

இந்தோனேசியாவின் பாலி நகரில் நவம்பர் 15, 16 தேதிகளில் நடக்கும் ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில், 2023ஆம் ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்கவிருக்கிறது. இந்தோனேசியாவிடம் இருந்து இந்தியாவுக்குக் கைமாறும் தலைமைப் பொறுப்பு, டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு வருகிறது. ஜி20 தலைமையின்போது, நாடு முழுவதும் பல இடங்களில் 32 வெவ்வேறு துறைகளில் சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்தவிருக்கிறது; 2023 நவம்பரில் புது டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாடு, இந்தியாவால் நடத்தப்படும் மிக உயரிய சர்வதேசக் கூட்டங்களில் ஒன்றாக அமையும்.
உலக ஒட்டுமொத்த உற்பத்தியில் 80%, சர்வதேச வர்த்தகத்தில் 59-77%, உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு, உலக நிலப்பரப்பில் 60% ஆகிய அளவுகோல்களுடன் தொழில்துறையில் வளர்ந்த, வளர்ந்துவரும் உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளை உள்ளடக்கியது இந்த ஜி20 கூட்டமைப்பு. இந்தியா, சீனா, அமெரிக்கா, கனடா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, மெக்சிகோ, தென் கொரியா, இந்தோனேசியா, ஜப்பான், துருக்கி, சவூதி அரேபியா ஆகிய 19 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் ஜி20 கூட்டமைப்பின் உறுப்பினர்களாகும். ஜி20 கூட்டமைப்பு நிறுவப்பட்ட 1999 இல் அதன் உறுப்பினராக இணைந்த இந்தியா, முதல் முறையாக அதன் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருப்பது உலக அரசியலில் அதன் இடம் வலுப்பெறுவதை உணர்த்துகிறது. ஜி20 மாநாடு 2021ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் நடைபெறவிருந்தது. ஆனால், 75ஆவது சுதந்திர தினத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அதை 2022-க்கு மாற்றும்படி இந்தியா விடுத்திருந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜி20 கூட்டமைப்பின் தலைமையை இந்தியா ஏற்பது நம் நாட்டுக்குக் கிடைத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு. ‘உலகம் ஒரே குடும்பம்’ என்கிற இந்தியாவின் பாரம்பரியம், நம்பிக்கை, சிந்தனையை ஜி20-க்கான இலச்சினையில் உள்ள தாமரை குறிக்கிறது. அதன் 7 இதழ்கள் 7 கண்டங்களையும், 7 ஸ்வரங்களையும் குறிக்கின்றன. இது உலகை ஒன்றிணைப்பதை உணர்த்துகின்றது. சர்வதேச அளவில் நெருக்கடி, குழப்பம் நீடிக்கும் நேரத்தில் ஜி20 தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம், ஊழல் ஒழிப்பு, வணிகத்துக்கு ஏற்ற சூழல், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் இந்தியாவின் அனுபவங்கள், அதன் ஜி20 தலைமைப் பதவிக் காலத்தில் உலகைப் புதிய பாதையில் பயணிக்க வைக்கும். அந்த வகையில், ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பதைக் கருப்பொருளாகத் தேர்வுசெய்துள்ளோம்’ என ஜி20-க்கான இலச்சினை வெளியீட்டின்போது பிரதமர் மோடி பேசினார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், ஐரோப்பிய எரிவாயு நெருக்கடி, உலக நாடுகளில் வீங்கும் பணவீக்கம், பொருளாதார மந்தநிலைக்கான அறிகுறிகள் எனப் பல்வேறு நெருக்கடிகளை உலகம் எதிர்கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஜி20-க்கான இந்தியாவின் தலைமை முக்கியத்துவம் வாய்ந்தது எனினும் சவால்மிக்கதாகவே இருக்கும்.