Updated : 21 Nov, 2016 10:03 AM

 

Published : 21 Nov 2016 10:03 AM
Last Updated : 21 Nov 2016 10:03 AM

அறிவோம் நம் மொழியை: ஒரு சொல்லில் பல செய்திகள்

சென்ற பத்தியில் ‘மற்றும்’ என்னும் சொல் பற்றி எழுதும்போது ‘அமைச்சரும் அதிகாரிகளும்’, ‘ராமனும் முத்துவும் மங்கையும் சபீதாவும் ராஜாவும்’ ஆகிய உதாரணங்களை உம்மைத் தொகை எனக் குறிப்பிட்டிருந்தேன். இவை எண்ணும்மை என்று பேராசிரியர் பா.மதிவாணன் சுட்டிக்காட்டுகிறார். ‘உம்’ என்பது வெளிப்படையாக வந்தால் எண்ணும்மை. வெளிப்படையாக வராமல் (புத்தகங்கள், மேசைகள், எழுதுபொருட்கள்…; பூரி கிழங்கு, இட்லி சட்னி) இருந்தால் ‘உம்மைத் தொகை’(தொக்கி நிற்பது) என்று அவர் தெளிவுபடுத்தினார். அவருக்கு நன்றி.

‘ஆகியவை, போன்றவை என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் வேறுபாடு உண்டு’ என்று அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த சா.க.மூர்த்தி குறிப்பிட்டிருக்கிறார்.

‘ ‘‘ஆகியவை’ என்பது குறிப்பிட்டுச் சொன்ன பொருட்களை மட்டுமே குறிப்பிடும். உதாரணம்: ‘வெண்டைக்காய், கேரட், முட்டைகோஸ் ஆகியவற்றைக் கொடு’. ‘போன்ற’ என்பது குறிப்பிடப்பட்ட காய்கள் இல்லாவிடில், அதுபோன்ற வேறு காய்களைக் கொடு என்பதாகும். இரண்டுக்கும் நுணுக்கமான, சிறிய வேறுபாடு உள்ளது” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மொழியின் பயன்பாட்டில் சிறிய அம்சங்களும் மிகவும் முக்கியமானவை. மொழியின் நுட்பங்களை அறியவும் அவற்றைச் சரியாகப் பயன்படுத்தவும் இதுபோன்ற தகவல்கள் பெரிதும் துணைபுரியும். ‘போன்றவை’, ‘ஆகியவை’ ஆகிய சொற்களுக்கிடையேயான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டிய மூர்த்திக்கு நன்றி.

தமிழில் பல விஷயங்களைச் சிக்கனமாகச் சொல்லிவிட முடியும் என்று போன வாரம் இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருந்தேன். விஷயம் ‘சிக்கன’த்தைப் பற்றியது என்றாலும், பல்வேறு உதாரணங்களுடன் ‘விரிவா’கப் பேச வேண்டும். இதை இங்கே சற்று ஊன்றிப் பார்ப்போம்.

‘வந்தான்’ என்னும் சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். இது கடந்த காலம் என்பது தெளிவாகிறது. வந்தவர் ஒருவர்தான் என்றும், அவர் ஆண் என்பதும் தெரிகிறது. ஒரே ஒரு சொல் எத்தனை தகவல்களைத் தெரிவிக்கிறது என்று பாருங்கள். அதுபோலவே தந்தேன், வருகிறாய், நடக்கின்றன என்று பல சொற்கள் தம்முள் ஒன்றுக்கும் மேற்பட்ட செய்திகளைப் புதைத்துவைத்திருக்கின்றன. எழுவாயே இல்லாமல் இந்தச் சொற்கள் குழப்பமில்லாமல் பொருள் தருகின்றன. தமிழில் தோன்றா எழுவாய் எனப்படும் வசதி இதைச் சாத்தியமாக்குகிறது.

இப்படிப் பல வசதிகள் தமிழில் உள்ளன. ஆனால், தமிழில் எழுதும் பலர் தமிழில் சிக்கனமாக எழுத முடியவில்லை என்று குறைபட்டுக்கொள்கிறார்கள். குறிப்பாக, ஆங்கிலத்துடன் ஒப்பிட்டு இதைச் சொல்கிறார்கள். ஆங்கிலத்தில் தோன்றா எழுவாய் இல்லை. அதில் எழுவாயைக் குறிப்பிட்டுவிட்டு, அது தொடர்பான பல்வேறு சங்கதிகளையும் அடுத்தடுத்து அடுக்கிக்கொண்டே போகும் வசதி இருக்கிறது. இடையில் வேறொரு பெயர்ச்சொல் வரும்போது, அந்தப் பெயர்ச்சொல் குறித்தும் சில செய்திகளை அதே வாக்கியத்தில் அமைப்பதுண்டு. இப்படி சங்கிலித் தொடர் போன்ற ஆங்கில வாக்கிய அமைப்பைக் கண்டு பிரமிப்பவர்களில் சிலர் தமிழில் இப்படி இல்லையே என்று நினைக்கிறார்கள்.

ஒவ்வொரு மொழிக்கும் சில சிறப்பம்சங்கள் உண்டு, பலவீனங்களும்தான். நமது மொழியில் இருக்கும் சிறப்பம்சங்களை அறிந்துகொண்டு, அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால் அதன் திறனை அதிகரிக்க முடியும். சிக்கனத்தில் தமிழின் திறனை மேலும் சில உதாரணங்களுடன் பார்ப்போம்.

(மேலும் அறிவோம்…)

தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x