Published : 03 Nov 2016 09:00 AM
Last Updated : 03 Nov 2016 09:00 AM

இயற்கை வேளாண்மை வெற்றிக்கு வழியா?

எதிர்காலத்தில் இயற்கை வேளாண்மை இந்தியாவில் முக்கிய இடத்தைப் பிடிக்கக்கூடும்.

ரசாயனங்களால் உயிரிழந்த நிலம் மீண்டும் இயற்கையான சத்துகளைப் பெற உதவுகிறது. தண்ணீர் வளத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. நுகர்வோர்களுக்குப் பாதுகாப்பான உணவை அளிக்கிறது. இந்த முறையாவது நல்ல மகசூல் கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு பசுஞ்சாணத்தையும் எருவையும் தன்னுடைய பண்ணை நிலத்தில் கலந்து தயார்செய்துகொண்டிருக்கிறார், ஹைதராபாத் புறநகரில் வசிக்கும் ரேஷ்மா. அவர் ஒரு சிறு விவசாயி. ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துவதைக் கைவிட்டு, பாரம்பரிய சாகுபடி முறைகளை நாடத் தொடங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான இயற்கை விவசாயிகளில் அவரும் ஒருவர்.

இயற்கை வேளாண் முறையைக் கடைப் பிடிக்கத் தொடங்கியதும் முதல் ஆண்டில் ரேஷ்மாவின் நிலத்தில் விளைச்சல் பாதியாகக் குறைந்தது. நிகர வருமானம் முன்னர் கிடைத்ததைவிடப் பத்தில் ஒரு பங்காகச் சுருங்கியது. இரண்டாவது ஆண்டில் விளைச்சல் சற்றே உயர்ந்தது. வருமானமும் முன்னர் கிடைத்துவந்ததில் மூன்றில் ஒரு பங்காக உயர்ந்தது. அவருடைய விளைபொருட்கள் ‘இயற்கையில் விளைந்தவை’ என்ற சான்றிதழைப் பெறாததால், அதற்கான பயனும் கிட்டவில்லை. இயற்கைச் சாகுபடிக்கான இடுபொருள் செலவு குறைவுதான் என்றாலும், ரேஷ்மா போன்ற புதியவர்களுக்குத் தொடர்ந்த வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.

உயிர்பெறும் நிலங்கள்

இயற்கை வேளாண்மை ஏராளமான சாத்தியங்களைக் கொண்டது. இதுவரை கடைப்பிடித்துவந்த தீங்கான சாகுபடி முறைகளால், நிலத்துக்கு ஏற்பட்ட சேதத்தைக் குறைக்க உதவுகிறது. இடுபொருள் செலவுகளைக் கணிசமாக மிச்சப்படுத்துகிறது. விளையும் பொருள் ரசாயனக் கலப்பற்ற - உடலுக்குத் தீங்கு விளைவிக்காத உணவுப் பொருள் என்பதால், விலை அதிகமாக இருந்தாலும் வாங்குவதற்கு மக்கள் தயார். ரசாயனங்களால் உயிரிழந்த நிலம் மீண்டும் இயற்கையான சத்துகளைப் பெற உதவுகிறது. தண்ணீர் வளத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை ஊக்கு விக்கிறது. நுகர்வோர்களுக்குப் பாதுகாப்பான உணவை அளிக்கிறது.

எதிர்காலத்தில் இயற்கை வேளாண்மை இந்தியாவில் முக்கிய இடத்தைப் பிடிக்கக்கூடும் என்றாலும், மொத்த விவசாயிகள் எண்ணிக்கையில் 80% ஆக இருக்கும் சிறு விவசாயிகளுக்கு இது கட்டுப்படியாகக்கூடிய சாகுபடி முறையாக இருக்காது. எனவே, இயற்கை வேளாண் சாகுபடி முறைக்குச் சிறு விவசாயிகள் மாறுவதால் கொஞ்ச காலத்துக்கு நன்மைகள் குறைவாகவே இருக்கும்.

வருமானம் அதிகரிக்குமா?

இயற்கை வேளாண்மையில், இடுபொருள் செலவு குறைவதும், இயற்கையாக விளைந்த வேளாண் பொருட்களுக்கு அதிக விலை வைத்தால், வருமானம் பெருகும் என்கின்றனர். உயிரி உரங்கள், மக்கிய எரு இரண்டும் ரசாயன உரங்களைவிட விலை குறைவு என்றாலும், வழக்கமான சாகுபடி முறையைக் கைவிட்டு இயற்கை வேளாண்மைச் சாகுபடி முறைக்கு மாறும்போது ஏற்படுவதால் உண்மையான செலவுகளையும், விளைச்சல் குறையக் கூடிய ஆபத்துகளையும் கணக்கில்கொள்வதே இல்லை.

இயற்கை வேளாண்மைக்கு மாறியதும் முதல் சில ஆண்டுகளுக்கு விளைச்சல் நிச்சயம் குறையும். இடுபொருள் செலவு குறைந்தாலும் விளைச்சல் பாதிக்கப்படுவதால் வருவாய் குறையும். ரசாயன உரங்களால் நிலத்தில் ஏறிய நச்சுத்தன்மையைப் போக்கவே இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரை பிடிக்கும். அத்துடன் இயற்கை வேளாண்மையால் விளைந்த பொருட்கள் என்ற சான்றிதழைப் பெற ஆண்டுதோறும் சிறு தொகையைச் செலவழிக்க வேண்டும்.

அரசின் உதவி அவசியம்

முதலில் செய்த முதலீட்டைத் திரும்பப் பெறுவதற்குக்கூட பெருநகரங்களில் உள்ள சந்தையிலோ, ஏற்றுமதிச் சந்தையிலோதான் விற்க வேண்டும். அப்படி விற்பதற்குப் பெரிய நிறுவனங்களுடன் தொடர் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். அதாவது, இயற்கை வேளாண் பொருட்களுக்கு அதிக விலைக்கு விற்பது சிறு விவசாயிகளுக்குச் சாத்தியமே இல்லை. சிறு விவசாயிகளுக்கு தொடக்க காலத்தில் அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்றால், சிறு விவசாயிகள் கூட்டு சேர்ந்து சாகுபடியையும் சந்தைப்படுத்தலையும் மேற்கொண்டால்தான் சாத்தியம். அப்போதுதான் செலவுகளையும் கணிசமாகக் குறைக்க முடியும். ஆரம்ப கட்டத்தில் சிறு விவசாயிகளுக்கு அரசு நிதியுதவி செய்வது அவசியம். அத்துடன் சந்தைப்படுத்தவும் உதவ வேண்டும்.

விவசாயிகள் குழுவாக விண்ணப்பித்தால் சான்று வழங்கும் முறையை அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது வரவேற்கப் பட வேண்டியது. இதே ஒற்றுமையை அவர்கள் பிறவற்றுக்கும் கடைப்பிடிக்க இது நல்ல முன்னுதாரணமாக இருக்கும். உலக அளவிலான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவும், தங்களுடைய விளைபொருட்களுக்கு நல்ல விலையை பேரம் பேசிப் பெறவும் வழியேற்பட வேண்டும்.

குழப்பத்தில் நுகர்வோர்

இயற்கை வேளாண் துறை புதிது என்பதாலும் வரையறுக்கப்படாமல் இருப்பதாலும் விவசாயிகள் மட்டுமல்ல நுகர்வோரும் குழப்பத்தில் இருக்கின்றனர். எந்தப் பொருள் இயற்கையாக விளைந்தது, எது சிறந்தது என்று புரிவதில்லை. இயற்கை உரங்கள் கிடைக்காததால் விவசாயிகள் தொழு உரம், மக்கிய உரம் என்று தங்களுக்குத் தெரிந்த ஏற்கெனவே அறிமுகமான நாட்டு உரங்களைப் பயன்படுத்துகின்றனர். அவற்றில் சில வேளைகளில் நச்சு ரசாயனங்களும் கன உலோகங்களும் கலந்துகிடக்கக்கூடும்.

முழு அளவு இயற்கை வேளாண்மைக்குப் போகாமலேயே பாதுகாப்பான வேளாண் சாகுபடி முறைகளை நாம் கடைப்பிடிக்க முடியும் அதன் வாயிலாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதையும் தவிர்க்க முடியும். சூழலுக்கு உகந்த உணவு என்ற கருத்தை விவசாயிகளிடத்தில் விதைக்க முடியும். பொது சுகாதார அமைப்புகள் பரிந்துரைக்கும் அளவில் குறிப்பிட்ட வேளாண் ரசாயனங்களைக் கையாளும் திறனை அவர்களுக்குக் கற்றுத்தர முடியும். இயற்கை வேளாண்மையைக் கடைப்பிடிக்கும் விவசாயிகளுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு அரசு நிதியுதவி செய்வதுடன் சந்தைப்படுத்தவும் உதவ வேண்டும்.

நம்முடைய விவசாயிகள் கவலைகள் குறைந்து நல்ல லாபத்தை ஈட்ட வேண்டும். அதே வேளையில், சுற்றுச்சூழலையும் நுகர்வோரையும் காக்கும் பொறுப்பை நாம் ஏற்க வேண்டும். புதிய தீர்வுகளை எப்படிக் கொண்டுவருகிறோம், எப்போது அறிமுகப்படுத்துகிறோம் என்பதைச் சிந்தித்துச் செயல்படுத்த வேண்டும். அப்படிச் செயல்பட்டால்தான் வறுமை, பசி, ஊட்டச்சத்துக் குறைவு இல்லாத எதிர்காலத்தை நம்மால் படைக்க முடியும்.

(கட்டுரையாளர் சிறு, குறு விவசாயிகளுக்கு உதவிகளைச் செய்பவர். இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுவருகிறார்.)

தமிழில் சுருக்கமாக: சாரி, © ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x